நேபாளத்தில்இணையும் மாவோயிஸ்ட் உள்ளிட்ட ஏழு கட்சிகள்

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இளம் தலைமுறையினர் (நிமீஸீ ஞீ) நடத்திய பெரும் போராட்டத்தால், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி உட்பட அமைச்சரவை பதவி விலகியது. அந்நாட்டு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் பிளவுபட்டு இருப்பது, மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிகளும் இந்துத்துவா அமைப்புகளும் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) தலைமையிலான சி.பி.என் (மாவோயிஸ்ட் மையம்) உட்பட நேபாளத்தில் உள்ள ஏழு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய நவம்பர் 2 ஆம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளன. சி.பி.என் (ஐக்கிய சோசலிஸ்ட்), நேபாள சோசலிஸ்ட் கட்சி, சி.பி.என் (சோசலிஸ்ட்), ஜன சமாஜ்வாதி கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்-சோசலிஸ்ட்), பிப்ளவ் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த சி.பி.என் (சம்யாவதி) சிரான் பிரிவு ஆகிய கட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
“கட்சியின் வழிகாட்டி சித்தாந்தமாக மார்க்சியம்-லெனினியம் இருக்கும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாப்பதிலும், சோசலிசத்திற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் கவனம் செலுத்துவது உடனடி உத்தியாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மக்களிடமும் நாடாளுமன்றம் உட்பட அனைத்துத் தளங்களிலும் அமைதியான முறையில் போராட்டம் தொடரும்” என்பதும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், அந்நாட்டின் மிகபெரும் கட்சியாக உள்ள கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

