அஸ்ரா கர்க்கும், அஜாய் ரஸ்தோகியும் அப்புறம் ஜோசப் விஜய்யும்

நிகழ்வு 1:
2012ல், அந்தக் காவல்துறை அதிகாரி, மதுரை எஸ்பியாகப் பணியில் இருக்கிறார். அப்போது அவரது பார்வைக்கு ஒரு குற்ற வழக்கு வருகிறது.
ஊமச்சிகுளம் பகுதியில் உஷாராணி என்னும் பெண் தன் கணவனையே கொலை செய்திருக்கிறார். இதனை அறிந்த எஸ்.பி. நேரடியாகச் சம்பவ இடத்திற்கே செல்கிறார்.
அந்தப் பெண் நடுங்கிக் கொண்டு ஒரு கோழிக்குஞ்சைப் போல் அமர்ந்திருக்கிறார்.
‘சொந்த கணவனையே ஏன் கொலை செய்தாய்’ என்று கேட்டபோது, வெடித்து அழுகிறார். விசும்பல்களூடே அவர் சொன்ன செய்தி இதுதான். சம்பவம் நடந்த அன்று அவரது கணவர் முழு போதையில் வீட்டிற்கு வந்து, தன்னை, வயது வந்த அவர்களது மகளின் முன்னாலேயே உடலுறவுக்கு அழைத்ததாகவும், தான் மறுத்ததால், தன்னை விட்டுவிட்டு, பெற்ற மகளையே வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அதனால் தனக்கு வேறு வழியில்லாமல் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவனின் தலையில் அடித்ததாகவும் கூறி முடித்திருக்கிறார்.
இந்தத் தகவல்களை முழுமையாகச் சரிபார்த்த காவல் அதிகாரி, தன் கணவன், தன் மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் அவலத்தை உணர்ந்து, இது மகளைப் பாதுகாக்க ஒரு தாய் எடுத்த தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து, ஐபிசி 100 சட்டப்பிரிவை உபயோகப்படுத்தி, அந்த நிமிடமே அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.
இது மிகத் துணிவான நடவடிக்கை என்று அனைவராலும் அன்று பாராட்டப்பட்டது.
இப்படி ஒரு எஸ்.பி. சட்டத்தைக் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது, அப்போதைய நீதியரசர் சந்துரு அதனைத் தள்ளுபடி செய்தார்.
நிகழ்வு 2:
2002 குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது நிரம்பிய பெண், தன் 3 வயது மகள் மற்றும் 20 உறவினர்களுடன், கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கத் தன் ஊரை விட்டு வெளியேறுகிறார்.
அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
அவர்கள் சப்பர்வாட் என்ற இடத்தில் இருக்கும்போது, 20 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை முற்றுகையிடுகிறது.
அங்கிருந்த ஆண்களை எல்லாம் அங்கேயே கொன்று வீசிவிட்டு, பெண்கள் அனைவரையும் வன்புணர்வு செய்து கொல்கின்றனர்.
கடைசியாக அவர்கள் பில்கிஸ் பானுவிடம் வரும்போது, தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார்.
அப்போதும் மனமிறங்காத வெறிக் கும்பல், அங்கேயே அவரையும் கதறக் கதற வன்புணர்வு செய்கின்றனர்.
அப்போது மூன்று வயது குழந்தை இடையூறாக அழுததால், இரண்டு கால்களையும் பிடித்து தூக்கி, சிதறு தேங்காய் போடுவதுபோல் பாறையில் தலையை அடித்துக் கொன்றனர்.
இதைக் கண்டு மயங்கிய பெண்ணை, இறந்துவிட்டார் என்று விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
பல்லாண்டுகளான தீவிர சட்டப் போராட்டத்திற்குப் பின் இதில் சம்பந்தப்பட்ட பதினொரு பேருக்கு ஆயுள் சிறை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.
2022ல் இந்தக் கும்பல், தங்களது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இதை விசாரித்த நீதிபதி, அந்த முறையீட்டை அப்படியே ஏற்று, அவர்கள் தண்டனையைக் குறைக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிடுகிறார். அந்த உத்தரவை ஏற்று அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பின், பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது வரலாறு.
முதல் நிகழ்வில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் பெயர் அஸ்ரா கார்க். அவர் தலைமையில்தான், கரூர் நெரிசல் மரணங்களை ஆய்வு செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம்.
இரண்டாம் நிகழ்வில், கொடூர வன்புணர்வாளர்களின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதியின் பெயர் அஜாய் ரஸ்தோகி.
கரூர் நெரிசல் மரணங்களை ஆய்வு செய்யும் சிபிஐ மேற்பார்வை செய்ய அவரைத் தான் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது.
அஜாய் ரஸ்தோகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவிடம், மாதம் ஒருமுறை சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எத்தனை மாதத்திற்கு என்று சொல்லவில்லை.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து சிபிஐ விசாரணைக்கு அனுப்பப்பட்ட பல வழக்குகள் ஆண்டுக் கணக்கில் எந்த முடிவும் காணப்படாமல் தூங்குகின்றன. அவற்றோடு சேர்ந்து இதனையும் சேர்த்து முடிவே வராமல் வருடக்கணக்கில் நீட்டிக்கப்பட பெரும் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால், அந்தத் தீர்ப்பின் முடிவு வரும் வரை விஜயின் குடுமி, பிஜேபி ஆர்எஸ்எஸ் கைகளில்தான் இருக்கும். அவர்கள் ஆட்டுவித்தபடி ஆட வேண்டியது அவரின் அன்றாடக் கடமையாக மாறிவிடும்.
தமிழ்நாடு அரசு மாட்டிக்கொண்டதாக தவெக, அதிமுக கட்சியினர் கொண்டாடுகிறார்கள். ஆனால் வசமாக மாட்டியிருப்பது விஜயும் அவரது கட்சியும்தான்!

