உலக செய்திகள்கட்டுரைகள்

உண்மையைக் கொண்டு பாசிசத்தை வெல்வோம்!

த.லெனின்

2025 நவம்பர் 5 முதல் 8 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (CPRF) ஏற்பாடு செய்த “நவ-பாசிசத்திற்கு எதிரான உண்மை” என்ற தலைப்பில் சர்வதேச ஊடக பொதுமேடை, பாசிசத்தை வெற்றி கொண்ட என்பதாவது ஆண்டு நிகழ்வாக நடத்தியது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின், மத்தியக் குழுவின் துணைத் தலைவர் கலாஷ்னிகோவ் பங்கேற்பாளர்களை வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள், ஒரு தொகுப்பாகத் தொகுக்கப்பட்டு பரவலாக விநியோகிக்கப்படும் என்று லியோனிட் இவனோவிச் அறிவித்தார். இன்று, தகவல் மற்றும் தகவல்தொடர்புகளை நிறுவுவதும் அதைத் தொடர்வதும் நமது முன்னுரிமை என்றும் அவர் பேசினார்.

மத்திய குழுவின் துணைத் தலைவர் நோவிகோவ், மத்திய குழுவின் உறுப்பினர், அனிகோவ்ஸ்கி ஆகியோர் பணிகள் குறித்த அறிக்கைகளை வழங்கினர்.

“நவ-பாசிசத்திற்கு எதிரான உண்மை” என்ற சர்வதேச ஊடக பொது மேடையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி.ஏ.ஜுயுகனோவ் ஆற்றிய தொடக்க உரை.

எங்கள் பாசிச எதிர்ப்புப் போராட்டம் அதன் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தகவல் மற்றும் பிரச்சார சேவைகளின் தலைமை தோழர்கள் மாஸ்கோவில் கூடியுள்ளனர். 40 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்களில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களும் முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களும் அடங்குவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மின்ஸ்கில் முதல் பாசிச எதிர்ப்பு மன்றத்தை நடத்தினோம். உலகம் முழுவதிலுமிருந்து ஐம்பது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.” நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் முதல் மன்றத்தில் கலந்து கொண்டனர். அந்த மன்றத்தில், அனைவரும் ஏற்றுக்கொண்ட முடிவை அறிக்கையாக வெளியிட்டோம். அதை அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்த்தோம். பாசிசம் மற்றும் நாஜிசத்திற்கு எதிரான நமது கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்த முற்போக்கான மனிதகுலத்தை அழைத்தோம். அது அனைவராலும் வரவேற்கப்பட்டது என்று எடுத்துக் கொண்டால், கடந்த இரண்டாம் உலகப் போரில் மிகப்பெரிய அளவுக்கு இழப்புகளைச் சந்தித்தது என் குடும்பமாகும். எனது தந்தையையும், சகோதரனையும் அந்த யுத்தத்தில் நான் இழந்தேன் பழைய சோவியத்து நாடு இரண்டு கோடியே 70 லட்சம் மக்களை இழந்து தான் மனித குல பொது எதிரி,பாசிசத்தை வீழ்த்தினோம்.

அன்று அமெரிக்காவும்,மேற்குலக நாடுகளும் மறைமுகமாக ஹிட்லருக்கும், பாசிச சக்திகளுக்கும் ஆதரவளித்தன, ஆயுதங்களைத் தந்தன. பெரும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஆதரவாகவே ஆயுதங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டன. ஆனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்பும், சோவியத் ஒன்றியம் காட்டிய வீரமும் அவர்களை நடுங்கச் செய்தது. சோவியத் வெற்றியடையும் தருவாயில்தான் அவர்களும் இந்த யுத்தத்தில் கலந்து கொண்டு தாங்களும் இதை எதிர்த்து போராடியதாக பேச ஆரம்பித்தனர்.

எனவே நாம் உறுதியோடு பாசிசத்தை எதிர்கொள்ள வேண்டும் இந்த நவ காலனிய காலத்தில் நிதி மூலதனத்தின் கொடூர முகமாக நவ பாசிசம் இன்று ஒரு கழுகைப் போல வட்டமடித்து வருகிறது. மனித குலத்தை பிளப்பதும்,வெறுப்பை விதைப்பதும் அதன் மூலம் சுரண்டும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதே அதன் வேலையாக மாறிவிட்டது. எனவே உலக அளவில் ஒருங்கிணைந்த முறையில் இதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை, போராட்டங்களை நாம் கட்டமைக்க வேண்டும்.

இப்போது ஒரு புதிய வெற்றியின் பெயரால் அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைப்பது முக்கியம். புதிய உலகளாவிய அச்சுறுத்தல்களை நாம் குறைத்து மதிப்பிட்டோமானால், நாம் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். வெற்றி எப்போதும் ஒற்றுமையில் உருவாகிறது. கூட்டாளிகள்,அத்துடன் நம்பகமான ஆதரவாளர்கள் இல்லாமல் யாரும் ஒரு பெரிய போரில் வெற்றி பெற்றதில்லை.

பாசிசத்தை எதிர்க்க பொது பதாகை!

அமைதி, மக்கள் நலன்கள் மற்றும் நீதி ஆபத்தில் இருக்கும்போது, ​​அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரு பொதுவான பதாகையின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

1941 இல் அத்தகைய ஒற்றுமை ஏற்படவில்லை என்றால், 1945 இல் நாம் ஒருபோதும் வென்றிருக்க மாட்டோம். மேலும் அப்போது ஏற்பட்ட இந்த ஒற்றுமை அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டிருந்தால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது.

ஜெர்மனி இரண்டாம் உலகப் போரை ஒருபோதும் கட்டவிழ்த்து விட்டிருக்கவும் முடியாது என்றார்.

இப்போது ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய போர் ஒரு சிறப்பு கட்டத்தில் நுழைந்துள்ளது. எமது ஒற்றுமையை நிரூபிப்பது எமக்கு மிகவும் முக்கியமானது. நமது செய்தி நிறுவனங்கள், உண்மைக்கும், அமைதிக்கும் சேவை செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு தனது தொடக்க உரையில் பேசினார்.

 

மாஸ்கோவில் நடைபெற்ற இந்த பொது மேடையில் இந்தியாவின் சார்பில் த.லெனின் பங்கேற்றார். இதில் சீனா, ஜெர்மனி, ஹங்கேரி, தென்னாப்பிரிக்கா, நிகராகுவா, சிலி, பிரேசில், ஸ்பெயின், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பெலரஸ், மியான்மர், வெனிசுலா, நமீபியா, ஸ்லோகியா, தலைமறைவாக இயங்கும் உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவர் என பலர் கலந்து கொண்டனர்.

நிகராகுவாவில் இருந்து பெரிய அளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத் துறையில் மேற்கத்திய பிரச்சாரங்களை தகவல் ரீதியாக எதிர்கொள்வது, பாசிசத்தின் வளர்ச்சியை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கான அடிப்படை என்ற தலைப்பில் ஓர் அரங்கும், தேசிய வெகுஜன ஊடகங்கள், சமூக வலைப்பின்னல்களில் தகவல் மற்றும் கருத்தியல் பணியின் வழிமுறை. ஒரு நடைமுறை அனுபவம் என்ற தலைப்பில் மற்றொரு அமர்வும் பின்பு தனித்தனியாக நடைபெற்றது.

இரண்டாவது நாளான நவம்பர் 7ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க செஞ்சதுக்கத்துக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யாவின் பாரம்பரிய ராணுவ தளவாட கண்காட்சியை பார்த்தனர். மிகப்பிரமாண்டமான காரல் மார்க்ஸ் சிலைக்கு அருகில் உள்ள சதுக்கத்தில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு பிரம்மாண்டமான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதில் புரட்சிகர பாப் பாடல்கள் பாடப்பட்டன.

பின்பு ஆகா வென்றழுந்த யுக புரட்சியை சாத்தியமாக்கிய மாமேதை லெனின் நினைவிடத்திற்குச் சென்று அந்த நீடு துயில் கொண்ட வரலாற்று நாயகனுக்கு, தமது மானசீகமான செவ்வணக்கத்தைச் செலுத்தி வெளியில் அமைந்திருந்த அவரது சிலைக்கு மலர்களை வைத்து மரியாதை செய்தனர்.

அதன் பின்பு மாலை பாசிசத்தை எதிர்த்த பெரும் போரின் காட்சியை நிறுவும் வகையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். உண்மையில் அவற்றில் உள்ள பல செய்திகள் நமக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சி ஏற்படுத்தியது. சோவியத் மக்களின் மாபெரும் ஈகத்தைப் பறைசாற்றியது. ஹிட்லரின் நாஜி படைகளை எவ்வளவு செய்நேர்த்தியோடு துல்லியமாகத் துடைத்தெறிந்தார்கள் என்பதை நமது நாடி நரம்பெல்லாம், ஓடும் உதிரம் எல்லாம் உரக்கச் சொல்லும் விதத்தில் அதன் காட்சி அமைப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button