கட்டுரைகள்

ஆதி திராவிடர் பள்ளி மாணவர் விடுதிகளைப் பாதுகாப்போம்

லி.பகத்சிங்

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியாக இணைப்பது அடிப்படைக் கல்வி மற்றும் பள்ளி மாணவர் நலனை புறக்கணிக்கும் செயல் என எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக, கல்வி பொருளாதார சமூக மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக, 1988 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனித்துறையாக உருவாக்கப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இரண்டு இயக்குநரகம், தாட்கோ மேம்பாட்டு கழகம், மாநில அளவில் தனி ஆணையம், மாநில சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு மற்றும் சமத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. ஆதிதிராவிடர் பள்ளிகள் – தங்கும் விடுதிகள், பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள், ஏகலைவா மாதிரி பள்ளிகள் போன்றவையும் கட்டமைக்கப்பட்டன.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி மாணவ மாணவியருக்கென 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப்பள்ளிகள், 98 மேல்நிலைப்பள்ளிகள் என தமிழ்நாடு முழுவதும் 1138 பள்ளிகள் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள் என பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 30 லட்சத்து 583 மாணவர்கள் பள்ளிக் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1141 பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், 151 கல்லூரி விடுதிகள், 18 ஐடிஐ விடுதிகள், 5 பாலிடெக்னிக் விடுதிகள், 6 முதுகலை பட்டதாரி விடுதிகள் என 1331 விடுதிகள் உள்ளன.

நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு கொள்கை விளக்கப்படி, பட்டியலின பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக, வேலைவாய்ப்பு, உற்பத்தியை பெருக்கி, பங்கீடு செய்து கொள்வதற்கான திட்டங்களை வகுத்து சமநிலை அடைய மாநில அரசு பாடுபட வேண்டும். பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக சிறப்பு உட்கூறுத் திட்டம் (துணைத் திட்டம்) 1980, அதேபோல் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டம்-1977 கொண்டுவரப்பட்டு இத்திட்ட நிதியை முறைப்படி நடைமுறைப்படுத்த வழிகாட்டுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. துணைத் திட்ட நிதிகளை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின்படி ஆதிதிராவிடர் மக்களுக்கு 20.1% பழங்குடி மக்களுக்கு 1.17% என்ற கணக்கில், தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் (2025-2026) ரூ.3924.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.1479.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படிப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்வாகத் துறையினரும் அதிகாரிகளும் போதுமான அக்கறை காட்டாத நிலை நீடிக்கிறது. ஆதிக்க மனப்பான்மை, அதிகார வர்க்கப் போக்கு போன்றவற்றால் அரசின் திட்டங்களும் சட்டங்களும் விளிம்பு நிலை மக்களை சென்றடைவதில்லை.

பள்ளிக் கல்வி நிலையங்களை பொருத்தவரை போதுமான வகுப்பறைகள், விடுதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அரசு இன்னும் உருவாக்கவில்லை. மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அமைத்து தரவேண்டியது அரசின் கடமை.

ஒன்றிய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மாணவர்களுக்கான உதவித்தொகை, பிரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை போன்றவை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாலும் அதிகாரிகளின் கெடுபிடிகளால் உதவித் தொகையைப் பெற முடியாமலும் பட்டியலின மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதில் ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு குழுக்கள் போன்றவற்றால் சிறப்பாக செயல்பட்டு கல்வித்தரம் உயர்ந்திருந்தது.

மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு, பயோமெட்ரிக் பதிவு, வசிப்பிட தூரம், ஆதரவற்ற, ஏழை மாணவர்களின் வசிப்பிடங்கள் விடுதிக்கு அருகில் இருந்தால் இடம் கிடையாது, வருமான உச்சவரம்பு போன்ற கட்டுப்பாடுகளை கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

நல்லோசை விடுதி மென்பொருள் வழியாக விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மென்பொருள் வழியாக சாட்டிலைட் லொகேஷன் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் வசிப்பிட தூரம் தவறாக கணக்கிடப்படுவது, நோய்வாய்ப்பட்ட அல்லது வேலைக்குச் செல்ல முடியாத பெற்றோர்களை நம்பி இருக்கும் மாணவர்கள், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட மாணவர்கள், ஏழ்மையான மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசித்தால் நல்லோசை மென்பொருள் வழியாக விண்ணப்பிக்க முடியாத நிலை இருப்பது மாணவர்களை பெரும் அவதி அடையச் செய்திருக்கிறது. அவர்கள் விண்ணப்பித்தாலும் அந்த மென்பொருள் கருணை காட்டாது. அவர்களை நீக்கி (ரிஜெக்ட்) விடும்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக இருக்கும் பொழுது, ஆதிதிராவிட மாணவர்களுக்கான ஆண்டு வருமான வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வகுத்திருப்பது பொருத்தமற்றது. இந்த ஆண்டு வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்யப்படாவிட்டால் மாணவர்களுக்கான உணவு போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. விடுதிப் பணியாளருக்கு சம்பளப்படி கிடையாது என்ற கட்டுப்பாடுகளால் மாணவர்களும் பணியாளர்களும் சிரமப்படுகிறார்கள். இது போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் புதிய கட்டடங்களை அமைக்க வேண்டும். பெற்றோர், மாணவர்கள் அறியும் வகையில், விடுதி நலத் திட்டங்களை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பள்ளி மாணவ மாணவியர் விடுதிகளில் சேர்க்கை குறைபாடு, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு போன்ற காரணங்களால் பள்ளி விடுதிகளை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியாக தரம் உயர்த்த முடிவு செய்திருப்பது அடிப்படைக் கல்வி மற்றும் பள்ளி மாணவர் நலனை புறக்கணிப்பதாகும். அதாவது பள்ளி மாணவர்களுடன் கல்லூரி மாணவர்களை இணைப்பது, பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைந்தும் ராக்கிங் போன்ற கொடுமைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கோயமுத்தூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 பள்ளி மாணவர் விடுதிகள் இப்படித் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிட மாணவ மாணவியருக்கான 1141 பள்ளி விடுதிகளில், இந்த ஆண்டு 33 பள்ளி விடுதிகளை கல்லூரி மற்றும் தொழிற்பிரிவு விடுதிகளாக மாற்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பள்ளி விடுதிகளை மூடும் செயலாகும். இதற்காக மக்களிடமோ, மாணவர்களிடமோ கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தவில்லை.

நல்லோசை இணையதளமும் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியாமல் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நீதி விடுதிகள் என மாற்றுவது வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல், ஆதி திராவிட மாணவர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button