தமிழ்நாட்டு வாக்காளர்களாகும் பீகாரிகள்
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வினாக்களும் விளக்கமும்

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்புத் தீவிர திருத்தம் மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“தொடர்ந்து வாக்களிக்கிறேன், என்னிடம் வாக்காளர் அட்டையும் இருக்கிறது. பின் எதற்காக இந்தப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்?” என்ற எளிய மக்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையத்தால் என்ன பதில் சொல்ல முடியும்? அரசும் ஆணையமும் மக்களை அலைக்கழிப்பதை எப்படி ஏற்க முடியும்?
சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வினாக்களும் விடைகளும் சென்ற இதழ் தொடர்ச்சி..
9. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்ட பீகார் மாநில அனுபவம் என்ன?
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதில், சிறப்புத் தீவிர திருத்தம் அறிவிக்கப்பட்ட ஜூன் 24 அன்று 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிகள் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்ட போது, 65 லட்சம் பேர் நீக்கப்பட்டு 7.24 கோடி வாக்காளர்கள்தான் இருக்கின்றனர் என்றும் கூறியது.
பின்னர் “வரைவுப் பட்டியலில் இருந்து தகுதியற்ற வாக்காளர்கள் என 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தகுதியான வாக்காளர்கள் (படிவம் 6 பெற்று) 21.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்” என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள்: 1, உயிரிழந்தவர்கள், 2. வீடுகளுக்குச் சென்றபோது இல்லாதவர்கள் 3, இடம்பெயர்ந்து சென்றவர்கள் 4, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாக்காளர்கள் ஆகியோரே நீக்கப்பட்டனர் என்று விளக்கம் அளித்தது. இதில் தகுதியற்ற வாக்காளர்கள் என 3.66 லட்சம் பேரை நீக்கியது ஏன்? தகுதியின்மைக்கான காரணங்கள் எவை என்று தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
யார் தகுதியற்றவர்? வெளிநாட்டவராக இருந்தாலோ, “மனநிலை சரியில்லாதவர்” என நீதிமன்றம் அறிவித்திருந்தாலோ, ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டுத் தண்டிக்கப்பட்டிருந்தாலோ வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்கிறது சட்டம். இந்த அடிப்படையில்தான் தகுதியற்ற வாக்காளர்கள் என தீர்மானிக்கப்பட்டனரா என்று தேர்தல் ஆணையம் எதுவும் கூறவில்லை. நீதிமன்றத்திலும் இது குறித்துப் பதிலளிக்கவில்லை.
பீகாரில் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் (SIR) எப்படி மேற்கொள்ளப்பட்டது? அதன் அனுபவம் என்ன? என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பிக் கொடுப்பதில் தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. அது பற்றியும் எதுவும் விளக்கவில்லை.
வாக்குத் திருட்டு நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறைய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். அதனை காதுகொடுத்துக் கேட்பதற்குக்கூட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. ஆனால், அந்தக் கேள்விகளுக்கு பாஜகவினரும் சமூக ஊடகங்களில் உள்ள சங்கிகளும் பதிலளித்துக் கொண்டிருக்கின்றனர். ராகுல் காந்தியோ உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்ட வாக்காளர்களுடன் தேநீர் குடித்தார். அவர்களுடன் கலந்துரையாடினார். இதைப்பற்றி எல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு ஜனநாயக விரோதமானது.
10. சட்டவிரோத குடியேறிகள், வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை நீக்குவதுதான் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின் (SIR) நோக்கம் என்று கூறுவது உண்மையா?
பீகாரில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டபோது, வாக்காளர் பட்டியலில் இருந்து வெளிநாட்டினர் எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்தப் புள்ளிவிவரமும் வெளியிடவில்லை. ஆனால் பீகார் தேர்தல் பரப்புரையில், சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் பாஜகவின் முக்கிய பேசுபொருளாக இருந்தது. பிரதமர் மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனைத்து பரப்புரைக் கூட்டங்களிலும் இது பற்றிப் பேசினர்.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியினர் “வாக்காளர் அதிகார நடைபயணம்” மேற்கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளும் பங்கேற்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இந்த வாக்காளர் அதிகார நடைபயணத்தை விமர்சித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “சட்ட விரோத குடியேறிகளை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா? வேண்டாமா? என கூட்டத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.
“புத்தரின் பூமியான நாளந்தாவில் இருந்து சொல்கிறேன். பீகாரில் ஊடுருவி இருக்கும் சட்ட விரோத குடியேறிகள், நமது இளைஞர்களின் வேலைகளையும், ஏழைகளின் உணவையும் பறித்துக் கொள்கிறார்கள். தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் கண்டறிந்து வெளியேற்றுவோம். ஆனால் ராகுல் காந்தியும் லாலு பிரசாத்தும் அவர்களைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள்” என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் “நீங்கள் எத்தனை ‘வாக்காளர் அதிகார நடைபயணம்‘ வேண்டுமானாலும் போங்கள். நாங்கள் சட்டவிரோத குடியேறிகள் அத்தனை பேரும் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திருப்பி அனுப்புவோம்,” என்று பரப்புரைக் கூட்டங்களில் பேசினார். பீகார் தேர்தலும் முடிந்துவிட்டது. சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்துவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையம், சட்ட விரோத குடியேறிகள் எத்தனை பேர் கண்டறிந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்து எதுவும் கூறாமல் வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறது.
நியூஸ் லாண்டரி என்ற இணையதள செய்தியாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 2.53 லட்சம் பேர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். அவர்களைக் கண்டறிந்தும் ஆய்வு செய்தனர். இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில், 689 பேர் சட்ட விரோத குடியேறிகள் என குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் அனைவரும் பீகாரி இளைஞர்களை பல்வேறு காலங்களில் காதலித்து திருமணம் செய்த நேபாளப் பெண்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிய வந்தது. நேபாள எல்லையையொட்டிய பீகார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்த 689 பேரைக் கண்டறிவதற்காகவா பீகார் மாநிலம் முழுவதும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது?! மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது என்பது இதுதானோ..
இப்படி கற்பனையான எதிரியைக் கட்டமைத்து பெரும்பான்மை மக்களை தங்கள் பின்னால் அணிதிரட்ட முயல்வதுதான் பாசிச அரசியல். இதை பாஜக செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் செய்யலாமா?
11. தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலம் வெளிமாநில வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பதாகச் சொல்வது உண்மையா?
தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தற்போது செய்து கொண்டிருப்பது அனைத்தும் குளறுபடிகளின் உச்சம் ஆகும்.
இதற்கு முன்பு கர்நாடகா, மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது, ஒரே வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்களும், சிறிய வீட்டில் 500 வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வாக்களித்து இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவை அனைத்தும் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இப்படிப் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதனையே “சிறப்புத் தீவிர திருத்தம்” என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் செய்யத் துணிந்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதாவது கணக்கீட்டுப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலில், “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என தேர்தல் ஆணையம் 13வதாக சேர்த்துள்ளது. இதன் மூலம் பீகார் மாநிலத்தவர் தமிழ்நாட்டு வாக்காளர்களாக எளிதாகச் சேர்ந்து விடலாம். இது முறைகேடு நடப்பதற்கு “சிறப்புத் தீவிர திருத்தம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையம் வழியமைத்துக் கொடுப்பதாகும்.
12. சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்வதை ஆதரிக்கும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறுவது என்ன?
வாக்காளர் பட்டியலில் இருந்து, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்து சென்றவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவான பெயர்கள் போன்றவற்றை நீக்குவதும் 18 வயது நிறைவடைந்த இளையோரை வாக்காளராகச் சேர்ப்பதும் அவசியமான பணிகளாகும். இதனை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் புதிதாகச் சேருபவர்கள் போன்று கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக்கொடுக்க வேண்டும் என்று சொல்வது அதிகார அத்துமீறலாகும்.
சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) ஆதரிக்கும் பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் இது குறித்து எதுவும் பேசுவதில்லை. ஒன்றிய ஆளும் கட்சியான பாஜகவுக்கு சாதகமான சூழலை தமிழ்நாட்டில் உருவாக்கி, அதனுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை சுவைக்க விரும்புகின்றன. இதற்காகத்தான் இறந்தவர்களை நீக்கவும் 18 வயது நிரம்பிய இளையோரைச் சேர்ப்பதற்கும் மட்டுமே “சிறப்புத் தீவிர திருத்தம்” செய்யப்படுவதாக, முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முயல்கின்றனர். இதனால் நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகம் முழுவதும் சிதைவுக்கு உள்ளாகி, பாசிச கட்டமைப்பாக மாற்றப்பட்டு விடும் என்பது குறித்து இந்தக் கட்சிகள் கவலைப்படவில்லை.
13. ஆதார் குறித்த தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?
கணக்கீட்டுப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலில் கூட ஆதாரை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. ஆனால் “சிறப்புத் தீவிர திருத்தம்” செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதாரை சான்று ஆவணமாக ஏற்குமாறு ஆணையிட்டது. அதன் பிறகுதான் ஆதாரை அடையாளச் சான்றாக மட்டும் ஏற்பதாகவும், குடியுரிமை அல்லது அதில் குறிப்பிடப்படும் பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதாரை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது. கொல்லைப்புறத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் வேறு எப்படி சொல்லும்?
14. வாக்காளர் அட்டையில் என்ன பிரச்சனை?
உலகம் முழுவதும் இதுபோன்ற அடையாள அட்டைகளைக் கொடுக்கும் போது, தனித்துவமான எண் வழங்கப்படுவது வழக்கம். ஆதார் அட்டையில் இடம்பெறும் எண் தனித்துவமானதாகும். அதாவது இந்தியாவில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் எண் வேறொருவருக்கு வழங்கப்பட மாட்டாது. ஒருவர் எத்தனை முறை வீடு மாறினாலும் எத்தனை முறை முகவரியை மாற்றினாலும் ஆதார் எண் மட்டும் மாறவே மாறாது. ஆனால், வாக்காளர் அட்டை அப்படி அல்ல. ஒருவர் எத்தனை முறை வாக்காளர் அட்டை வாங்கினாலும் அத்தனை முறையும் அதன் எண் மாறும். ஒரு மாநிலத்தில் வாக்காளர் வைத்திருக்கும் எண், வேறொரு மாநிலத்தில் இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். இதுதான் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது.
15. வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் தேர்தல் ஆணையர்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?
தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் முறையை மாற்றித் திருத்தச் சட்டம். வாக்குப்பதிவு காணொளி காட்சிகளை கொடுக்க மறுத்து திருத்தச் சட்டம் என பல்வேறு சட்டத் திருத்தங்களை ஒன்றிய பாஜக அரசு செய்துள்ளது. இவை தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி நிலையை மாற்றி, ஒன்றிய பாஜக அரசின் துணை அமைப்பாக மாற்றிவிட்டது. இந்த சட்டத்திருத்தம், முறைகேடு நடந்திருப்பதற்கு உறுதியான ஆதாரம் இருந்தாலும் தேர்தல் ஆணையர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல, பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வழக்குத் தொடர முடியாது. நாடாளுமன்ற அமைப்பு முறையில் ஆட்சியைப் பிடித்த ஹிட்லர், பின்னர் பாசிச கட்டமைப்பாக அதனை மாற்றி கோலோச்சியது நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் ஒன்றிய பாஜக அரசு செய்துகொண்டிருக்கிறது. இதனை மக்கள் போராட்டங்கள்தான் முறியடிக்கும்.