
சமூகத்தில் எதைச் சொல்லி இழிவாகப் பேசினார்களோ அதையே ஆயுதமாக்கி உடைப்பதற்காகத் தான் பேசிய அத்தனை இடங்களிலும் “கண்ணகி நகர் கார்த்திகா” என்றே அவர் கூறினார்.
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி, பக்ரைன் நாட்டில் அக்டோபர் 19 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 103 வீரர்களும் 119 வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இங்கு நடைபெற்ற கபடிப் போட்டியில் இந்திய அணி விறுவிறுப்பாக விளையாடி, இரண்டு தங்கங்களை அடுத்தடுத்து வென்று சாதனை படைத்தது.
மகளிர் கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி ஈரானைப் புரட்டியெடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 75க்கு 21 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆடவர் கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் ஈரானுடன் மோதிய இந்திய அணி, 35 க்கு 32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
இந்திய கபடி அணியின் இந்த அசத்தல் வெற்றிக்கு கண்ணகி நகர் கார்த்திகாவும் (மகளிர் பிரிவு), திருவாரூரைச் சேர்ந்த அபினேசும் (ஆடவர் பிரிவு) முக்கிய காரணமானவர்.

கண்ணகி நகர் கார்த்திகா, தேசிய அளவிலான கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் இதுவரை 11 முறை தமிழ்நாட்டுக்காக விளையாடியவர். அவற்றில் 8 பதக்கங்களை வென்றவர். ஐந்து முறை தமிழ்நாடு அணியின் தலைவராக (கேப்டன்) பொறுப்பேற்று அணியை வழிநடத்தியவர். தற்போது இந்திய இளையோர் பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக செயலாற்றி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்தி தலைமைத்திறனை வெளிப்படுத்தியவர். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
தங்கம் வென்று தமிழ்நாடு திரும்பிய கார்த்திகாவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கண்ணகி நகரில் கொண்டாட்டங்களுடன் அவர் வரவேற்கப்பட்டார். அவர் பேசிய இடங்களில் எல்லாம், தன்னுடைய பெயர் “கண்ணகி நகர் கார்த்திகா” என்றே கூறினார்.
எதற்காக அப்படிச் சொன்னார்?
சென்னை மாநகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரிலும் ஆற்றங்கரையோர ‘ஆக்கிரமிப்புகளை’ அகற்றுகிறோம் என்று பெயரிலும் ஏராளமானோர் கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற இடங்களுக்கு வீசியெறியப்பட்டனர்.
அடிப்படை வசதிகளோ, போதுமான காற்றோட்டமோ இல்லாத குடியிருப்புகள், ஒரு குடும்பம் வசிப்பதற்குக்கூட உதவாத மிகச்சிறிய அறைகள், வேலை, தொழில் செய்த இடங்களில் இருந்து பிடுங்கி எறியப்பட்டதால், புதிய இடத்தில் அவற்றை உருவாக்கிக் கொள்ள முடியாத துயரம், இப்படி வசிக்கும் மக்களை குற்றவாளிகளைப் போன்று அணுகும் போக்கு, இவை அனைத்தும் கண்ணகி நகர் மக்கள் மீது திணிக்கப்பட்டவை. இதனால் அவர்கள் படும் துன்பங்கள் ஏராளம்.
இந்த நிலமை மாற்றப்பட வேண்டும்.
அதற்கு எதை வைத்து அந்த மக்களை இழிவுபடுத்தினார்களோ அதையே ஆயுதமாக்கி, அதனை உடைக்கும் அரசியல், இதை உயர்த்திப் பிடித்தவர் கார்த்திகா. தான் பேசிய அத்தனை இடங்களிலும் கண்ணகி நகர் கார்த்திகா என்றே அறிவித்தார்.
பயிற்சி எடுப்பது, போட்டிகளில் வெற்றி பெறுவது, அரசிடம் விருதுகள், உதவிகளைப் பெற்று, தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்வது என்பதுதான் விளையாட்டு வீரர்களின் வழக்கம். இதற்கு மாறாக, “நான் சமூக மனுஷி, என்னை உருவாக்கிய, நான் வளர்ந்த சமூகம் இதுதான். இதை பெருமையாகக் கொள். இதை மேம்படுத்து, அதற்காகப் போராடு” என்பதைத்தான் கண்ணகி நகர் கார்த்திகா வெளிப்படுத்துகிறார்.
அதாவது, “நான் கண்ணகி நகர் ஆளு. எங்கள் பகுதி மக்கள் குற்றப் பின்புலம் கொண்டவர்கள் என்ற அடையாளத்தை என்னுடைய வெற்றி உடைக்கும் என நம்புகிறேன். கண்ணகி நகரில் உள்ள அனைவரும் கடின உழைப்பாளிகள், உழைக்கும் வர்க்கத்தினர்” என சென்னை திரும்பிய கார்த்திகா தெரிவித்தார். இதுதான் ஓடப்பர் உதையப்பராகி, உயரப்பராகும் பாட்டாளி அரசியல்.