மாநில செயலாளர்

கட்சி முன்னிலும் வேகப்பட வேண்டிய காலச் சூழல்

மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

தோழர்களே வணக்கம்

தோழர்களே, பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆறு இடங்களில் இந்தியா கூட்டணியில் போட்டியிடுகிறது. மேலும் நான்கு இடங்களில் நட்பு முறையில் போட்டியிடுகிறது. பொதுவாக நமது அணிக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகளும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் வலுப்பட்டுள்ளன.

பீகார் தேர்தலில் போட்டியிடும் நமது தோழர்களுக்கு வாக்குகள் சேகரிக்க நாகப்பட்டினத்தில் இருந்து தோழர் சிறுபான்மையினர் இயக்கம் தமிம் அன்சாரி, தாகூர் தர்க்கா பரம்பரி கே.முகமது மஸ்தா சாஹிப் இருவரும் மூன்று தினங்கள் 11 இடங்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தேசியத் தலைமையின் அழைப்பை ஏற்றுச் சென்றனர். தங்கள் அனுபவங்களை மாநிலக் கட்சிக்கும் தெரிவித்துள்ளனர்.

SIR சம்பந்தமாக திமுக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்ட முடிவுகள் நாம் அறிந்ததே. முதல் கட்டமாக நீதிமன்றத்தை நாடுவது, அடுத்து மக்கள் இயக்கம். மிகுந்த விழிப்போடு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து வாக்காளர் சரிபார்ப்புப் பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டாக வேண்டும்.

பீகாரின் பிரதமர் உரை தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல சட்டத்திற்கும் புறம்பானது. நமது கூட்டிசைவைச் சிதைப்பது.

பிரதமர் திமுகவைக் குறிவைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தமிழக முதல்வர் பீகார் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியதை பிரதமர் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் திமுக மீதான அப்பட்டமான பொய்.

நாட்டிலேயே பிறரை உறவினர்களாய்ப் பாவிக்கும் சிறந்ததொரு கலாச்சாரத்தைக் கொண்ட பூமி தமிழ் மண். இதன் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பிரதமர். கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது. பெண்களைப் பேணிப் பாதுகாக்கும் புதிய சமூகம் எழுக. நமது கோவை மாவட்டக் குழு தோழர்கள் பாதிக்கப்பட்டவரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் கண்டன இயக்கத்திற்குத் திட்டமிட்டு உள்ளனர்.

18 ஆம் தேதி சமூக நீதி நாள். தேசிய அளவிலான போராட்டத்திற்குக் கட்சியின் தேசியத் தலைமை அறைகூவல் விடுத்துள்ளது. தலித் மக்கள், பழங்குடிகள், பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் அன்று கண்டனக் குரல் எழுப்பும்.

நவம்பர் 3 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் ரிஷிவந்தியம் தொகுதியில் எட்டு கிராமங்களில் இருந்து ஏராளமான உழைக்கும் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சி இடையறாமல் பாடுபடுகிறது, மக்களுக்காகப் போராடுகிறது என்பதை அறிந்து இப்படிப் பல்வேறு கிராமங்களில் இருந்து கட்சியை நோக்கி வருகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தோழர்களே ஏராளமான பணிகள் கட்சி முன்னிலும் வேகப்பட வேண்டிய காலச் சூழலை எதிர்கொண்டிருக்கிறோம்.

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button