
இந்திய மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றுதான் தேர்தல் ஆணையம்.
எவருக்கும் கட்டுப்பட்ட, எவரது கட்டளைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியமற்ற ஒரு சுதந்திரமான சுயேச்சை அமைப்பு தேர்தல் ஆணையம்!
அதன் கதி என்னவாகி உள்ளது என்பதனை எழுதித் தெரிய வேண்டியது இல்லை.
சிலந்தி கட்சிகளைப் பிளவுபடுத்தியது, பிற கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி விட்டு பதம் பார்ப்பது.
பாதிக்கப்பட்டவர்கள் நெஞ்சில் உரமற்றவர்கள், தங்களைத் தற்காத்துக் கொள்ள, தாங்கள் இதுவரை பின்பற்றி வந்த கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அங்கிருந்து விலகி சிலந்தி கட்சியில் சேர்ந்த பின்னர் அவர்கள் அனைவரும் புனிதர்களாகி விடுகின்றார்கள்!
தற்போது அதற்கும் மேலாக உனக்கு வாக்குரிமை கொடுத்தால் தானே நீ வாக்களித்து, எனக்கு எதிரானவனைத் தேர்ந்தெடுப்பாய் வாக்கு என்கிற அம்மகத்தான உரிமையை நான் பறித்துக் கொள்கிறேன். அதனை தேர்தல் ஆணையத்தின் மூலமாக சட்டபூர்வமாகச் செய்து கொள்கிறேன். நீ இப்போது என்ன செய்வாய் என ஈக்களுக்குச் சவால் விடுகின்றது சிலந்தி.
மகாபாரதக் கதையில் வரும் கர்ணன் வில்வித்தை போட்டியில் பங்கு கொண்டிருந்தால் அர்ஜுனனை வீழ்த்தியிருப்பான் கர்ணனே வெற்றி பெற்றிருப்பான்!
கலந்து கொண்டால் தானே அர்ச்சுனனை வெல்வாய், நீ கலந்து கொள்ளவே தகுதியற்றவன் என்று தீர்ப்பு கூறி கர்ணனைக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வில்லையா?
அதுபோன்று இன்று வாக்குச்சாவடிக்கே வர முடியாதபடி வாக்காளர்களைத் தடுத்து நிறுத்தி விட்டால், சிலந்தி தன் திட்டம் போல் ஆட்டம் போடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டது.
சூட்சுமம் நிறைந்திட்ட வஞ்சக சிலந்திக்குப் பெரும் பிரச்சனையாக, சவாலாக இருப்பது தமிழ்நாடுதான்.
எல்லா மாநிலங்களையும் வளைக்க முடிகின்றது. வளைக்க முடியாமல் இருப்பது சிலந்திக்குப் பெரும் வருத்தம், கோபம். கோபம் என்றால் சாதாரண கோபம் அல்ல, கடுங்கோபம்.
தன் கொடூர கோபத்தைத் தீர்த்துக் கொள்ள பல வழிகளில் முயன்றும் சிலந்திக்குத் தொடர் தோல்விதான் மிச்சம்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் சிலந்திக்குத் தோல்வி மேல் தோல்வி.
சிலந்திகள் ஆள் பார்த்து புதுக் கூட்டாளிகளைச் சேர்த்தது எந்தப் பயனும் இல்லை.
சிலந்திக்குத் தாங்க முடியவில்லை. கோபத்தைக் கொடூரமாக வெளிப்படுத்தத் தொடங்கியது.
என்னை ஏற்றுக் கொள்ளாத உனக்கு நிதி கொடுக்க மாட்டேன். இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு முழுவதுமாகப் பாதிக்கப்பட்டாலும் பேரிடர் நிதி வழங்க மாட்டேன், கல்வி நிதி கொடுக்க மாட்டேன் என நெருக்கடிக்கு மேல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகின்றது சிலந்தி.
ஆனால் தமிழ்நாடோ சிலந்தியே நீ எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம் ஒன்றுபட்டு நிற்போம். ஒன்றுபட்டு உன்னை எதிர்த்து, கொடூரக் கோரக் கண்களையும் கால்களையும் உடைய சிலந்தியே உன்னை எதிர்கொள்வோம் என தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு.
எல்லா வலைகளையும் தமிழ்நாட்டில் பின்னிப் பின்னி பயனற்று படுதோல்வி அடைந்த சிலந்தி தற்போது வேறு வலை பின்னியுள்ளது.
முன்னர் தன் வலையில் சிக்கி தப்பியோடிய எடப்பாடி என்கிற ஈயை தன் விலைக்குள் சிக்க வைக்க பல முயற்சிகளை சிலந்தி மேற்கொண்டது.
பட்டது போதும் இனி எக்காலத்திலும் உன்னுடன் ஒட்டுமில்லை உறவும் இல்லை என்று மேடைதோறும் மார்தட்டிய இபிஎஸ் என்கிற ஈயை வா டெல்லிக்கு என அழைப்பதற்கு முன்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளை சம்பந்தி வீட்டிற்கு விருந்தாளியாக அனுப்ப துண்டைக் காணோம் துணியக் காணோம் என இபிஎஸ் ஈ டெல்லிக்கு ஓட்டமெடுக்க நீ மட்டுமல்ல உன் சகாக்களையும் அழைத்து வா எனச் சிலந்தி ஆணையிட, அப்படியே ஆகட்டும் எஜமான் என தன் சக பாடிகளையும் அழைத்துச் சென்று சிலந்தியிடம் சரணாகதியடைய, சிலந்தி தனது பெருமுழியை அகல விரித்து, உருட்டுப் பார்வை பார்த்த மாத்திரத்தில், ஈ எதுவும் செய்ய இயலாத நிலையில் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் புலம்பலோடு திரும்பியது.
போதாது என்று சிலந்தி டெல்லி சிம்மாசனத்திலிருந்து எழுந்து விடாமல் பிடித்து சென்னைக்கே வந்து ஈக்களை அருகில் அமர்த்திக் கொண்டு, பத்திரிக்கை தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களையும் அழைத்து பகிரங்கமாக சிலந்தி கூறியது.
இந்த ஈ எங்களோடு சேர்ந்து விட்டது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் எனச் சிலந்தி வெளிப்படையாக பகிரங்கமாகத் தெரிவிக்க அருகில் அமர்ந்திருந்த ஈ என்ன செய்வதென அறியாமல் புரியாமல் வாய்ப்பொத்தி நிற்கின்றது. இந்த ஈ இனி சிலந்தியின் வலையில் இருந்து தப்பிக்க வழியில்லை. வசமாக கொடூர சிலந்தியின் வலையில் அகப்பட்டு கொண்டு விட்டது. இனி அதனைக் காப்பாற்ற வழி இருப்பதாகவோ அல்லது ஈ தன்னை அங்கிருந்து விடுவித்துக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஈ மாட்டியது மாட்டியதுதான். நல்லதோ கெட்டதோ சிலந்தியைப் பகைத்துக் கொள்ள முடியாது என்ற மனநிலைக்கு இபிஎஸ் என்ற ஈ முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகின்றது. அது செல்லுமிடமெல்லாம் பாராட்டிப் போகின்றது. அது உண்மையான பாராட்டல்ல, வஞ்சப் புகழ்ச்சிதான். ஆனால் வேறு வழியில்லை. சிலந்தியைப் பகைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் ஈயிடம் எதுவுமில்லை.
வேறு வழியில்லை. ஏனெனில் மடி கனமாக இருக்கின்றது. மிகக் கனமாக இருக்கின்றது. மிகக் கனமாக இருப்பது குறித்து முழுமையாக சிலந்திக்கும் தெரியும் என்பது ஈக்கும் தெரியும்.
மடி முழுவதும் பெரும் கனத்தைச் சுமந்து கொண்டு சிலந்தியைப் பகைத்தால் ஆபத்து தனக்கு மட்டுமல்ல தனது சகாக்களுக்கும் ஆபத்து என்று அலறுகிறார்கள்.
தான் கொஞ்சம் வீராப்பு காட்டினால் சில மணிகள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாக மாறிவிடுவார்கள். நம்மைக் கைவிட்டு கைமாறி சிலந்தியிடம் அடைக்கலமாகி விடுவார்கள். இது ஆபத்து, பெரும் ஆபத்து.
நாம் ஒன்றும் “தெய்வத்தலைவி” ஜெயலலிதா அல்ல. அவர் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் உறுதியாக இருக்கக்கூடிய வீரமங்கை.
லேடியா, மோடியா? வா ஒரு கை பார்க்கலாம் என்கிற வைராக்கியம் இருந்தது. வாஜ்பாயை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்து 13 ஆம் மாதத்தில் அதிகார நாற்காலியில் இருந்து அப்புறப்படுத்திய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.
முதலமைச்சராகவும் பணியாற்றினார். சொந்த புத்தியோடும் சுய உணர்வோடும், அச்சம் தவிர்த்தும் வாழ்ந்து மறைந்தார்.
தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு, சிறை என்ற போதும் அதனை எதிர்கொண்டார். பிரிந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அத்தகைய ஆற்றலை எல்லாம் என்னிடத்தில் எதிர்பார்த்தால் அது நியாயமாகாது.
நான் மக்களின் ஆதரவைப் பெற்று அமைச்சராகவில்லை. மாறாக ஜெயலலிதா தயவில் அமைச்சரானேன். மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராக ஆகவில்லை. சசிகலா அம்மையார் தயவில் நான் முதலமைச்சர் ஆனேன் என்பது பச்சிளம் குழந்தைக்குக் கூட நன்கு தெரியும்.
நான் எவ்வாறு தவழ்ந்து சென்று சசிகலா அம்மாவின் ஆசி பெற்றேன் என்பதும் நாடு அறிந்த செய்தியாகும்.
அன்று நான் தவழ்ந்து சென்று அம்மையாரிடம் ஆசி பெற்றது ஓர் நடிப்பு என்பதை அம்மையார் அறியாது என் கைபிடித்து தூக்கி என் முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நான் அம்மையாருக்கு விசுவாசமாக இல்லை. நன்றி கெட்டவன் என்றெல்லாம் பலர் பேசி வருகின்றார்கள்.
நான் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும். கூவத்தூரில் ஏலம் விடப்பட்டது, நான் அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்தேன். ஆகவே நான் யாருக்கும் நன்றி விசுவாசம் காட்ட தேவையில்லை. ஒருவேளை நான் சற்று கிறங்கி நன்றி விசுவாசம் என்ற பெயரால் சிலந்தியின் பேச்சைக் கேட்டு இணைத்துக் கொண்டால் நான் பொதுச் செயலாளராக நீடிக்க இயலுமா என்பதனை எண்ணிப்பாருங்கள் எனப் புலம்பிக்கொண்டிருக்கும் ஈ வரும் தேர்தலில் தோற்பது உறுதி. அதுபற்றி கவலை இல்லை. சிலந்தியைப் பகைத்துக் கொள்ள இயலாது முடியாது என முடிவாகி விட்டது.
சிலந்திக்கு சந்தோசம் என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கபளீகரம் செய்திட இந்த ஒரு ஈ போதாது மேலும் பல ஈக்கள் வேண்டுமென்று தனது அகண்ட உருண்டைக் கண்களால் தமிழ்நாட்டில் துழாவி துழாவிப் பார்த்து வருகின்றது.