கட்டுரைகள்

புதுச்சேரியின் மகளிர் திலகம்

நாரா.கலைநாதன்

புதுச்சேரி விடுதலை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் அவர்களின் துணைவியார் தோழியர் சரசுவதி சுப்பையா.

இவர் சுமார் அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தனது கணவருடன் தன்னைப் பொதுவாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்டு பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் பஞ்சாலைகளில் பணியாற்றிய பெண்களை அணிதிரட்டியும், விடுதலைக்குப் பின்னர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அமைப்பை புதுச்சேரியில் நிறுவி தன்வாழ்நாளின் இறுதிவரை பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் போராடிய ஒப்பற்ற மாதர்குல மாணிக்கமாவார்.

அவர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்ற நேரத்தில் (22.10.2025) அவரது போராட்ட வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறைக்கு நினைவுக்கூர்வது அவசியமாகும்.

வேலூர் மாவட்டம் ஆரணியைச் சார்ந்த சடகோபன் சூடாமணி தம்பதியா¤ன் இரண்டாவது மகளாகப் பிறந்த இவர் சென்னை இராணிமேரி கல்லூரியில் இண்டர்மீடியட் வரை பயின்றவர்.

1943 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் வ. சுப்பையாவிற்கும் இவருக்கும் திருவண்ணாமலையில் ஒன்றுபட்ட ஆற்காடு மாவட்டச் செயலாளராக இருந்த புருஷோத்தமன் தலைமையில் திருமணம் நடந்தது.

திருமணமான நான்கு மாதத்திலேயே 1944 ஜனவரியில் அவரது கணவர் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் 1945 செப்டம்பர் மாதம் வரை சுமார் ஒன்றரை ஆண்டு காலம் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார் சரசுவதி சுப்பையா.

இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது கணவரின் அரசியல் பணிகள் குறித்து அறிந்து கொண்டார்.

புதுச்சேரிக்குத் திரும்பியவுடன் தனது கணவரின் வழிக்காட்டுதல்படி பிரெஞ்சிந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக பஞ்சாலைகளில் பணியாற்றிய பெண்களையும், கிராமப்புறங்களில் வசித்து வந்த பெண்களையும் அணிதிரட்டுகின்ற பணிகளில் முனைப்புடன் செயல்படத் தொடங்கினார் சரசுவதி சுப்பையா.

1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ம் நாள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரெஞ்சிந்திய மாதர்கள் மாநாட்டினை ரோடியர் மில் மைதானத்தில் நடத்தினார். அந்த மாநாட்டில் 22 வயதே நிரம்பிய சரசுவதி சுப்பையாவின்

எழுச்சிமிக்க உரையின் சில வரிகள் இதோ.

வீட்டிற்குள்ளிருக்கும் அடிமைத்தனம், நாட்டுக்குள்ளிருக்கும் அடிமைத்தனம் அத்தனையும் உடைத்தெறிந்து விட்டு பரிபூரணச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதுதான் பெண்களின் லட்சியம். இச்சுதந்திரத்தைப் பெறுவதற்கு எல்லாத்தரப்பட்ட பெண்களும் ஒன்றுபட்டு ஒரு இயக்கத்தை நடத்துவதற்குத்தான் பிரெஞ்சிந்திய மாதர் சங்கத்தை அமைத்துள்ளோம்.

ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக சம உரிமையுடன், சமதர்மத்துடன் வாழக்கூடிய ஒரு புதிய சமுதாயத்தை நாங்கள் படைப்போம்.

பெண்கள் நடத்திய இந்த மாநாட்டில்தான் புதுவைக்குப் பரிபூரண சுதந்திரம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களான அவுக்கம்மா, பச்சையம்மாள், அங்கம்மாள், ஆவணியம்மாள், முத்துலட்சுமி அம்மா, ஜெகதாம்பாள், அஞ்சலாட்சி, கருப்பாமணியம்மாள், கோவிந்தம்மா, சின்ன பொண்ணு போன்ற பலர் பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல தாக்குதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களே பின்னாளில் புதுவை ராஜ்ய மாதர் சங்கத்தின் முதல் தலைமுறை ஊழியர்களாகப் பணியாற்றினார்கள்.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப் பின்னர் 1955 ம் ஆண்டில் புதுவை ராஜ்ய மாதர் சங்கம் என்ற அமைப்பினைத் தொடங்கி 2005 வரை சுமார் ஐம்பது ஆண்டு காலம் அந்த அமைப்பினைச் சிறப்புடன் நடத்தி வந்தார். பெண்கள் சுய தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகப் புத்தக பைண்டிங் பயிற்சி, தையல் பயிற்சி, கைவினைப் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளித்து அவர்களை சுய தொழிலில் ஈடுபடச் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தினார்.

1959 முதல் 1964 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுப் பெண்கல்விக்கு முன்னுரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சத்துணவு, பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவை குறித்து குரல் எழுப்பிய புதுச்சேரியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் சரசுவதி சுப்பையா.

1968 முதல் 1978 வரை புதுவை நகர்மன்ற துணைத்தலைவராகவும், 21.04.97 முதல் 26.06.2002 வரை புதுச்சேரி சமூக நல ஆலோசனை வாரியத் தலைவர் பொறுப்பு ஏற்றும் திறம்படப் பணியாற்றினார்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் துணை தலைவராகப் பணியாற்றி வந்த இவர் 1963ல் மாஸ்கோவிலும், 1966 பெர்லினிலும் நடைபெற்ற சர்வதேசப் பெண்கள் மாநாட்டிலும் பங்கேற்றார்.

தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் சமூகப் பிரச்சனைகளுக்காகவும், வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்விற்கு எதிராகவும், 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் சரசுவதி சுப்பையா.

புதுச்சேரி அரசு முதல் முறையாக ‘மகளிர் திலகம்’ விருது வழங்கி இவரைச் சிறப்பித்தது.

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்தியப் பொதுக்குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய இவர் இதயத் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 4 அன்று மறைந்தார்.

ஒரு போராளியின் வாழ்க்கைத் துணைவராக, விடுதலை இயக்கச் செயல் வீரராக, பெண்ணின தலைவராக, சமூக சேவகராக, எல்லாவற்றிற்கும் மேலாக அர்பணிப்புமிக்க கம்யூனிஸ்டாக வாழ்ந்து தனது கணவரின் விருப்பப்படி தாங்கள் வாழ்ந்த பலகோடி மதிப்புடைய பூர்வீக வீட்டை மாணவர்களுக்கான சமூக விஞ்ஞான ஆய்வு மையம் அமைத்திட தான் வாழும் காலத்திலேயே அரசிடம் ஒப்படைத்து மறைந்த தோழர் சரசுவதி சுப்பையாவின் நினைவைப் போற்றி வணங்குவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button