
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்; போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
காலனிய அடிமைத்தனத்திற்கு எதிராக, மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக, மக்கள் போராடி வெற்றி கண்டுள்ளார்கள்.
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நாட்டு மக்கள் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகால இடைவிடாத போராட்டத்தின் மூலம் வெற்றி கண்டார்கள்.
புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்ததை எதிர்த்து அம்மக்கள் போராடி வெற்றி பெற்றார்கள்.
இவை போன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் – அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் போராடி, வெற்றி பெற தங்களின் இன்னுயிர்களை இழந்துள்ளனர்.
அத்தகைய தியாகங்கள் எந்நாட்டவராயினும் போற்றத்தக்கதே!.
நாடுகளின் விடுதலையில் பல்வேறு நாடுகள் விடுதலை பெற்றுள்ளன என்றாலும் ஒரு நாட்டின் விடுதலை குறித்து உலகம் பேசுகின்றதே ஏன்?
உலக நாடுகளில் ரஷ்யாவும் ஒரு நாடுதான். அந்நாடு 1917 இல் விடுதலை பெற்றது.
அந்த நாடு இன்னொரு நாட்டின் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு அல்லல்படவில்லை. மாறாக அந்நாட்டைச் சேர்ந்த ஜார் சக்கரவர்த்தி ஆட்சி புரிந்தான்.
அந்நாட்டு மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அடிமை வாழ்வு வாழ்ந்தனர்.
இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று ஜாரின் ஆட்சி குறித்து பாரதி குறிப்பிடுகின்றார்.
அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை உலகின் மாபெரும் தலைவராகப் போற்றப்படும் மாமேதை லெனின் அவர்களின் தலைமையில் மக்கள் ஒன்றுபட்டு போர் புரிந்து மன்னர் ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை நிறுவினார்கள்!
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் விடுதலை பெற்றுள்ளது. எந்த நாட்டின் விடுதலைக்கும் இல்லா பெரும் சிறப்பு ரஷ்யப் புரட்சிக்குக் கிடைத்தது.
உலகமெங்கும் ரஷ்யப் புரட்சியை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்கள். உலகின் கவனத்தை ஈர்த்த புரட்சிதான் ரஷ்யப் புரட்சி.
புதிய ருஷியா எனும் தலைப்பில் உலக மகாகவி எனப் போற்றப்படும் நம் தமிழகத்தின் பாரதி ருஷியப் புரட்சியை, ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியை வரவேற்றுப் பாடுகின்றார்.
பாரதி கடவுள் நம்பிக்கையுடையவர். அவர் வணங்கும் பராசக்தியை மனதில் வைத்து ஆவேசமாகப் பாடுகின்றார்.
மாகாளி பராசக்தி உருசிய நாட்டிற் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் எனப் பாடிய கவி, அக்கவிதையில் ஜார் மன்னனது ஆட்சி எவ்வளவு கொடூரமிக்கது. உணவு இல்லை, நோய்கள் பல உண்டு, உண்மை சொல்வதற்கு பெருங்கொடுமைச் சிறையுண்டு, தூக்குண்டு என்று கூறிவரும் கவிஞர், இமயமலை வீழ்ந்தது போல் வீழ்ந்தான் ஜார் மன்னன் எனக் கூறுகின்றார். நிறைவாக அவர் கூறுவது
குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
அடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார்.
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்.
இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்
கிருதய யுகம் எழுகமாதோ!
இனி அந்நாடு அடிமை நாடல்ல,
குடிமக்களின் ஆட்சி நடைபெறும் நாடு!
அந்நாட்டின் விடுதலையை பாரதி மட்டுமல்ல, அந்நாட்டின் விடுதலை குறித்தும் விடுதலைக்குப் பின்னர் அந்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிப் போக்குகளையும் ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், இக்பால், வள்ளத்தோல் போன்றவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் வரவேற்று உள்ளனர். மேலும் ஆச்சாரியா நரேந்திர தேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களும் வரவேற்று உள்ளனர்.
இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கும் ஒரு புதிய எழுச்சியை, நம்பிக்கையை ரசியப் புரட்சி ஏற்படுத்தியது.
உலகில் உள்ள குறிப்பாக உழைப்பாளி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தது ரஷ்யப் புரட்சி.
உலகெங்கும் அடிமைச் சங்கிலிக்குள் அகப்பட்டு, விழிபிதுங்கி நின்ற நாடுகளின் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை யூட்டி, நாமும் விடுதலை பெறலாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம் என்ற பெரு நம்பிக்கையை உருவாக்கியது ருஷ்யப் புரட்சி.
இவை மட்டுமல்ல, உலகில் முதன்முதலாக செங்கொடியின் கீழ் உழைப்பாளி மக்களின் ஆட்சி, மெய்யானது.
இத்தகைய ஆட்சி அமைந்த உடனே அதன் முதல் பிரகடனமே உலக அமைதி & போரற்ற உலகம்!
1917 ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் உள்ள உழைப்பாளி மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 ஆம் நாளை மகிழ்ச்சிமிக்க தினமாக, வெற்றித் திருநாளாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.
சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டும், சக வாழ்வு கோட்பாட்டை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல, செயல்படுத்துவது என்பதில் உறுதிபூண்ட அரசு அதுவே உலகின் முன்னுதாரணம்.
1917 நவம்பர் என்பது சர்வதேச உறவில் புதியதொரு ராஜ தந்திரத்தை உருவாக்கியது உள்ளது.
யுத்தம், ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கொண்ட பழைய ஏகாதிபத்தியக் கொள்கைகளின் அடிப்படைகளையே தகர்த்தெறியும் கொள்கையைப் புதிய அரசு பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியது.
சமாதானம், சக வாழ்வு என்ற கொள்கை என்பது பலவீனத்தால் உருவானது அல்ல.
யுத்த பயங்கரவாதத்தை எல்லா நாடுகளிலிருந்தும் முற்றிலுமாகத் துடைத்தெறிந்திட வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தின் அடிப்படையில் பிறந்தது சோவியத் யூனியன் தொடர்ந்து பின்பற்றி வந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற கொள்கை நிலையில் அந்நாடு காட்டிய உறுதியின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் இந்தியா உட்பட விடுதலை பெற வழிவகை செய்ததுடன், அந்நாடுகள் எல்லாம் சோவியத் நட்பு நாடுகளாகவும் விளங்கின, விளங்கி வருகின்றன.
இந்திய விடுதலைப் போரில் மாமேதை லெனின் இந்திய நாட்டு மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்.
தேச பக்தர் திலகரை வெள்ளையர் அரசு தண்டித்ததையும், அதனைக் கண்டித்து பம்பாயில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை தோழர் லெனின் வரவேற்றுப் போற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவாவின் விடுதலைக்கு எதிராக, வெள்ளையர்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், போர்த்துக்கீசியப் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தபோது, அதற்கு எதிராக சோவியத், இந்திய மக்களுக்கு ஆதரவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ருசியப் புரட்சி என்பதும், ஜார் மன்னன் ஆட்சி வீழ்ச்சி என்பதும் அந்நாட்டோடு முடிந்துவிட்ட ஒன்றல்ல.
அப்புரட்சி என்பது உலகில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் அந்நாட்டு மக்களின் கண்களைத் திறந்தன.
காலனி ஆதிக்க முறை அறுபட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரமடைந்திட வழிவகை செய்தது.
உலகம் முழுவதும் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த மக்களிடத்தில் உழைப்பாளி மக்களிடத்தில் மாபெரும் ஓர் விழிப்புணர்வை ருஷ்யப் புரட்சி ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
அதனால்தான் அத்தகைய புரட்சி நாளான நவம்பர் 7ஆம் நாளை உலகம் கொண்டாடி மகிழ்கின்றது.
நவம்பர் புரட்சி தினத்தை நாம் கொண்டாடும் தறுவாயில், நமது நாட்டின் யதேச்சதிகார ஆட்சி குறித்தும் உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்து வரும் அட்டூழியங்கள் குறித்தும் நாம் கவலைப்படாமல் இருக்க இயலாது.
நவம்பர் புரட்சியின் மகத்தான கனவு என்பது சுதந்திரம், சமாதானம், சகவாழ்வு என்பதே!
சுதந்திர நாடுகளில் சுதந்திரம் இல்லை.
தீபாவளி பட்டாசு வெடிப்பது போன்று உலக நாடுகள் பலவற்றில் வெடிகுண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது..
ஏகாதிபத்திய நாடுகள் அப்பாவி மக்களை, குழந்தைகளை, பெண்களை ஆயுதம் கொண்டு அழிப்பது மட்டுமின்றி ஈவு இரக்கமற்ற முறையில் கொடூரமாகப் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் முதியவர்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் கொடூரங்களை உலகம் பார்த்துக் கொண்டுள்ளது.
இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி என்பது, குறைவதற்கு மாறாக அதிகரிக்கும் அபாயம் தொடர்கின்றது.
இந்நிலையில் நவம்பர் புரட்சி தின நன்னாளில், புரட்சிகர நாளில் நாம் அனைவரும் சபதமெடுக்க வேண்டியது.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவுடமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்.
எனப் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கூறிய கவிதை வரிகளைக் கணக்கில் கொண்டு போரற்ற உலகை, பொதுவுடமைச் சமுதாயத்தைப் படைத்திட சபதம் ஏற்போம்!
ஏகாதிபத்திய போர்களை முடிவிற்குக் கொண்டு வருவோம்!
சமாதான சகவாழ்வு என்கிற உயரிய கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!
இக்கொள்கைதான் வெற்றி பெறும்! வெற்றி வாகை சூடும்! அது தானாக அல்ல!
நமது அளப்பரிய, உண்மையான உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பால்!