Uncategorized

ஆவணம் அறிவோம் – 7: கொல்லத்தரையன் கொலை

ஆ.சிவசுப்பிரமணியன்

கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பனவற்றில் பொதுவாக, நிலக்கொடை நிலவிற்பனை, கோயிலை மையமாகக் கொண்ட செயல்பாடுகள், மக்கள் பிரிவுகளுக்குள் உருவாகும் சிறு பூசல்கள், மக்கள்மீதான வரிகள், அதை அவர்கள் எதிர்கொண்ட முறை, மன்னர்கள் நிகழ்த்திய போர்கள், பஞ்சம் வெள்ளம் போன்ற நிகழ்வுகள், அவை மக்களைப் பாதித்தமை- ஆட்சியாளர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பனவே பெரும்பாலும் இடம்பெறும். இச்செய்திகளுக்கு ஊடாகத்தான் வேறு சில நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறு இடம் பெற்றுள்ள ஒரு செய்திதான் கொல்லத்தரையன் என்பவனை நாடு என்ற நிர்வாக அமைப்பினரும், இடங்கை வலங்கை என்ற பிரிவினர் உள்ளிட்ட மக்கள் பிரிவினரும் ஒன்று திரண்டு கொன்ற செய்தி. இக்கொலை நிகழ்ந்த காலம் கி.பி.1280 இல் இருந்து 1325க்கு உப்பட்ட காலமாயிருக்கலாம் என்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரதேவன் ஆட்சியில் இது நிகழ்ந்துள்ளதாகவும் இக்கல்வெட்டு அடங்கிய தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதியின் (XLI./41) பதிப்பாசிரியரும் கல்வெட்டியல் அறிஞருமான முனைவர் இராஜகோபால் குறிப்பிட்டுள்ளர் (2019:229). ஆங்கிலேய ஆட்சியின் போது 1905 இல் இக்கல்வெட்டைப் படியெடுத்தபோது குடிமல்லூர் பூமீஸ்வர் கோயிலின் மையப்பகுதியின் வடக்குப்பகுதிச் சுவரில் இருந்துள்ளதாகவும் இக்கல்வெட்டின் சிலபகுதிகள் சுவரினுள் வைத்துப் பூசப்பட்டுள்ளதால் அவற்றை முழுமையாகப் படித்தறிய முடியாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லத்தரையன் கொலை என்ற தலைப்பைப் படித்ததும் அவன் சதக் சதக் என்று குத்தப்பட்டானா, ஆடு பலி கொடுப்பது போன்று தலைவெட்டிக் கொல்லப்பட்டானா என்ற வினாக்கள் எழுந்தால் கல்வெட்டில் அதற்கு விடையில்லை. சரி அவன் ஏன் கொல்லப்பட்டான் என்ற கேள்வி எழுந்தால் அதற்கும் விடையில்லை. தீவிரவாதி என்று செய்தித்தாள்களில் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவது போல் ‘இராசதுரோகியுமாய் நாட்டுத்துரோகியுமான கொல்லத்தரையன்’ என்று இரண்டு அடைமொழிகளுடன் அவன்பெயர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இனி கல்வெட்டுச் செய்தியைக் காண்போம்.

கொல்லத்தரையன் ஓடி ஒளிதல்:

பல்வேறு நாட்டாரும் (நாடு என்ற நிர்வாகப் பகுதியின் நிர்வாகிகள்), வலங்கை, இடங்கை சாதியாரும் கொல்லத்தரையனைக் கொல்ல கூட்டமாகத் திரண்டு வருகையில் அவன் படுவூர் கோட்டத்திலுள்ள கிடாரங்கொண்ட சோழீஸ்வரர்கோயில் கருவறைக் கோபுரத்தின் விமானப் பகுதியில் ஏறி ஒளிந்து கொண்டான். அவனைத் துரத்தி வந்தோர் அங்கிருந்து அவனைக் கீழே இறக்கிக் கொல்ல விரும்பினர். இச்செயலை மேற்கொள்ள விமானப் பகுதியை இடித்தாக வேண்டும். ஆனால் கோயில் அறங்காவலர்களும், தானத்தார், மகேஸ்வரர், கவரிப்பிணாக்கள், பொற்கோயில் கைக்கோளர், ஸ்ரீவீரபத்திரர் ஆகிய கோயில் பணியாளர்களும் கருவறையின் விமானத்தை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதை எதிர்கொள்ளும் வழிமுறையாக இடித்த விமானப் பகுதியை மீண்டும் கட்டித் தருவதுடன் சில திருப்பணிகளைச் செய்து தருவதாகவும் நாட்டார்கள் வாக்குறுதியளித்தனர்.

நாட்டார் கொடுத்த வாக்குறுதி:

நாட்டார் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால் பொருள் தேவைப்படும்தானே? பொருளுக்கு என்ன செய்ய? வாக்களித்தவர்களுக்குக் கவலை இல்லை. இருக்கவே இருக்கிறார்களே விவசாயிகளும் கைவினைஞர்களும்! அவர்களிடம் இருந்து இதற்கான பொருளை வருவித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதை இக்கல்வெட்டில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்.

(இண்டெண்டில் பின்வரும் பகுதி)

  • ஆண்டொன்றுக்கு வேலி ஒன்றுக்குக் கலநெல்லும் அரைப்பணமும். புஞ்செப்பற்றுக்கு ஏர் ஒன்றுக்குக் கலதானியம்
  • பாக்கு மிளகு பொதிக்குப் பொதி ஒன்றுக்கு ஒரு பணம்.
  • உப்புப்பொதி, எள்பொதி ஒன்றுக்கு அரை பணம்.
  • நெல்லு பொதிக்குக் கால் பணம்,
  • தறி ஒன்றுக்கு ஒரு பணம்
  • செக்கு வாணிகர்… (கல்வெட்டு சிதைந்துள்ளது)

இதை கிடாரங்கொண்ட சோளிசுரமுடிய நாயனார் கோயிலார் ஏற்றுக் கொண்டனர். பிறகு என்ன. கருவறைக் கோபுரத்தின் விமானத்தை இடித்துக் கொல்லத்தரையனை தாம் நினைத்தவாறே செய்து முடித்தனர்.

கல்வெட்டு வெளிப்படுத்தும் உண்மை:

இடித்த கோயில் கோபுரப் பகுதியை நாட்டார்கள் தம் செலவில் கட்டிக் கொடுப்பதுதான் நியாயமானது அல்லது மன்னன் கட்டிக் கொடுக்க வேண்டும். மாறாக நன்செய் புன்செய் விவசாயிகள், பாக்கு, மிளகு, உப்பு, எள், நெல் விற்பவர்கள், தறிநெய்பவர்கள், செக்காட்டுபவர்களிடமிருந்து, குறிப்பிட்ட விழுக்காட்டில் மகமை வாங்குவது போன்று தானிய வடிவிலும் பண வடிவிலும் வாங்கியுள்ளார்கள். வழக்கமான வரிப்பளுவுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button