கட்டுரைகள்

கொடூர சிலந்தி – 2

கிராமத்தான்

சிலந்தி யார்? ஈ யார்? தொழிலாளர்களை, விவசாயிகளை, மாதர்களை, மாணவர்களை, இளைஞர்களை என ஒட்டுமொத்த மக்களையும் சுரண்டிக் கொளுத்துத் திரியும் முதலாளித்துவம்தான் சிலந்தி!

மக்கள் எல்லாம் ஈக்கள். மனிதர்களை ஈக்கு ஒப்பிடலாமா? ஆமாம் நாம் அனைவரும் ஈதான். நம்மை முதலாளித்துவம் ஆண்டாண்டு காலமாய் வஞ்சக வலை விரித்து அதனில் நம்மை மாட்டச் செய்து நமது ரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி முதலாளித்துவம் பெருத்துக் கொண்டே உள்ளது.

ஈக்களாகிய நாம் அணு அணுவாய்ச் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டுள்ளோம்!

தலைமுறைகளாக இது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. நகரமானாலும், கிராமமானாலும் அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம். துடி துடித்து பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்!

பலமற்ற மெல்லிய ஈக்கும், ரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இப்போரில் சொல்லொண்ணாத அளவுக்கு படு பயங்கரமானவை.

இருநூறு ஆண்டுகால வெள்ளை ஏகாதிபத்தியம் என்கிற சிலந்தி அது விரித்த வலையில் சிக்குண்டு சீரழிந்த ஈக்களாகிய நாம், பெரும் போர் புரிந்து நம்மில் ஆயிரக்கணக்கானவர்களை இழந்து ரத்தம் சிந்தி சிறைக் கொடுமைகளை சித்திரவதைகளை எல்லாம் அனுபவித்து வெள்ளைக்காரச் சிலந்தி விரித்த வலையை அறுத்தெறிந்து விடுதலை அடைந்தோம். மகிழ்ச்சி பெரு மகிழ்ச்சி. ஆம் அப்படித்தான் ஈக்களாகிய நாம் தற்பெருமை கொண்டோம்.

சிலந்தி பின்னிய வலையை அறுத்தெறிந்து அடையாளம் காணாமல் செய்து விட்டோம் என்று நாம் பெருமிதம் கொண்டோம். நம் பெருமிதம் நியாயமானதுதான், சரியானதுதான் ஏனெனில் வலையை அறுத்துவிட்டது உண்மைதானே!

ஆனால் வலையைப் பின்னிய சிலந்தியைக் கொன்று விட்டோமா? இல்லையே கொடூரச் சிலந்தி உயிருடன் உள்ளது என்பது மட்டுமல்ல, அது தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டுள்ளது.

அதன் உடல் பருத்து அதன் எட்டுக் கால்களும் அசைக்க முடியாத ஒடிக்க முடியாத அளவிற்குப் பலப்பட்டுள்ளது.

அது மிக மிக நவீன முறைகளில் வலையைப் பின்னுகிறது. யாரும் எவரும் எளிதில் தப்ப முடியாத அளவிற்கு வலைகளைப் பின்னி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஈக்கள் (மக்கள்) அவ்வலையில் சிக்கி சீரழிந்து வருகின்றார்கள்.
சிலந்தி தனது வலையை உலகமயம் என்றும், தனியார்மயம் என்றும், தாராளமயம் என்றும் பின்னியுள்ளது.

கேடுகெட்ட சிலந்திக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் இல்லாமல் இல்லை.

சிலந்தி பின்னியுள்ள வலை கொடூரமானது என்று சொன்னால் இல்லை இல்லை அது பஞ்சு மெத்தை எனப் பரிந்துரைத்தோர் உண்டு.

அது எத்தகைய விபரீதமான வலை என்பதனை உலகில் உள்ள ஈக்கள் எல்லாம் உணரத் தொடங்கி உள்ளன. சிலந்தி வலையை எதிர்த்து மாநாடு, பேரணி, ஆர்ப்பாட்டம் என வகைவகையான போராட்டங்களை ஈக்கள் நடத்தி வருகின்றன.

ஈக்களிடத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டால், அது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைப் புரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் ஈக்கள் ஒன்றுபடும் போர் புரியும் வெற்றியும் பெறும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஆனால் சிலந்தியோ புதுப்புது அவதாரம் எடுக்கின்றது. அவதாரம் எடுப்பது மட்டுமல்ல தன் வஞ்சக வலையை விதவிதமாய்ப் பின்னுகின்றது.

கலர் கலராய் அழகழகாய்ப் பின்னுகின்றது. அது பின்னும் வலை வகை வகையாய் இருந்தாலும் பல வண்ணமயமான கலரில் இருந்தாலும் அது ஆபத்தானது, வஞ்சக வலை அதனில் நாம் சிக்கிச் சீரழிந்து விடுவோம் என்கிற அபாயத்தை அறிய முடியாதவர்களாக ஈக்கள் உள்ளனர்.

திரும்பத் திரும்ப சிலந்தி பின்னும் வஞ்சக வலையில் சிக்குண்டு சீரழிந்து வருகின்றன ஈக்கள்.

முதலாளித்துவம் அனைத்து மக்களையும் பொருளாதாரச் சுரண்டல் மேற்கொண்ட நிலையில் முதலாளித்துவம் என்கிற அந்தக் கொடூரச் சிலந்தி பொருளாதாரச் சுரண்டல் மேற்கொண்ட நிலையில் ஈக்கள் சுரண்டலைப் புரிந்து கொண்டு அமைப்பாய் அணி திரண்டு சுரண்டலுக்கு எதிரான ஓர் போரை உத்வேகத்துடன் மேற்கொண்டது.

ஈக்கள் ஒன்றுபட்டு அணிவகுத்து நிற்பதையும் தன் கோரக் கண்களால் கண்டுகொண்டே சிலந்தி மேலும் மேலும் புதிய வலைகளை மிக நுணுக்கமான வலைகளை மிக அழுத்தமான வலைகளை கவர்ச்சிகரமான பல வண்ண கலர்களில் வலைகளைப் பின்னி உள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே பின்னப்பட்ட வலைதான் மதம் என்கிற வலை கறுப்பர் வெள்ளையர் என்கிற வலை இங்கே நம் நாட்டில் மதம் எனும் மாய வலையோடு அதனில் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னியுள்ள சாதி என்கிற வலை.

மதவெறியோடு, அம்மத வெறியை மேலும் வலுப்படுத்த பலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நான்கு வர்ணக் கொள்கை இன்று நேற்றல்ல புராண இதிகாச காலம் தொட்டு கடை பிடித்து வரப்படுகின்றது.

இதனை எதிர்த்து ஈக்கள் போராடி வெற்றியும் பெற்றன. அந்த வெற்றிதான் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்கிற சட்டப்பூர்வமான ஏற்பாடுகள்.

சிலந்திக்கு ஈக்களைக் காட்டிலும் செல்வாக்கு அதிகம். ஈக்கள் எண்ணிக்கையில் எண்ணிலடங்காப் பெருங் கூட்டம்.

சிலந்திக்குக் கூட்டமில்லை. ஆனால் செல்வாக்கு உண்டு ஆட்சி அதிகாரம், பணம், சாதி, மதம் எனப் பற்பல செல்வாக்கை அது எப்போதும் வீணடித்தது கிடையாது. மிக புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி கொள்ளும் ஆற்றல் அந்தச் சிலந்திக்கு உண்டு.

உதாரணமாக நம் நாட்டில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் எக்கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிட்டவில்லை.

நாடாளுமன்ற மரபின்படி இருக்கின்ற கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் கேட்பது மரபு. அத்தகைய மரபின்படி பாஜக எனும் சிலந்தியை அழைத்த போது, அது தன்னால் இயலாது என்று கூறவில்லை மறுக்கவில்லை, மாறாக ஆட்சி அமைக்கின்றேன், பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கம்பீரமாக வாஜ்பாய் தலைமையில் 13 நாள் ஆட்சி அமைத்ததை அறிவோம்.

ஆட்சி அமைக்க முடியாது இயலாது நம்மிடம் தேவையான அளவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பது உட்பட அனைத்தும் அறிந்ததுதான் பாஜக என்கிற சிலந்தி.

அறிந்தாலும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தாலும் ஒரு நாள் வாய்ப்புக் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து 13 நாள் வாஜ்பாய் பிரதமர், அத்வானி உள்துறை அமைச்சர்களாக அலங்கரித்தார்கள்.

ஆனால் எல்லோரும் ஒன்று கூடி ஈக்கள் எல்லாம் ஒன்று கூடி ஈக்களின் நல்வாழ்வுக்காக ஒற்றுமைக்காக மேம்பாட்டிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் ஜோதி பாசுவை பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டுமென மன்றாடிய போது ஏற்பதற்கு மறுப்பு வந்தது. அதாவது வாய்ப்பு நழுவ விடப்பட்டது!

ஆனால் சிலந்தி (பா.ஜ.க) வாய்ப்பைப் பயன்படுத்தி 13 நாள் ஆட்சி, பின்னர் 13 மாத ஆட்சி, அதனைத் தொடர்ந்து 5 ஆண்டு ஆட்சி இடைவெளி விட்டு தற்போது தொடர்ச்சியாக 2014, 2019, 2024 எனச் சிலந்தியின் ஆட்சி தொடர்கின்றது.

ஒன்றியத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களையும் தனது வஞ்சக வலையில் வீழ்த்தி விட்டது. சிலந்தியின் ஆட்சி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கொடூரமான முறையில் ஈக்களைக் கொல்கிறது.

தங்களின் ஆட்சி ஈக்களுக்கான ஆட்சி என்று சொல்லிக் கொண்டே, ஈக்களுக்குரிய உரிமைகளை, ஜனநாயகத்தை அனைத்தையும் படிப்படியாக அபகரித்து ஈக்களின் கண் முன்னே அழித்தொழித்து வருகின்றது.

பெற்ற சுதந்திரம், அதன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியுமா? என்ற அச்சம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகின்றது.

நம் நாட்டை வழிநடத்தும் அரசியலமைப்புச் சட்டம் குப்பைக் கூடைக்குச் சென்று விடுமோ? அவ்விடத்தை மனுதர்மச் சட்டம் ஆக்கிரமித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளுமோ? என்ற அச்சம் மேலோங்குகிறது!

நாடு விடுதலை பெற்றவுடனே இந்தியக் குடிமக்களில் வயது வந்த அனைவருக்கும் வேறுபாடின்றி அளிக்கப்பட்ட மிகப்பெரும் ஜனநாயக உரிமையான வாக்காளர் உரிமை நிலைக்குமா? நீடிக்குமா? என்ற ஐயப்பாடு மட்டுமல்ல பெரும் பேராபத்தாக பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் அடியோடு நீக்கப்பட்ட அநியாயத்தை ஜனநாயகப் படுகொலையைக் கொஞ்சமும் கூச்சநாச்சமின்றிப் பார்த்தோம்!

(தொடரும்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button