வரலாறு

சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்

க.திருநாவுக்கரசு

சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்

கடந்த கால வரலாற்றின் மீது யாராலும் தீர்ப்பு எழுத முடியாது. சிலர் விமர்சனம் என்ற பெயரால் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.கழகம் ஆகிய திராவிடர் இயக்கங்களின் மீது ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தீர்வென்றும் நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையான இயக்கங்களும் அவற்றின் கொள்கைகளும் காலத்தின் தேவை கருதி உருவாகின்றன. இந்த அடிப்படையில்தான் அரசியல் இயக்கமாக நீதிக்கட்சியும், சமுதாய இயக்கமாகச் சுயமரியாதை இயக்கமும் தோற்றங் கண்டன. தற்போது அரசியல் இயக்கமாக தி.மு.கழகமும் சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக திராவிடர் கழகமும், திகழ்வதைப் போலவே, நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் அரசியல் மற்றும் சமுதாயக் களத்தில் நின்று பணியாற்றின.

சுயமரியாதை இயக்கம் சமுதாயத்தின் அத்துணை அவலங்களையும் மறு விசாரணை செய்யத் தொடங்கியது. அதனால், சமுதாயத்தின் எல்லாத் தட்டு மக்களின் பார்வையும் அவ்வியக்கத்தின் மீது விழுந்தது. அது நிகழ்த்திய கலாச்சாரப் புரட்சி இளைஞர்களை ஈர்த்தது. சமுதாய நோக்குடன் சிந்திப்பவர்களைக் கவர்ந்தது. நாவீறு மிக்க சொல்லின் செல்வர்கள் இயக்கத்தில் பங்கு கொண்டு சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பினர். அத்தகைய சொல்லேருழவர்களில் ஒருவர்தான் ப.ஜீவானந்தம்!

இவரைக் குறித்து கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதுகிறபோது,

“குருதியெலாம் புரட்சி மணம் கமழுகின்ற வரிப்புலி, கொள்கையிலே உறுதி கொண்ட தமிழ்க் கவி’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தமிழக மக்களால் ‘ஜீவா’ என்று அழைக்கப்பட்டார். சுமார் நாற்பதாண்டுக் காலம் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு அளப்பரிய தியாகங்களைச் செய்தார். தமது அய்ம்பத்தாறாண்டு வாழ்நாளில் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்.

கரிய நிறமும், தோற்றப் பொலிவும், உறுதியும், நிமிர்ந்த நடையும் ஆற்றொழுக்குப் பேச்சும் கொண்ட ஜீவா, நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி என்னும் சிற்றூரில் பட்டம் பிள்ளைக்கும் உமையம்மாளுக்கும் மகனாக 21.5.1907 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் மூக்காண்டி என்பதாகும். எளிய குடும்பத்தில் பிறந்த ஜீவா பள்ளியிறுதிவரை தமது கல்வியினைத் தொடர வாய்ப்பில்லை. ஆனால், அவர் தாமாகவே கற்று அவர் தமது ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

நாவலர், ந.மு.வேங்கடசாமி நாட்டார். மறைமலையடிகள், திரு.வி.க. தி.மு.கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, பெருந்தலைவர் காமராசர் போன்றோர் கல்லூரிகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ பயின்றவர்கள் இல்லை. ஆனால், அவர்களது அறிவு, ஆற்றல், வினைத் தூய்மை, செயற்கரிய செய்யும் திறமை, வினைத் திட்பம், எப்போதும் கற்க வேண்டும் என்கிற வேள்வி அவர்களை நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக ஆசான்களாக ஆக்கின. இவ்வரிசையில் ஜீவாவும் இடம் பெறுகிறார்.

ஜீவாவின் வாழ்க்கையை ஆராய்கிறபோது, அவர் சிறு வயது முதற்கொண்டே பொதுப்பணி ஆர்வலராகவே காட்சியளிக்கிறார். ஒரு கிளர்ச்சிக்காரராகவே அவர் தோன்றுகிறார். நாட்டின் சமுதாய, அரசியல் பாதிப்புகள் தொடர்ந்து அவரைச் சந்திக்க வைக்கின்றன. எதையாவது செய்து மாற்றம் காணவேண்டும் என்கிற விழைவு அவரிடம் இறுதிவரை இருந்ததை அறிய முடிகிறது. ஜீவா தமது பொது வாழ்க்கையை ஒரு காந்தியவாதியாகவே தொடங்குகிறார்.

தொடரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button