கட்டுரைகள்

கொடூர சிலந்தி – 1

கிராமத்தான்

ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் அச்சமற்ற, ஆற்றல்மிகு இளம் தோழர்களே பல்வேறு பணிகளில் உங்களின் நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளீர்கள்.

இரவு-பகல் என்று வேறுபடுத்திப் பார்க்காமல் எந்நேரமும் பொது வாழ்வில் ஈடுபட்டு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு மிகச் சிறந்த செயல்பாட்டாளர்களாகப் பணியாற்றி வருகின்றீர்கள்.

இப்படி ஓய்வு -ஒழிச்சலின்றி களப்பணியில், மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் உங்களிடத்தில் மேலும் ஒரு வேலையைக் கொடுப்பது சரியல்லதான்.

ஆனாலும் உங்கள் பணிகளுக்கிடையில் ஒரு சிறு வேலையைச் செய்திட வேண்டும் என்று உங்களிடத்தில் விண்ணப்பம் செய்வதைத் தவறாக எண்ணிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வேண்டுகோள் விடுக்க எண்ணியது தவறாகாது என்ற நம்பிக்கையுடன் வேண்டுகோள் முன்வைக்கப்படுகின்றது.

இவ்வேண்டுகோளை முன்வைக்கும் முன்பாக இப்பணியைச் செய்து முடித்திருக்கலாம். இல்லையெனில் இப்பணியை மேற்கொள்ளுங்கள்.

வேரொன்றும் இல்லை, ஜெர்மன் நாட்டில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர், வில் ஹெல்ம் லீப்னெஹ்ட்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபட்டவர், எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.

இவரைப் பற்றி உலகம் போற்றும் உத்தமத் தலைவரான மாமேதை லெனின் அவர்கள் குறிப்பிடும் போது, ‘வில் ஹெல்ம் லீப்னெஹ்ட் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்தவர்’ என்று குறிப்பிடுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார்.

உலகின் மாமேதைகள் எனப் போற்றப்படும் இரட்டையர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவரிடமும் மிக நெருங்கிய நண்பராய் சக தோழராய்த் திகழ்ந்தவர்.

தலை சிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனி மட்டுமின்றி அதன் எல்லைகளுக்கு அப்பாலும், முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு மிக்கவராகத் திகழ்ந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலை சிறந்த போராட்டத் தலைவராக மட்டுமன்றி ஆற்றல் மிக்க பிரச்சாரகராகவும் விளங்கியவர்.

அவர் எழுதிய “சிலந்தியும் ஈயும்” எனும் சின்னஞ்சிறு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூலாகும்.

15 பக்கங்கள் கொண்ட இந்நூல் ரா.கிருஷ்ணையா அவர்களால் தமிழாக்கம் செய்யப் பெற்று, நமது புகழ்மிக்க நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் சிறு நூல் வரிசையில் வெளியிடப் பெற்றுள்ளது. விலை ரூபாய் 15 தான். 15 பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் படித்திருக்கக் கூடும். இல்லையெனில் உங்களின் பணிகளுக்கிடையே சிறிது நேரம் ஒதுக்கிப் படியுங்கள்.

சிலந்திப் பூச்சியை நாம் நன்கறிவோம். கிராமங்களில் அதனை எட்டுக்கால் பூச்சி என்றும் அழைப்பதுண்டு.

சிலந்திப் பூச்சி சின்னஞ்சிறு பூச்சிதான், அது தனது பெருத்த வயிற்றைக் காப்பாற்றிக் கொள்ள, இருந்த இடத்தில் பதுங்கி அமர்ந்து கொண்டு வஞ்சகமாக உணவைத் தேடிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள்.

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் சிலந்திப் பூச்சி குடியிருந்து வருகின்றது. அதனை நாம் பெரிதுப்படுத்துவதில்லை, நாம் பலவற்றை அலட்சியப்படுத்தி விடுகின்றோம். எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம், எதார்த்தமாக கருதுகின்றோம். இவ்வாறு நாம் இருப்பதால் நாம் ஏமாற்றப்படுகிறோம், வஞ்சிக்கப்படுகின்றோம், வஞ்சகமும் விஞ்சிவிடுகின்றது. அதன் பின்னரே வஞ்சகத்தின் அபாயத்தைப் பற்றியும் வஞ்சிக்கப்பட்டது குறித்தும் கவலைப்படுகின்றோம். வரும் முன் காக்கத் தவறினால் விளைவுகள் விபரீதமாகி விடுகின்றன.

ஒரு சின்னஞ்சிறு பூச்சி அப்பூச்சிக்காக இவ்வளவு பீடிகையா என்று கேட்கக் கூடும்.

கேள்வி நியாயமாகத்தான் படுகின்றது. ஆனால் அப்பூச்சி என்ன செய்கிறது எப்படிப்பட்ட வஞ்சக வலையை வடிவமைக்கின்றது. அதன் மூலமாக ஈயின் இரத்தத்தை உறிஞ்சிச் சுரண்டுகிறது என்பதனைப் பார்க்க வேண்டும்.

நமது வீடு மாடி வீடாக இருக்கலாம், ஓடுகளால் ஆன ஓட்டு வீடாக இருக்கலாம், கூரை வீடுகளாக இருக்கலாம், ஓலைக் குடிசை வீடாக இருக்கலாம். இவை எத்தகைய வீடுகள் ஆனாலும் அத்தகைய வீட்டைக் கட்டியவர்கள் மனிதர்கள்தான், ஆம் நாம்தான் வீட்டைக் கட்டினோம். இது நமக்கான வீடு, நமது சொந்த வீடு அல்லது வாடகை வீடு, எத்தகைய வீடானாலும் நம் வீட்டிற்குள் அனுமதியின்றி யாரும் வீட்டின் உள்ளே வந்து விட மாட்டார்கள்.

ஆனால் இந்த சின்னஞ்சிறு பூச்சி எவருடைய அனுமதியும் இன்றி நம் வீட்டுக்குள் அதிகாரத்தோடு குடி புகுந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது.

அது அமர்ந்திருப்பது நமக்குத் தெரிகின்றது. ஆனால் அதுகுறித்து நாம் கவலைப்பட்டது இல்லை. நம் வீட்டில் நமது அனுமதியின்றி அது வீடு கட்டுகிறது. வீட்டிற்குள் இன்னொரு வீடு கட்டுகிறது.

நாம் வீடு கட்ட இடத்தைத் தேர்வு செய்வது போன்று, நமது வீட்டில் அது வாழ்வதற்கான இடத்தினை சிலந்தி தேர்வு செய்து வீட்டைக் கட்டிக் கொள்கிறது.

வீடுகள் மட்டுமல்ல, மாட்டுக் கொட்டகை, ஆட்டுக் கொட்டகை, மரம், செடி, கொடி என எங்கெங்கே வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கெல்லாம் சிறிதும் பெரிதுமான வீட்டைக் கட்டிக் கொள்ளும்.

சிலந்தி கட்டுகிற வீட்டை மனிதர்களால் கூட கட்ட முடியாது. அவ்வளவு நேர்த்தியாக வீட்டைக் கட்டும். தனது வாயில் இருந்து வரும் திரவத்தைக் கொண்டு கால்களால் வலை பின்னுகிறது, குறுக்கும் நெடுக்குமாக அங்கும் இங்குமாக வலை பின்னுகிறது.

மிக நேர்த்தியாக, கெட்டியாக அறுந்து விழுந்து விடாதபடி கட்டி முடித்து விட்டது. பிற உதவிகளின்றித் தனக்கான வீட்டைத் தானே கட்டி முடித்து விடுகின்றது.

வலை பின்னி முடித்து, அதன் நடுவில் படுத்து அது உறங்காது ஓய்வெடுக்காது.

மாறாக தனது முகத்தின் முன் உள்ள இரண்டு கண்களையும் அகல விரித்துக் கொண்டு வலையில் ஒரு ஓரத்தில் பதுங்கிக் கொள்கிறது. அது இருக்குமிடம் யாருக்கும் தெரியாது. முண்டாமல் முணுகாமல் தனது திருட்டுத்தனம் எவருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொள்ளும்.

ஏன் இந்தப் பதுங்கல்? – அச்சப்பட்டல்ல.தனது பசி வெறியைப் போக்கிக் கொள்ளக்கூடிய பதுங்கல், வஞ்சகப் பதுங்கல். மற்றொரு உயிரின் இரத்தத்தைக் குடித்து தனது வயிற்றை நிரப்பிக் கொள்ள விரித்திருக்கும் வஞ்சக வலையில் ஒரு ஓரத்தில் ஒரு மூலையில் பதுங்கி இருக்கும். தன் கொடூர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பதுங்கிக் காத்து இருக்கும் சிலந்தி.

ஓடையில் அமைதியாய்க் காத்திருக்கும் கொக்கு போன்று நமது ஔவை பாட்டியார் மிக அழகாக இதனைக் கூறியுள்ளார்.

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு.

அமைதியாக, அசையாமல், வாடி வதங்கி சோகத்தின் உச்சத்தில் பார்ப்பவர்க்குப் பரிதாபத் தோற்றத்துடன் நிற்கும். தான் இருக்குமிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் சிறு சிறு மீன்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்.

கொக்கு ஏதோ சைவம் போன்று மீனையே விரும்பாதது போன்று பொய் வேடமிட்டு தன் கால் வலியைப் பொருட்படுத்தாது காத்திருக்கும். சிறு சிறு மீன்கள் ஓடிய ஓடையில் பின்னர் பெரிய மீன் வரும் தன் அழகால் லபக் என்று கொத்திக் கவ்வியவாறு நொடிப்பொழுதும் காத்திராமல் பறந்து சென்று பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து மீனை துடிக்க துடித்துக் கொன்று தன் பசியைப் போக்கிக் கொள்வதை நாம் அறிவோம் பார்த்தும் இருக்கின்றோம்.

சிலந்தி விரித்த வலையில் எங்கோ ஓரிடத்தில் எவருக்கும் தெரியாத இடத்தில் தனது கண்களை உருட்டியவாறு அமர்ந்திருக்கின்றது.

அப்பாவி ஈ, ஏதும் அறியா ஈ, தனது அறியாமையால் அல்லது கவனக்குறைவால் அல்லது அலட்சியத்தால் அங்கும் இங்குமாகப் பறந்து, வஞ்சக வலை என்று அறியாது சிலந்தி வலையில் அமர அங்கிருந்து மீள முடியாமல் சிக்கிக் கொள்கிறது. அங்கிருந்து மீண்டு விட வேண்டும் என்று அது மேற்கொண்ட முயற்சி தோற்ற நிலையில் நடுநடுங்கி வசமாக மாட்டிக் கொண்ட நிலையில் நிலை தடுமாறி அச்சத்தால் பீதியால் கவலையுற்று, காப்பாற்ற யாருமில்லையா? தன் உயிர் காக்க வேண்டுமென மன்றாடுகின்றது. அதன் பரிதாபத்திற்குரிய நிலையை எண்ணி உதவிட யார் வருவார்?

ஈ யின் கதறலுக்குக் காத்திருந்த கொடுங்கோல் சிலந்தி, தான் நெய்திட்ட வலை, வஞ்சக வலை அறுபடாமல் அவசரம் காட்டாமல் தன் கோரக் கால்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்து மெல்ல மெல்ல நகர்ந்து ஈயை நோக்கி நகர்கின்றது. சிக்குண்டு பரிதாபத்துக்குரிய ஈயோ தன் வேண்டுதல் பயனளித்து விட்டதாகக் கருதுகின்றது.

தன்னைப் படைத்திட்ட ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற ஒரு தூதுவனை அனுப்பி இருப்பதாக எண்ணி மகிழ்ந்து, நகர்ந்துவரும் பூச்சி சற்று வேகமாக வரக்கூடாதா என்று ஏங்குகிறது.

வஞ்சக சிலந்தி தனது கொடூரக் கண்களை, அகன்று விரித்து எட்டுக் கால்களை வேகமெடுக்கச் செய்து தான் விரித்த வஞ்சக வலையில் வசமாக மாட்டிக் கொண்ட பரிதாபத்திற்குரிய
ஈயின் அருகில் வந்துவிட்டது.

நிலை குலைந்த நிலையில் உள்ள ஈக்குத் தன்னை நெருங்கி வரும் உருவம் தன்னைக் காக்க வருகின்றதா அல்லது தன் உயிரை மாய்க்க வருகின்றதா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. நெருங்கி வரும் உருவத்தின் கண்களைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. பீதி கிளப்புவதாக உள்ளது. வித்தியாசமான உருவமாகத் தெரிகின்றது. இதற்கும் நமக்கும் வாழ் நாளில் எந்தப் பகையும் இல்லையே அப்படி இருக்க நம்மை ஏன் அப்பூச்சி கொல்ல வேண்டும் என் தனக்குத்தானே கேள்விகள் கேட்டு சமாதானம் அடைகின்றது. ஆனாலும் அச்சமும் நீங்கிய பாடில்லை. எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் ஈயால் வர முடியவில்லை.

நெருங்கி விட்டது மிக நெருக்கமாக வந்துவிட்டது துடியாய்த் துடித்து உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடும் ஈயிடம் சிலந்தி நெருங்கி விட்டது. தன் உருண்ட அகண்ட கண்களைக் கொண்டு ஈயிடம் நெருங்கி தன் கோரக் கால்களைக் கொண்டு ஈயை அங்கும் இங்கும் நகர்ந்திடாதபடி சுற்றி வளைத்து விட்டது.

ஈயோ ஐயோ கடவுளே காப்பாற்று காப்பாற்று என்று கதறி என்ன பயன்?

சிலந்தி ஈயை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து வளைத்து அதன் உடம்பில் உள்ள இரத்தம் முழுவதையும் கிஞ்சிற்றும் மிஞ்சாமல் ஒட்ட உறிஞ்சிக் குடித்து தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு ஏதும் அறியாத அப்பாவி போல் மெல்ல நகர்ந்து தனது இருப்பிடத்தை அடைந்து பழையபடி அமைதியாக அடுத்து ஈ எப்போது வரும் என்று காத்திருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button