வரலாறு

ஆவணம் அறிவோம் 3: எதிர்க்குரலான இடப்பெயர்ச்சி

ஆ.சிவசுப்பிரமணியன்

இடம்பெயர்தல் புலம்பெயர்தல், வலசை வாங்குதல் என்ற சொற்கள் ஒரு சமூகக் குழுமம் தாம் வாழும் இடத்தில் இருந்து வெளியேறி வேறு ஓர் பகுதியில் குடியேறுவதைக் குறிப்பதாகும். இவ்வாறு வெளியேறியவர்கள் வேறு ஓர் ஊரில் தங்கி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். ‘இது ஓரளவு நிரந்தமான நகர்தல்’ என்று குறிப்பிட்டுவிட்டு ‘இது ஓர் அரசியல் எல்லையைக் கடந்து ஒரு புதிய பண்புக் குழுவுக்கோ அல்லது வாழும் பகுதிக்கோ செல்வதாக இருக்கும்’ என்று சமூகவியல் அகராதி குறிப்பிடும்.

இக்கட்டுரை மன்னர் ஆட்சிக்காலத் தமிழ்நாட்டில் நடந்த இடப்பெயர்ச்சிகளை அறிமுகம் செய்கிறது.

இடப்பெயர்ச்சி மேற்கொண்டோர்:

படையெடுப்பு, கலகம், கடும் பஞ்சம், இயற்கைச் சீற்றங்கள் என்பன மக்களின் இடப்பெயர்ச்சிக்கான பொதுவன காரணங்களாக அமைந்தன. இவை தவிர அதிக
வரிவிதிப்பு, சமூக ஒடுக்குமுறைகள் என்பனவும் இடப்பெயர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. அன்றைய தமிழ்ச் சமூக அமைப்பில் உழவர்கள், நெசவாளர்கள், பஞ்சகருமர்கள் (கொல்லர், தச்சர், கல்தச்சர், பொற்கொல்லர், கன்னார்) என்போர் மேற்கொண்ட இடப்பெயர்ச்சி குறித்த செய்திகள் தமிழ்க் கல்வெட்டுக்கள் சிலவற்றில் இடம் பெற்றுள்ளன. இவர்கள், தாம் உற்பத்தி செய்யும் பொருள்வடிவிலோ, பணவடிவிலோ, வரி செலுத்தி வந்தவர்களாவர்.

உற்பத்திப் பொருள்களை, அளப்பன நிறுப்பன- மடிப்பன- உரைப்பன என்று வகைப்படுத்தியள்ளதை ஜடாவர்மன் வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1263) குறிப்பிடுகிறது. மடிப்பன என்பது நெய்யப்பட்ட துணிகளைக் குறிப்பதாகும். இவ்வகைப்படுத்தலானது வரிவிதிப்பிற்குத் துணைபுரிந்துள்ளது. வண்ணார், நாவிதர் போன்ற சேவைக்குடிகளும் வரிவிதிப்புக்கு ஆளாயினர். கால்நடைகளுக்கும் கூட வரிவிதிக்கப்பட்டது.

உழவர்கள் பெரும்பாலும் தமக்கு உரிமையான நிலத்திற்கு அதன் பரப்பளவிற்கேற்ப வரிசெலுத்தினர். இது கடமை எனப்பட்டது. சொந்த நிலமின்றிக் குத்தகை விவசாயியாகவோ, ஊதியத்திற்கு வேளாண்வேலைகளைச் செய்தோ வாழ்ந்தவர்கள் உழுது பயிரிடும் குடி என்ற பொருளில் உழுகுடி, உழுகுடிமக்கள் என்றழைக்கப்பட்டனர். நில உரிமையில்லாத இவர்களும் கூட ‘குடிமை’என்ற பெயரில் வரி செலுத்தி வந்தனர். உழுகுடிகள் பெரும்பாலும் தானிய வடிவிலேயே வரி செலுத்திவந்துள்ளனர். சான்றாகக் கல்வெட்டுக்களில் இடம் பெறும் நெல்லாயம் என்ற சொல் நெல்வடிவில் செலுத்திய வரியைக் குறிப்பதாகும். (ஆயம் – வரி)நெசவாளர்கள் தறிஇறை என்ற பெயரில் ஒரு தறிக்கு இவ்வளவு என்று பணமாக மட்டுமின்றி ஆடையாகவும் செலுத்தி உள்ளனர். பணமாக வரி செலுத்துபவர்கள் காசாயக்குடிகள் (காசை ஆயமாகச் செலுத்துபவர்கள்) என்றழைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், நில உரிமையாளர்கள், கைவினைஞர்கள், கால்நடைகள், வளர்ப்போர், சேவைக்குடிகள் எனப் பலரும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

வரிவிதிப்பின் பாதிப்பு :

சில நேரங்களில் வரி உயர்வை மன்னர்கள் நடைமுறைப்படுத்தினார்கள். இயற்கைச் சீற்றத்தினாலோ, வேறு காரணங்களாலோ விளைச்சல் குன்றினாலும் வரிநீக்கம் அல்லது வரிக்குறைப்பு என்பன செய்யாது வழக்கம் போல்வரி வாங்கினர். வரி வாங்குதலில் கடுமையும் காட்டினர். இடைக் காலச் சோழர்காலக் கல்வெட்டுக்களில் இடம்பெறும் ஒரு தொடர் ‘குடாத அளவில் வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து எடுத்துக்கொள்ளக் கடவர் ஆகவும’என்பதாகும்.இத்தொடர் வரியைப் பெறுவதில் பின்பற்றிய கடுமையான வழிமுறையை வெளிப்படுத்துகிறது.

வரி செலுத்தாதவன் வீட்டிலுள்ள மதிப்புமிக்க உலோகப் பாத்திரங்களைக் கைப்பற்றுவதுடன் அவன் வீட்டிலுள்ள மதிப்பற்ற மண் பாத்திரங்களையும் அவன் பயன்படுத்த முடியாதபடி உடைக்கும் செயலை மேற்கொண்டதை இத்தொடரின் வழி அறியமுடிகிறது. வரிகட்டாதார் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்பட்டது.

வரி வாங்க வருவோர்:

வரிவாங்க வரும் அதிகாரிகளும் ஊழியர்களும் கடுமையான முறையில் நடந்து கொண்டனர். நில உடைமையாளர்கள் செலுத்த வேண்டிய வரியையும் கடனையும், அவர்களது நிலங்களைக் குத்தகைக்குப் பயிரிடும் உழுகுடிகளிடம் வற்புறுத்தி வாங்கியுள்ளனர்.வற்புறுத்தல் என்பதில் வரி செலுத்தாதோரிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தல் என்பதும் இடம் பெற்றிருந்தது. சிறையில் அடைத்தலும் நிகழ்ந்துள்ளது.

அதேநேரத்தில் இத்தகைய கடுமையான வழிமுறையை வேளாளர், பிராமணர் என்ற சமூகப் பிரிவினரிடம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற விதிமுறையும் இருந்துள்ளது. இதை ‘கடமை கட்டி (நில வரிக்கு) வெள்ளாளர் அகங்களில் புக்கு ஒடுக்காதொழியவம் சிறைப்பிடித்தல் இவர்கள் அகங்களில் (வீடுகளில்) ஒடுக்குதல் செய்யக் கடவதல்லதாகவும்’ என்ற கல்வெட்டுத் தொடரால் அறிய முடிகிறது. (தெ.இ.க.6 :50) இவ்விரு பிரிவினருடனும் முரண்படுபவர்களை கிராமத்துரோகிகள், நாட்டுத்துரோகிகள் என்று மற்றொரு கல்வெட்டு (மேலது: 58) அடையாளப் படுத்துகிறது. மேலும் அரசு ஊழியர்கள் பலரும் வந்து தாம் விரும்பியவாறே வரி வாங்கியமையும் நிகழ்ந்துள்ளதை ‘பலரும் கைவந்தபடி தண்டிக்கொள்வதாலே…வெள்ளாமை செய்து குடியிருக்கப் போகுதில்லை என்று நாட்டார் (ஊரார்)சொல்லுகையாலும்’ என்ற மூன்றாம் ராஜராஜ சோழனின் கி.பி 1239 ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் தொடரால் அறிய முடிகிறது(தெ.இ.க 6: 50, 58). தண்டிவர்மன் என்பவன் பொன் வழங்குமாறு குடிமக்களைக் கட்டாயப்படுத்தி உள்ளான். அப்போது’ பொன்னிடமாட்டாத குடிபலவும் நிற்கமாட்டாது போனமையில்’ என்று கி.பி 847வது ஆண்டுக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (மேலது : 344) இவ்வாறு மன்னனும் அவனது அதிகாரிகளும் மேற்கொள்ளும் கொடிய வழிமுறைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் உழுகுடிகளும் சிறு நில உரிமையாளர்களும் தப்பித்துக் கொள்ளும் வழிமுறையாக வேறு ஆட்சிப் பகுதிக்கு இடப்பெயர்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

உழு குடிகள் இடப்பெயர்ச்சியின் விளைவுகள்:

உழுகுடிகள் இடப்பெயர்ச்சியை மேற்கொண்டு வேறு பகுதிகளுச் சென்றபோது, இதுவரை வேளாண்மை மேற்கொள்ளப்படாத, நிலங்கள் இவர்களுக்குத் தரப்பட்டதை ‘மேடுந் திடரும் கஈடும் களரிலும் திருத்திப் பயிர் செய்து கொள்ளலாம்’ என்ற தொடரால் அறிய முடிகிறது. இதனால் வேளாண்மை நிகழும் நிலப்பரப்பு விரிவடைந்ததுடன் நிலவரியும் அரசுக்குக் கிடைத்தது. சில போழ்து புதிதாகக் குடியேறியவர்களுக்குச் சில ஆண்டுகள் வரிவிலக்கும் கிடைத்தது. அதேநேரத்தில் தனிமனித இடப்பெயர்ச்சிகள் கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கையை அடுத்து, கால்நடை வளர்க்கும் குழுக்கள் அதிலிருந்து பிரிந்து சென்றன (இதுவே முல்லைத் திணையின் பொருளாதாரச் செயல்பாடாயிற்று). இப்பிரிவினையைச் ‘சமுதாய அடிப்படையில் ஏற்பட்ட முதல் மாபெரும் உழைப்புப் பிரிவினை’ என்று குறிப்பிடும் எங்கல்ஸ் இரண்டாவது மாபெரும் உழைப்புப் பிரிவினையாக விவசாயத்தில் இருந்து கைத்தொழில்கள் பிரிந்ததைக் குறிப்பிடுகிறார்.

எங்கல்ஸ் குறிப்பிடும் கைத்தொழில்கள் சங்ககாலத்தில் உருவாகிவிட்டன. கி.மு. முதல் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ்க் கல்வெட்டுக்களில் ‘அறுவை வணிகன்’, ‘கொழு வணிகன்’ என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அறுவை வாணிபம், பொன் வாணிபம் செய்பவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெயர்களைத் தாங்கிய கவிஞர்களை நாம் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.

இச்சான்றுகள் கைவினைத் தொழிலின் வளர்ச்சியைக் காட்டுகின்றன. பல்லவர், சோழர் காலத்தில் கைவினைத் தொழில்களின் வளர்ச்சியை அவர்கள் காலத்திய கல்வெட்டுகள் வழி நம்மால் அறியமுடிகிறது. இக்கல்வெட்டுகளில் அவர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவியபோது உருவான கல்வெட்டுகள் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் பட்டறைகள் (தொழிற் கூடங்கள்) உருவானதை வெளிப்படுத்துகின்றன. இவை உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றத்தை நாம் அறியச் செய்கின்றன.

நெசவாளர்கள், கைவினைஞர்கள் என்போர் ஒருபக்கம் தொழில் வளர்ச்சியின் அடையாளம் என்றால் மற்றொரு பக்கம் மன்னர்களின் வரிவிதிப்பிற்கான முக்கிய இனமாக அவர்கள் ஆயினர். பட்டடைகளும் இதில் இடம்பெற்றன. ஒரு வரைமுறைக்குட்பட்டு இவர்களிடம் வரி வாங்கப்பட்டபோது சிக்கல் இல்லாதிருந்தது. சிலபோழ்து இவர்கள் மீது வரிச்சுமை அதிகரித்தபோது அதைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் முறையீடு செய்வதன் வழி தீர்வு காண முயன்றுள்ளனர்.

முறையீடு பயனளிக்காத போது தம் எதிர்ப்பைக் காட்டுவதற்கு அவர்கள் மேற்கொண்ட ஒரு வழிமுறையாக இடப்பெயர்ச்சி அமைந்தது. உழுகுடிகளின் இடப்பெயர்ச்சி குறித்து ஆய்வாளர் மே.து.இராசுகுமார் (2004:80) பின்வரும் அவதானிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

‘உடைமைப் பிரிவினரின் கட்டுகளுக்கு உட்பட முடியாத நிலை ஏற்படும்போது உழுகுடிகளுக்கு இரண்டு மாற்றுகள்தாம் இருந்தன. ஒன்று கட்டுப்பாட்டினை மீறும்போது ஊரைவிட்டு அவர்களால் வெளியேற்றப்படுதல். மற்றொன்று தாங்களாகவே ஊரைவிட்டு வெளியேறிவிடுதல். இதனால் உடைமைப் பிரிவினரின் நிலக் குத்தகை அளவைச் செலுத்த இயலாத நிலையில் உழுகுடிகள் வேறுவழியின்றியே ஊரைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. முன்னது தண்டனையாக அமைந்துவிடுவதால் பின்னதையே உழுகுடிகள் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிவிட்டது.’

நெசவாளர்கள்

உழுகுடிகள் போன்றே நெசவாளர்களும் கைவினைஞர்களும் வரி உயர்வால் பாதிக்கப்பட்டிருந்தனர். நெசவுக்கான கச்சாப்பொருளான பஞ்சிற்குப் ‘பஞ்சுப் பீலி’ என்ற பெயரில் வரி விதிக்கபட்டிருந்தது. பருத்தியை ஏற்றிவரும் வண்டிக்கும் வரி வாங்கப்பட்டது. நெய்த ஆடைக்கும், நெய்யும் தறிக்கும் வரி (தறியிறை) விதிக்கப்பட்து. விற்கும் சந்தைக்கும் மகமை செலுத்தவேண்டியிருந்தது. கோவில் திருவிழாக்கள், சந்தைகள் என்பனவற்றிற்கு அவ்வப்போது மகமை என்ற பெயரில் கட்டாய நன்கொடை வழங்கவேண்டியிருந்தது. இத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் வரி உயர்வு ஏற்படும் போது அதை எதிர்கொள்ளமுடியாத நிலையில் இவர்கள் வரி உயர்வில் இருந்து அதிக வரி இல்லாத வேறு ஆட்சிப் பகுதிக்கு இடப்பெயர்ச்சியை மேற்கொண்டனர். சில பகுதிகளில் இவ்வாறு இடம் பெயர்ந்து வந்தோருக்குச் சில ஆண்டுகளுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இடப்பெயர்ச்சியின் விளைவு

திண்டிவனம் வட்டம் உலக்கையூர் என்ற உழக்கூரில் வரி செலுத்த முடியாத நிலையில் நெசவாளர்கள் ஊரைவிட்டு வெளியேறினர். இதனால் ஊருக்கு ஏற்பட்ட விளைவையும் வரிக்குறைப்பு செய்யப்பட்டதையும் இரண்டாம் அரிகரனின் 1388–&89 ஆம் ஆண்டுக் கல்வெட்டு:

‘இவர்கள் இறையாற்றாமல் ஓடிப்போய் திருமடைவிளாகமும் பாழாய், நாயனார் பூசை கொள்ளாமல் கோயிலும் அடைத்துக் கிடைக்கையில், இந்நாள் முதல் திருமடைவளாகத்திலே குடியும் புகுந்து தறியுமிட்டு நெய்யக் கடவரகளாகவும்’ – என்று குறிப்பிடுகிறது (தெ.இ.க.2:375). வரிக் குறைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாமத்தூர், கைக்கோளர்கள் சில வரிகளைச் செலுத்த முடியாமையால் இடம் பெயர்ந்தனர். பின்னர் தறி ஒன்றுக்கு ஆண்டுக்கு ஒன்றேகால் பணம் என்று வரி குறைக்கப்பட்டது (க.ஆ.அ. 1921-22; 19/52).

சளுக்கி என்ற ஊரில் ஊரைவிட்டு வெளியேறிய நெசவாளர்களை மீண்டும் குடியேற்றும் வழிமுறையாக வரி குறைக்கப்பட்டதுடன், செயல்படாத தறிகளுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டது (மேலது 1921:471).

தஞ்சை நாயக்கர் ஆட்சியில் வரி செலுத்த முடியாத நிலையில் கம்மாளர்கள் இடப்பெயர்ச்சி மேற்கொள்ள ஆயத்தமாயினர். இதை அறிந்த பின்னர் அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது (க.ஆ.அ. 1921-22:413).

எதிர்க்குரல்

மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் அமைப்புகள் உருவாகாத மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தம் குறைகளை வெளிப்படுத்தவும், எதிர்க்குரல் எழுப்பவும் சில வழிமுறைகளை மேற்கொண்டுள்ளனர். இது அவர்களது தன்னியலார்ந்த எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு எனலாம். இவ்வகையில் இடப்பெயர்ச்சி மக்களின் எதிர்ப்புணர்வையும் எதிர்க்குரலையும் வெளிப்படுத்தும் வழிமுறையாக இருந்துள்ளது. பண்டைய இந்தியாவில் மாற்றுக் கருத்தும் எதிர்ப்பும் என்ற தமது கட்டுரையில் ரொமிலா தாப்பர் இந்த உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button