உலக செய்திகள்கட்டுரைகள்

பாலத்தீன நாட்டை ஏற்காத டிரம்பின் திட்டம் வெற்றி பெறாது

மே.து.ரா.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காசாக் கரையில் இசுரேல் நடத்தி வரும் போரினை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவின் டிரம்ப் இருபது கூறுகள் கொண்ட ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளார்.

2023 அக்டோபர் ஏழாம் நாள் கமாசு இயக்கத்தின் தலைமையிலான போராளிக் குழுக்கள் தெற்கு இசுரேலுக்குள் நுழைந்து, ஏறத்தாழ 1200 எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொன்று, 251 பேரைப் பிணையாகப் பிடித்துச் சென்றனர். பாலத்தீனியர் பலரை அவ்வப்போது தாக்கிக் கொல்லும் இசுரேலின் வன்முறைகளுக்கான எதிர்வினை இது.

இதனைத் தொடர்ந்து இசுரேல் காசாக் கரைப் பகுதியில் மக்களைக் கொன்று குவிக்கும் பெரும் அழிவுப் போரினைத் தொடங்கி நடத்திவருகிறது.

41 கிலோ மீட்டர் நீளமும், 6 முதல் 12 கிலோ மீட்டர் அகலமும், 365 சதுர கிலோ மீட்டர் பரப்பும் கொண்ட பாலத்தீனத்தின் காசாக் கரைப் பகுதியில் 21 லட்சம் பாலத்தீனியர்கள் வாழ்ந்து வந்தனர். 2007 முதல் இப்பகுதி பாலத்தீனிய விடுதலை அமைப்பின் போர்ப்படைப் பிரிவான கமாசு என்னும் சன்னி இசுலாமிய இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பல கட்டங்களில் நடந்த தேர்தல்களிலும் தொடர்ந்து அவர்கள் வெற்றி கண்டிருக்கின்றனர்.

பாலத்தீனத்தின் மற்றொரு பகுதியான மேற்குக் கரையில் பெரும்பாலானவை இசுரேல் நாட்டால் கைப்பற்றப்பட்டு, அவர்களின் பிடியிலும் குடியேற்றத்திலும் சிக்கிக் கிடக்கிறது.

பாலத்தினீய மக்கள் தொகை கூட்டளவில் 53 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட இசுரேல் நாட்டில் ஏறக்குறைய 18 லட்சம் (18%) பாலத்தீனியர் உள்ளனர். இவர்களுக்கு அங்குக் குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இசுரேலில் 23 லட்சம் (73.2%) யூதர்கள் இருக்கின்றனர்.

உயிரிழப்புகளும் அழிவுகளும்

காசாக் கரையில் வாழும் 21 லட்சம் மக்களில், பெரிதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 67,000க்கும் மேற்பட்டோர் இதுவரை இசுரேல் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ மனைகளும் வாழும் இல்லங்களும் தாக்கி அழிக்கப்படுகின்றன.

அங்கேயே தங்கியுள்ளோர் அனைவரும் பசியிலும் பட்டினியிலும் வறுமையிலும் வாடித் துடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் பயன்படு பொருள்கள் வழங்குவதை இசுரேல் படையினர் தடுத்து வருகின்றனர்.

அமெரிக்கா உணவுப் பொருள்களை வழங்குவதாக அறிவித்திருந்தாலும், அவை அங்குள்ள மக்களைச் சென்றடைய எத்தகைய ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பிற நாடுகளிலிருந்து உணவு போன்ற பொருள்களும் செல்ல முடியவில்லை.

ரசிய – உக்ரைன் போரில் உயிர்கள் மடிவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ‘கண்ணீர்’ வடிக்கும் டிரம்ப், இசுரேல் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த இதுவரை முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, உயர்நுட்பப் போர்க்கருவிகளைத் தொடர்ந்து வழங்கிப் பாலத்தீனியர் படுகொலைக்கு வாய்ப்பேற்படுத்தித் தருகிறார்.

இசுரேலுக்குத் துணையாகும் நோக்கில், ஈரான் அணு அமைப்புகளின் மீது, நிலத்தை ஊடுறுவிப் பாயும் ஏவுகணைகளை வீசவும் அமெரிக்கா தயங்கவில்லை.

அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாரில் உள்ள கமாசுத் தலைமையகத்தைத் தகர்ப்பதாகக் கூறி, இசுரேல் ஏவுகணைகளைச் செலுத்தியபோது, அமெரிக்காவுக்கு முன்னறிவிப்புக் கொடுத்திருந்தும் கண்டனத்தோடு அமெரிக்கா நிறுத்திக்கொண்டது.

இசுரேலுக்குத் துணைபோகும் அமெரிக்கா

இந்த நிலையில்தான், இசுரேலின் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுவை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்துக் கலந்துரையாடி, இசுரேல் நலன்களுக்கு ஏற்றவாறான 20 கூறுகள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் வடிவமைத்துள்ளார்.

இவற்றை ஏற்காவிட்டால் குருதி ஆறு பாயும் என்றும் அச்சுறுத்தியிருக்கிறார். அதாவது, குருதி வடிவதைத் தடுப்பதற்கு மாற்றாக, குருதி ஆறாகப் பெருகும் என்பது டிரம்பின் தீர்வு.

இந்தத் திட்டத்தை ஏற்பதற்கான கெடு 06.-10.-2025 அன்றுடன் முடிவடைந்துவிட்டது.

தற்போது அமெரிக்கா, இசுரேல், கமாசு அமைப்பினர் ஆகியோர் எகிப்து நாட்டில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

மனித நல உதவிகள் போன்ற பொது நிலைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், கீழ்க்கண்டவை டிரம்ப் கூறுகளின் அடிப்படைகளாக அமைகின்றன:

1. கமாசு அமைப்பினர் முழுமையாகத் தங்களது போர்க்கருவிகளைக் கைவிடவேண்டும்
2. போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும்
3. இசுரேலுக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையில் காசாக் கரை ஆட்சியமைப்பில் மாறுதல்களைச் செய்யவேண்டும்
4. காசாக் கரையைத் தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சிகளில் இசுரேல் ஈடுபடாது
5. இடைக்கால ஏற்பாடாக அனைத்து நாடுகளின் அமைதிப்படை நிலைநிறுத்தப்படும்
6. எல்லா நடவடிக்கைகளும் அனைத்து நாடுகளின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

இசுரேலின் நலன்கள்

இசுரேலின் முழுமையான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இவை இருக்கின்றன. மேலும், இத்தகைய கூறுகள் குறித்துக் கமாசு அமைப்பினரிடம் கலந்து பேசாமல் இசுரேலின் ஒப்புதலுடன் மட்டும் டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

இவற்றை இந்தியாவின் மோடி அரசு ஏற்றுக்கொண்டிருப்பதில் வியப்பில்லைதான்.
ரசியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் முழுமையாகத் தங்கள் கருத்துக்களை இன்னும் தெரிவிக்கவில்லை.

காசாக் கரையின் பொறுப்பை அமெரிக்காவின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்று முன்னர் டிரம்ப் கூறியதை இந்தக் கூறுகள் முழுமையாக வழிமொழிகின்றன என்பதில் அய்யமில்லை.

‘பாலத்தீன ஏற்பு’ திட்டத்தில் இல்லை

பாலத்தீனச் சிக்கலுக்கு முழுமையான, நிலையான தீர்வு என்ற வகையில், பாலத்தீனத்தைத் தன்னுரிமை கொண்ட தனி நாடாக ஏற்றுக்கொள்ளும் வழிகளும் இப்போதைய டிரம்ப் திட்டத்தில் இல்லை.

இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, கனடா, ஆத்திரேலியா போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் பாலத்தீனம் என்ற தனி நாட்டை ஏற்று அறிவிப்புச் செய்தபோது, அமெரிக்காவும் இசுரேலும் கடுமையாக எதிர்த்தன.

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாகப் பாலத்தீனப் பகுதிகளைக் கைப்பற்றும் இசுரேல் முயற்சிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் துணை நின்றிருக்கின்றன.

பாலத்தீனிய மக்களின் வாழும் உரிமை குறித்து ஏற்பட்ட பல்வேறு உடன்பாடுகளை இசுரேல் மதித்து ஏற்றுக்கொண்டதாக வரலாறில்லை. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் இசுரேலைக் கட்டுப்படுத்தியதுமில்லை. மாறாக உதவியே வந்துள்ளன.

இந்த நிலையில், டிரம்ப்பின் இப்போதைய திட்டத்தை இசுரேல் மதிக்கும் என நம்ப இடமில்லை.

பாலத்தீனியர்களின் உரிமைகளை ஓரளவுக்கு நிலைநாட்டும் உறுதியைக் கொண்டுள்ள கமாசு அமைப்பினர் போர்க்கருவிகளைத் துறந்துவிட்டால், அது இசுரேலின் தான்தோன்றித்தனத்துக்கு மேலும் வழியமைத்துத் தந்துவிடும் என்பதை மறுக்க முடியாது.

போராளிக் குழுக்களாக அறியப்பட்டாலும், கமாசு மட்டுமே பாலத்தீனியர்களின் சார்பாக நின்று உரிமைகளைக் காக்கப் போராடி வருகிறது.

போராளிகளின் கட்டமைப்பை அழிக்கும் முயற்சி

போராளிகளின் அமைப்பில் கட்டமைப்பு என்பது போர்க்கருவிகள் மட்டுமல்ல. இவற்றையும் தாண்டி, போராளிகளைத் தேர்ந்தெடுப்பது, இன்றைய நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறான போர்க்கருவிகளைப் பெறுவது, அவற்றைக் கையாளப் பயிற்சிகளை மேற்கொள்வது, பொருள் திரட்டுதல், காப்பு ஏற்பாடுகள், பாலத்தீன மக்களின் நலன்களைப் பேணுதல், ஆட்சி மேலாண்மை என்பன போன்ற பல தரப்பட்ட விரிவான கட்டமைப்புகளைப் போராளிக் குழுக்கள் பெற்றிருக்கின்றன.

போர்க்கருவிகளை யாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதிலும் தெளிவில்லை. நிலையான தீர்வு இல்லாமல் இத்தகைய கட்டமைப்புகளை அழித்துவிட்டால், மீண்டும் அவற்றை உருவாக்குவது எளிதன்று. அதற்குப் பல பத்தாண்டுகள் ஆகலாம்.

இதனால்தான், படைக் கட்டமைப்புகளைக் கைவிடுவதற்குப் போராளிக் குழுக்கள் தயங்குகின்றன. மறுப்பையும் தெரிவிக்கின்றன.

இதற்கு மாறாக, பாலத்தீனத் தனி நாட்டை ஏற்று, அந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் படைக்கருவிகளை ஒப்படைக்கச் செய்வது நீண்ட காலத்துக்கான நிலையான தீர்வாக இருக்க முடியும்.

ரசிய, சீனப் பங்களிப்பும் வேண்டும்

இசுரேலின் பங்காளிகளாக இருந்துகொண்டு, படுகொலைகளுக்கும் நிலப் பறிப்புகளுக்கும் துணை நின்ற அமெரிக்கா, தான் மட்டுமே தனித்துச் செயல்பட நினைப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

ஈரான் அணு உடன்பாடு 2015இல் ஏற்பட்டபோது, ஈரானுடன் ரசியா, சீனா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, செர்மனி உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி, அய்ரோப்பிய ஒன்றியமும் இணைந்துதான் ஏற்ற முடிவுகளை எட்டின.

2003இல் வடகொரிய அணு ஆலை மேற்பார்வை குறித்த உடன்பாட்டில், வடகொரியா, தென்கொரியா ஆகியவற்றுடன், ரசியா, சீனா, அமெரிக்கா, சப்பான் ஆகிய நாடுகளும் பங்கெடுத்தன.

யூத அமைப்புகள் சில இணைந்து 1948இல் இசுரேல் என்ற தனி நாட்டினைத் தன்னிச்சையாக அறிவித்தபோது, அமெரிக்கா மட்டுமல்லாமல், அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக இருந்த ஸ்டாலினும் நல்லெண்ண அடிப்படையில் பெருந்தன்மையுடன் ஏற்பினைத் தந்தார்.

தனிப் பாலத்தீன நாடுதான் தீர்வு

ஆனால், பாலத்தீன நாடு உருவாகவேண்டும் என்பது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடைமுறையில் மறுப்பையே காட்டிவந்தன. கடந்த 77 ஆண்டுகளாகத் துயரத்தின் பிடியில் பாலத்தீன மக்கள் நாடின்றித் துவண்டு கிடக்கின்றனர்.

ரசியா – உக்ரைன் போரினை வைத்து, ரசியாவையும் சீனாவையும் ஒதுக்கி, இசுரேல் நலன்களைக் காக்க, காசாக் கரையில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவ டிரம்ப் முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கிறார்.

பாலத்தீனிய விடுதலை என்பதை உள்ளடக்காத இந்த 20 கூறுகள் திட்டம் நிலையான தீர்வினைத் தர வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய வேண்டல், மேற்காசியாவில் நீண்ட கால அமைதி மட்டுமல்ல. பாலத்தீனத் தனி நாடு என்ற நிலையான தீர்வுதான் வேண்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button