கட்டுரைகள்

‘உலகப் பரம ஏழை’க்கு, ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய மோடி – நிதிஷ்

கிராமத்தான்

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பைன்டி என்று சின்னஞ்சிறிய நகரம். இந்நகரைச் சுற்றி பசுமை நிறைந்த ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில் உள்ள 1050 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு கையகப்படுத்தியது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 919 ஏழை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து அவர்களது வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது பீகார் அரசு. எங்களின் நிலத்தைப் பறித்து எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடாதே எனக் குமுறிய ஏழை விவசாயிகளின் அவலக் குரலை அலட்சியப்படுத்திய அரசு.

அரசாங்கத்துக் கோழி முட்டை அம்மியை உடைக்குமல்லவா? அனல் மின் நிலையத்தை அரசு அமைக்கப் போவதாக மிரட்டிப் பறிக்கப்பட்டன நிலங்கள். அவ்வாறு பறிக்கப்பட்ட நிலத்தில் அரசு அனல் மின் நிலையம் அமைக்கவில்லை. மாறாக நரேந்திர மோடியின் மிக உற்ற நண்பர், நகையும் சதையுமான மோடியின் கூட்டாளியான உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ள ‘பரம ஏழை’யான அதானிக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய வன அழிப்பு நடவடிக்கை சுற்றுச் சூழலுக்குப் பேராபத்தை விளைவிக்கும். வனத்தை அழிக்கக் கூடாது என்று மக்கள் குரல் எழுப்புகின்றனர்.

மோடிக்கு மக்கள் பெரிதா? அதானி பெரிதா?

நிலம், நிலக்கரி, மரங்கள் என அனைத்தையும் அதானி குழுமத்திற்கு வாரி வழங்கி உள்ளது பீகார் அரசு.

அவர்களது நிலங்களை மட்டுமல்ல, அவர்களது உறங்கும் இடமான வீடுகளையும், குடிசைகளையும் அரசு விட்டு வைக்கவில்லை.

வளர்ச்சி என்கிற பெயரால் எங்கள் நிலங்களையும், குடியிருந்து வரும் வீடுகளையும் கைப்பற்றி எங்களை ஆதரவற்ற அனாதைகளாக்கி விட்டது அரசு.

மாவட்ட நிர்வாகம் சிறிதும் நெஞ்சில் ஈரமின்றித் திட்டத்தை நிறைவேற்றிட வீடுகளை இடித்துத்தான் தீரவேண்டும், வேறு வழியில்லை, திட்டம்தான் முக்கியம் எனக் கூறுகிறார்கள்.

இடிக்கும் வீடுகளுக்கு நாங்கள் வழங்கும் இழப்பீட்டைக் கொண்டு அவர்கள் எங்காவது சென்று வீடுகளைக் கட்டிக் கொள்ளட்டும் என்று இரக்கமற்ற முறையில் கூறி வருகின்றார்கள்.

எங்கள் நிலத்திற்கும், வீடுகளுக்கும் இவர்கள் கொடுப்பதாகக் கூறும் மிகக் குறைந்த இழப்பீடுகளைக் கொண்டு நாங்கள் வேறு நிலம் வாங்கவோ, வீடு கட்டிக் கொள்ளவோ இயலாத நிலைக்குக் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம், எங்களின் அவலக் குரலைக் கேட்க எவரும் இல்லையா? இதுதான் நமது நாட்டின் ஜனநாயகமா? எனக் கேள்வி கேட்கிறார்கள் மக்கள்.

விவசாயிகள், குடியிருப்போர், எதிர்க் கட்சிகள் என எவருடைய எதிர்ப்பையும் கவனத்தில் கொள்ளாது அலட்சியப்படுத்தித் திட்டத்தை நிறைவேற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மிருகத்தனமான முறையில் நிறைவேற்றி வருகின்றது.

அனல் மின் நிலையத் திட்டத்தைச் செயல்படுத்திட நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள் பீகார் சென்று அடிக்கல் நாட்டி பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

1050 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம் மா மரங்கள், பிச்சி மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் என 10 லட்சம் மரங்களைக் கொண்ட பசுமை நிறைந்த வனம் அழிக்கப்பட்டு வீடுகளையும் குடிசைகளையும் அழித்து அவ்விடத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப் போவது யார் தெரியுமா?

உலகில் உள்ள ஏழைகளில் ‘மிக மிக பரம ஏழை’யான அதானிக்கு வழங்கப்படுகிறது.

1050 ஏக்கர் நிலத்திற்கும் ஒரு ஆண்டிற்கான குத்தகை எவ்வளவு தெரியுமா? ரூ.100 கோடியா இல்லை, இல்லவே இல்லை. மிக மிக அதிகபட்ச வாடகை எவ்வளவு தெரியுமா? ரூ. 100 கோடி அல்ல, 100 பைசா!

ஆண்டுக்கு 1050 ஏக்கர் நிலத்திற்கும் அதானி கொடுக்கவுள்ள குத்தகை (வாடகை) ஒரே ஒரு ரூபாய் மட்டும்தான்!

வளர்ச்சி, என்றுமில்லாத வளர்ச்சி, உலகமே வியக்கும் வளர்ச்சி அனைவரும் மூக்கின் மீது விரலை வைக்கும் வளர்ச்சி. இப்படிப்பட்ட வளர்ச்சியைத்தான் மோடியும், மோடிக் கும்பலும் ‘வளர்ச்சி, வளர்ச்சி’ என்கிறார்கள்.

அதானிக்கு 1050 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு ஒற்றை ரூபாய்க்கு வாடகைக்கு விட்டதை வளர்ச்சி என்கிறார்கள். ஓராண்டுக்கு மட்டுமல்ல 30 ஆண்டுகளுக்கு அதானிக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் அதானி வழங்கப்போகும் கட்டணம் வெறும் முப்பது ரூபாய்!

பாவம் அதானி தாங்க மாட்டார். இவ்வளவு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. ‘பரம ஏழை’யான அதானிக்குக் கருணை காட்டி, வாடகையை ஒரு பைசா எனக் குறைக்கலாம்.

மோடியின் நண்பர், நிரந்தர நண்பர் அப்பாவி மக்கள் அல்ல மாறாக அதானி, அம்பானி போன்றவர்களே!

மோடி முதல்வராகி, பிரதமராகி 25 ஆண்டுகள் ஆகிறதாம். வெற்றி விழா கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

மோடி கூறினார். நான் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, எனது தயாருக்கு அது என்னவென்றே தெரியாது. ஆனால் அவர் அழைத்து என்னிடம் கூறினார். ‘நீ லஞ்சம் வாங்காதே ஏழைகளுக்கு உதவி செய்’ என்றார்.

அவ்வாறு என் தாய் கூறியதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார். தாய் சொல்லைத் தட்டாத தனயன் மோடி, உலகின் ஏழைக்கும், பரம ஏழையான அதானிக்கு 1050 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஒரே ஒரு ரூபாய்க்கு வழங்கியது கண்டு, ஏழை மக்கள் எல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இதனை விட ஏழைக்கு வேறு என்ன செய்ய முடியும்? இப்படிப்பட்டவைதான் மோடியின் வளர்ச்சி. இத்தகைய வளர்ச்சி நாட்டை எங்கே கொண்டு போய்விடும்.

இத்தகைய வளர்ச்சியை தமிழ்நாட்டிலும் காண வேண்டுமெனத் துடிக்கின்றனர் பாஜகவினர். அதற்கு ஆமாம் போடுகின்றார் எடப்பாடியார்!

எது சரி, – எது தவறு எனத் தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிக்கட்டும்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button