கட்டுரைகள்

கொல்லைப்புறமாக வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்: SIR தொடர்பான வினாக்களும் விளக்கமும்

வ.மணிமாறன்

இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கடும் எதிர்ப்புகளுக்கும் மக்களின் அதிருப்திக்கும் உள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக எழக்கூடிய வினாக்களுக்கு விடை தேடும் எழுத்துப் பயணம்

1. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) என்றால் என்ன?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதாகும். கணக்கெடுப்பாளர்கள் வீடுவீடாகச் சென்று அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய கணக்கெடுப்புப் படிவங்களைத் தருவர். வாக்காளர்கள் அந்தப் படிவங்களை நிரப்பி கையெழுத்திட்டுக் கொடுப்பர். அதனடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதாகும். எனவே இது திருத்தம் இல்லை..

2. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision-SIR), சுருக்க முறை திருத்தம் (Summary Revision-SR) என்ன வேறுபாடு?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது புதிதாக வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதாகும். சுருக்கமுறை திருத்தம் என்பது இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்குவது, இடம் மாறுதல் மற்றும் புதியவர்களைச் சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதாகும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

3. சிறப்புத் தீவிர திருத்தம் தற்போது நடப்பதற்கும் முன்பு நடந்ததற்கும் என்ன வேறுபாடு?

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது தீவிரத் திருத்தம் (Intensive Revision- IR) என்றே அழைக்கப்பட்டது. இப்பணியை மேற்கொண்ட போது, அரசு அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொண்டனர். தற்போது, வாக்காளர்களே கணக்கெடுப்புப் படிவத்தில் (Enumeration Form) விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அவர்கள் இதனைச் செய்யத் தவறினால், அவர்களின் வாக்குரிமை பறிபோகும். அதாவது, அரசிடம் இருந்த வாக்குரிமையை உறுதி செய்யும் பொறுப்பு, தற்போதைய சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலம் குடிமக்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

4. சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

தற்போது நடப்பது போன்று சிறப்புத் தீவிர திருத்தம் இதற்கு முன்பு நடக்கவில்லை. வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான பணிகள் தீவிரத் திருத்தம் (IR) என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்தங்களைச் செய்தனர். அடுத்து, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் சுருக்கமுறை திருத்தம் (Summary Revision-SR) செய்யப்பட்டது.

5. சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து தேர்தல் ஆணையம் தரும் விளக்கம் என்ன?

இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது, விடுபட்ட மற்றும் தகுதியான புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, சட்ட விரோதமாக குடியேறிய வாக்காளர்களைக் கண்டறிவது ஆகிய காரணங்களுக்காக சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதை எதிர்க்கலாமா?

வாக்காளர் பட்டியல் மேம்படுத்தப்பட வேண்டும், துல்லியமானதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது. தற்போது இப்பணிகளை மேற்கொள்ளும் முறைகளைத்தான் எதிர்க்கின்றனர். அதாவது, அதீத அவசரத்துடன் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்வதையும், வாக்காளர்களை நீக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதையும்தான் எதிர்க்கின்றனர். வாக்காளர்களின் பிறந்தநாளையும் இடத்தையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் ஆவணங்கள் எளிதாக இணைக்கக் கூடியவை அல்ல. இதனால் ஏராளமான இந்தியக் குடிமக்களின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பிருக்கிறது. இதனால்தான் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

7. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து வாக்குரிமையை உறுதி செய்வதற்கும் குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் 2019ஆம் ஆண்டு மோடி அரசு திருத்தம் செய்தது. இந்த திருத்தச் சட்டத்தின்படி, ஒருவரை இந்தியக் குடிமகன் தான் என்பதை உறுதி செய்ய, அவரது பிறப்பின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்துகிறது. இந்த மூன்று வகைப்பாடுகளின்படியே சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளும் மேற்கொள்ளப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது,

01.07.1987க்கு முன் பிறந்த வாக்காளர்கள் எனில், தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க புதிதாக எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை. தீவிரத் திருத்தம் (IR) மேற்கொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள அவர்களின் விவரங்களை (பாகம் எண், வரிசை எண்) கணக்கெடுப்பு படிவத்தில் குறிப்பிட்டால் போதுமானது.

அடுத்து, 1.7.1987 முதல் 1.12.2004 வரை பிறந்தவர்கள் எனில், அவர்களின் தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால்தான் அவர்களின் குடியுரிமை அங்கீகரிக்கப்படும் என்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். இதே வகைப்பாட்டை அறிவித்துள்ள தேர்தல் ஆணையமும், மேற்படி காலகட்டத்தில் பிறந்தவர்களின் தாய் அல்லது தந்தையின் பெயர் 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை கணக்கெடுப்புப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். தங்களின் பிறப்புச் சான்றிதழையும் இணைத்திட வேண்டும் என்று கூறியுள்ளது

அடுத்து மூன்றாவதாக, 02.12.2004க்குப் பின்னர் பிறந்தவர்கள் எனில், அவர்களின் தாய், தந்தை இருவரும் இந்தியராக இருந்தால் மட்டுமே இந்தியக் குடியுரிமையை அங்கீகரிக்க முடியும் என்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். தேர்தல் ஆணையமும் இந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்கள், தங்களின் தாய், தந்தை இருவரின் பெயரும் 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களைக் கொடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றிருப்பதுதான் இன்றைய பதற்றத்திற்குக் காரணமாகும். இதனால்தான் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினாலோ, புகார் கூறினாலோ பாஜகவும் சங்கிகளும் பதிலளிக்கின்றனர்.

8. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் (SIR) குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதா?

தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளால் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டாலோ, இடம்பெறாவிட்டாலோ கவலைப்பட்டே ஆக வேண்டும். சிறப்புத் தீவிர திருத்தம் செய்வதற்காக தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) சார்ந்தவையாகவே உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens – NRC) தயாரிக்கும் பணிகள் 2020ல் தொடங்கின. நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுத்ததை அடுத்து, இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) வழியாக குடியுரிமை திருத்தச்சட்டம் மறைமுகமாக நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதனால்தான் பதற்றமும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் காணப்படுகிறது.

தொடரும்
தொடர்புக்கு: 9500001224

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button