கட்டுரைகள்

விஜய் நடத்திய நாடகம்!

த.லெனின்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நேரில் சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன் என, உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை.

அத்தனை பேரின் வீட்டிற்கும் விஜய் தனித்தனியாக செல்வது வாய்ப்பில்லை. அதனால் கரூரிலேயே ஒரு மண்டபத்தை பிடித்து அங்கே அந்த குடும்பத்தினரை வர வைத்து இரங்கல் கூற நினைத்தோம் என போகிற போக்கில் அவரது அடிப் பொடிகள் அடித்துப் பேசுகிறார்கள்.

மண்டபம் பிடிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இடத்தை வாடகைக்கு விடுபவர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. சிரமப்பட்டு இடத்தை உறுதி செய்தால், நாங்கள் கேட்கும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதில் பிரச்னைகள் இருக்கிறது எனக் காவல்துறையினர் கையை விரிக்கின்றனர் என போகிற போக்கில் ஒரு குற்றச்சாட்டை எந்த ஆதாரமும் இன்றி முன்வைக்கிறார்கள். அப்படி எனில் மாமல்லபுரம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது அங்கு எப்படி அனுமதி கிடைத்தது?

அதை அடுத்த மேலும் ஒரு குற்றச்சாட்டாக, அனுமதி கடைசி நேரத்தில் தான் கொடுக்கிறார்கள் என்று ஒரு செய்தியை பரப்பினார்கள் கடந்த 27 ஆம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த, 26 ஆம் தேதி தான் எங்களுக்கு அனுமதி கிடைத்தது, என்கிறார்கள். அப்படியென்றால் காவல்துறையிடம் கடிதம் எப்போது கொடுத்தீர்கள் என்று கேட்டால் 25ஆம் தேதி என்கிறார்கள் இதுதான் அவர்களின் அறியாமை, முயலாமை குறித்த செய்தியாகும்.

இவர்கள் தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று பேசி வருகிறார்கள்.

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு வரும் நவம்பர் 5ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் விஜய் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதன் மூலம் இவர்கள் அனுமதி மறுக்கப்படுவதாக சொன்னது எவ்வளவு பெரிய பொய் என்று அம்பலமாகி விட்டது.

20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்

தனது பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்த நிலையில், விஜய் நேரில் வர வேண்டுமெனக் கூறி அவர் அனுப்பிய 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை ஒரு குடும்பத்தினர் திருப்பி அனுப்பியுள்னார்.

மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக தரப்பில் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பிவிட்டதாக சங்கவி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்த சங்கவியின் கணவர் ரமேஷ், கடந்த செப்டெம்பர் 27 அன்று தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

“நேரில் வந்து விஜய் ஆறுதல் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தை வைத்து இறந்த உயிரை யாராலும் திருப்பித் தர முடியாது” என, செய்தியாளர்களிடம் ரமேஷின் மனைவி சங்கவி கூறியுள்ளார்.

“நாங்களாக தேடிச் சென்று விஜயைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை” எனவும் உறுதிப்பட அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாதிக்கப்பட்ட தங்களைத் தவிர்த்துவிட்டு தங்களின் வேறு சில உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறும் நிகழ்வில் இடம்பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் இது வரை தரப்படவில்லை. அப்படியெனில் இதில் எவ்வளவு பெரிய நாடகம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர முடியும்!

விஜய் பேசியது என்ன?

நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய்யை சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன?

கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் செல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. உடனே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் என உயர்த்தி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.அதாவது இரட்டிப்புத்தொகை அளிக்கப்பட்டது அதேபோல இரண்டு மடங்கு வேகத்துடன் அமைச்சர்களை காட்டிலும் ஓடோடி அப்பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாமே அதில் ஏன் அந்த வேகம் இல்லை?

கரூர் கோர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒத்திவைப்பதாக, அக்டோபர் 1 அன்று அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனித்தனியாக சந்தித்த விஜய்!

உயிரிழந்தவர்களின் படங்களுக்கு தனித்தனியாக மலர் அஞ்சலி செலுத்திய விஜய், பின்னர் தங்களுக்கு ஆறுதல் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை தமிழக வெற்றிக் கழகம் வெளியிடவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில், ஊடக விவாதங்களில் விஜய் ஆதரவாளர் என்ற பெயரில் தகவல் என்றே அதிகாரப்பூர்வமற்ற பல செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

எங்களுக்கு இருந்த ஒரே மகனும் உயிரிழந்துவிட்ட வேதனையோடுதான் சென்றோம் எனக் கூறுகிறார் முருகேசன்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இவரது மகன் தாமரைக்கண்ணன் உயிரிழந்துவிட்டார்.

தனது மகன் எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, தரைவிரிப்பு ஒட்டும் வேலையைச் செய்து வந்ததாக முருகேசன் குறிப்பிட்டார்.

விஜய் பேசும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை எனக் கூறிய முருகேசன், ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வந்து அவர் பேசினார். கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவிகளைச் செய்து தருவதாகக் கூறினார். மருமகளுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் அதற்கான உதவிகளைச் செய்து தருகிறேன் என உறுதியளித்தார் எனவும் தெரிவித்தார்.

கரூர் சம்பவம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘என்ன நடந்தது என்றே தெரியவில்லை’ எனக் கூறி தலைகுனிந்து கொண்டார். கரூர் சம்பவம் குறித்து வேறு எதையும் அவர் பேசவில்லை எனவும் கூறியுள்ளார்.

சாட்சியங்களை கலைக்கவா இந்தச் சந்திப்பு?

இந்தச் சூழலில் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் அழைப்பின் மூலம் விஜய் பேசினார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதுவும் இந்தக் கட்சியைச் சார்ந்த மாவட்டச் செயலாளர், பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகு கடந்த திங்கள்கிழமையன்று காலை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் தனித்தனியாக ஆறுதல் கூறியுள்ளது அந்த வழக்கில் தாஜா செய்வதற்கான முயற்சியாக ஏன் இருக்கக்கூடாது? சாட்சிகளை கலைப்பதாக அமையலாம் அல்லவா? விசாரணை வளையத்தில் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இப்படி பேசுவதும், அழுவதும் உலகத்தில் எங்குமே நிகழ்ந்தது இல்லை! அதேபோல உலக அளவில் இரங்கல் தெரிவித்து பொன்னாடை போர்த்திய ஒற்றைத் தலைவன் விஜய் மட்டுமே!

சி.பி.ஐ விசாரணை ரகசியம்!

செப்டம்பர் 27 அன்று நடந்த நெரிசல் மரணங்களுக்குப் பிறகு, தமிழக அரசு காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 அன்று அந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள்,சென்னை பிரிவால் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் எந்த அதிகார வரம்போ அல்லது பங்கும் இல்லை என்றும் தெரிவித்தனர். மக்கள் கவனத்திலிருந்து எஃப்ஐஆர் ஏன் மறைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது எந்த வகையில் நியாயம்?
சிபிஐ எஃப்.ஐ.ஆரை வெளியிடாமல் இருப்பது முறையற்றது. இது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், டி.வி.கே. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உட்பட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்னை வந்து நேரடியாக சந்தியுங்கள் என இப்போது சி.பி.ஐக்கு சவால் விடுவாரா விஜய்?

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. என்கிறது குறள்.

நம்மை அழிக்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழித்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

எனவே தமிழ்நாட்டின் பகையாக, பாசிசத்தின் ஒற்றர் படையாக ஊடுருவி உள்ள இந்த தவெகவின் அரசியல் அற்ற கோமாளித்தனத்தை முறியடிப்போம்! முள்முரத்தை பெயர்த்தெறிய வேண்டுமே தவிர அதற்காக தமிழ்நாடு முள்கிரீடம் சூட்டிக் கொள்ள முடியாது என்பதை புரிய வைப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button