
புதுச்சேரியில் மக்கள் தலைவர் என்று அன்போடு அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் வ. சுப்பையா 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி மறைந்தார்.
மக்கள் தலைவர் வி.எஸ்.அவர்களின் வாழ்க்கை என்பது புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீர தீர வரலாறு போலவே புதுச்சேரி விடுதலை இயக்கப் போராட்ட வரலாறு அமைந்தது. இந்திய விடுதலைப் போரில் மாபெரும் தலைவர்களாக இருந்த காந்தியடிகள், திலகர், பண்டிதர் நேரு ஆகியோருக்கு இணையான தலைவராக புதுச்சேரியில் தோழர் வ.சுப்பையா அவர்கள் திகழ்ந்தார் என்று பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.
காந்தியடிகளுக்கும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கும் ஏற்பட்ட கடும் கருத்து மோதல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு காந்தியடிகளுக்கு இந்தியாவில் தலித் மக்களின் சமூக விடுதலை பற்றிய சிந்தனை மேலோங்கியது. அதன் விளைவாக அரிஜன சேவா சங்கம் ஆரம்பித்தார். காந்தியடிகளைத் தலைவராக ஏற்றுக் கொண்ட வ.சுப்பையா அவர்கள் புதுச்சேரி அரிஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து அதன் செயலாளராகப் பணிபுரிந்தார்.
புதுச்சேரியில் உள்ள சேரிகளில் கால் வைத்த முதல் தலைவர் வ.சுப்பையா ஆவார்.
காந்தியடிகள் குன்னூர் மலைப்பகுதியில் தங்கி இருந்தார். அப்போது அவரை புதுச்சேரிக்கு வருமாறு தோழர் வ.சுப்பையா நேரில் சென்று அழைப்பு விடுத்தார். முதலில் வர மறுத்த காந்தியடிகளிடம் விவாதம் செய்து புதுச்சேரிக்கு வருவதற்கு காந்தியடிகளைச் சம்மதிக்க வைத்தார். புதுச்சேரிக்கு காந்தியடிகளை முதன்முதலில் அழைத்து வந்தவர் தோழர் வ.சுப்பையா ஆவார்.
புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களின் அவல நிலையைப் போக்கிட சங்கம் அமைத்தார். சூரியன் உதிப்பதற்கு முன்பாக வேலைக்குச் சென்று சூரியன் மறைந்த பிறகு வீடு திரும்பிய தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேர வேலையாகக் குறைப்பதற்குப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிலாளர்கள் தோழர் வ.சுப்பையா தலைமையில் அணி திரண்டனர். 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தின் போது பிரெஞ்சு இராணுவம் துப்பாக்கியால் சுட்டு 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.
பண்டித ஜவஹர்லால் நேரு இந்தக் கொடுமைக்கு எதிராக பிரான்ஸ் அரசிடம் முறையிடுவதற்காக தோழர் வ. சுப்பையா அவர்களை பாரிஸ் மாநகருக்கு அனுப்பினார். அங்கே கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வ.சுப்பையா சந்தித்து முறையிட்டதின் விளைவாக பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் புதுச்சேரியில் உள்ள தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைச் சட்டம் இயற்றப்பட்டது.
ஆசியக் கண்டத்திலேயே புதுச்சேரி மண்ணில்தான் எட்டு மணி நேர வேலைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்களின் மாபெரும் சாதனையாகும்.
பஞ்சாலைத் தொழிலாளர்களை வர்க்கா¦தியாகத் திரட்டி புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தினார்.
ஜவஹர்லால் நேரு அவர்களை புதுச்சேரிக்கு வரவழைத்துத் தொழிலாளர்கள் மத்தியில் பேச வைத்தார். ஜவஹர்லால் நேரு அவர்களின் வருகை புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகம் மூட்டியது. புதுச்சேரி மண்ணில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தார். பிரெஞ்சிந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்கின்ற அமைப்பையும் உருவாக்கினார்.
பிரெஞ்சு நாடாளுமன்ற செனேட் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிரெஞ்சு அரசாலும் பிரிட்டிஷ் அரசாலும் தேடப்பட்ட ஒரே தலைவர் வ.சுப்பையா ஆவார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களோடு சிறையில் இருந்தார்.
இந்திய அரசு 1987 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற மாபெரும் விடுதலை வீரர்கள் பட்டியலை அறிவித்தது. அதில் புதுச்சேரி மண்ணில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு தலைவர் வ.சுப்பையா ஆவார்.
புதுச்சேரி விடுதலைக்குப் பிறகு புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பாடுபட்டார். 1969ல் இருந்து 74 வரை விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்று பல முக்கியமான விவசாய நலத் சட்டங்களை புதுச்சேரிக்குக் கொண்டு வந்தார். 1974 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் மக்கள் நலன் காக்கும் பல திட்டங்களை வாதாடிக் கொண்டு வந்தார். புதுச்சேரி சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை நிலை நிறுத்தினார்.
1979 ஆம் ஆண்டு புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற நிலை வரும்போது புதுச்சேரி இணைப்பு எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்து அதன் தலைவராகப் போராட்டங்கள் முன்னெடுத்தார். இணைப்பு எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது. புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியானார்கள். ஒன்றிய அரசு தலைவர் சுப்பையா அவர்களைக் கைது செய்ய அஞ்சியது. தலைவர் சுப்பையா தலைமையில் புதுச்சேரி தமிழகத்தோடு இணைக்கப்படும் முயற்சி தடுக்கப்பட்டது.
மார்க்சிய- லெனினியச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக அரும் பாடுபட்டார். சிவப்பு நட்சத்திரமாக ஜொலித்த இந்தியக் கம்யூனிஸ்ட் அகில இந்தியத் தலைவர்களில் அவரும் ஒருவர்.
அரசியல் பொது வாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்தார். அரசியல் ஒழுக்க நெறிமுறைகளுடன் வாழ்ந்தார். அவர் வாழ்நாளில் எந்தச் சொத்தையும் சேர்க்கவில்லை. எந்தப் பொருளையும் ஈட்டவில்லை. ஒரு கம்யூனிஸ்ட் மாபெரும் தலைவராக சொந்த வாழ்க்கையிலும் இருந்தார். இறுதியில் தான் வாழ்ந்த வீட்டையும் அரசாங்கத்திற்குக் கொடுத்துவிட்டார். தனக்காக எதுவுமே செய்து கொள்ளாத தன்னலமற்ற பொதுச் சேவையைப் பிரதானமாக ஏற்றுக்கொண்டு வ. சுப்பையா வாழ்ந்தார்.
அவரின் சிந்தனைபடியே அவரின் மனைவி தோழியர். சரஸ்வதி சுப்பையா வாழ்ந்து மறைந்தார். புதுச்சேரி சமூக அரசியல் தளங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வீரநடை போடுகிறது என்றால் தலைவர் சுப்பையா அவர்கள் காட்டிய பாதைதான் முக்கியக் காரணமாகும்.
மக்கள் தலைவர் வ.சுப்பையா மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் கட்சியின் தோழர்களின் நெஞ்சங்களிலும், புதுவை மக்கள் மனங்களிலும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மக்கள் தலைவர் தோழர்.வ.சுப்பையா நினைவு தினத்தைப் போற்றுவோம்.

