கட்டுரைகள்

தனது தவறுகளில் இருந்து தப்பிக்க விஜய் முன்னெடுக்கும் முயற்சிகள்

மே.து.ரா.

தமிழகத்தைக் கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்ட கரூர் நிகழ்வுகள் இன்னும் நெஞ்சை விட்டகலவில்லை. 41 உயிர்களைக் காவுகொண்ட பின்னரும் விசய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்கள் தவறுகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

தங்களது தவறுகளைக் காவல் துறையின் குறைபாடாகவும் தி.மு.க.வின் திட்டமிட்ட சூழ்ச்சியாகவும் மூடி மறைக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.

கரூர் நிகழ்வுகளைப் புரிய வைக்க காணொளிக் காட்சிகள், இறந்தோர் இல்லத்தினரின் நேர்காணல்கள், கலந்துகொண்டோரின் கருத்துக்கள், அரசியல் கட்சியினரின் நிலைப்பாடுகளுக்கேற்றவாறான கண்ணோட்டங்கள், ஊடகங்கள் தரும் விவரங்கள், காவல்துறை மற்றும் அரசினரின் அடிப்படைக் குறிப்புகள் எனப் பலவும் மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டன.

இவை யாவற்றையும் உள்ளடக்கி, உண்மை விளக்கங்களைப் பெறுவதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியர் அருணா செகதீசன் அவர்களைக் கொண்ட ஒருவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இடத்தேர்வு, நிகழ்வின் கால மீறல்கள், காவலர் காப்பு, மின் இணைப்பு, நோயாளர் ஊர்தி ஆகியன குறித்து முரண்பட்ட வினாக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் அடிப்படைக் கூறுகள் சிலவற்றை மட்டும் பார்க்க வேண்டியுள்ளது.

இயல்பான இடத் தேர்வுதானா?

தமிழக வெற்றிக் கழகம் கரூர் கலங்கரை விளக்க வட்டச் சாலை, உழவர் சந்தை ஆகிய இரண்டு இடங்களை எதிர்பார்த்து, மாவட்டக் கண்காணிப்பாளரிடம் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் இசைவு கேட்டிருந்தது. பேருந்துகள் வந்து செல்லும் நெரிசல் மிகுந்த இடங்களில் பகல் மூன்றிலிருந்து இரவு பத்து மணி வரை 10,000 மக்களைக் கூட்டுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்துக் காவல்துறையினர் மாற்றிடம் தேர்வு செய்யுமாறு கேட்டிருந்தனர். இதனால், வேலுச்சாமிபுரம் இடத்தினைத் தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

சில நாள்களுக்கு முன் முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த இடமது.

இந்த இடத்தை ஏற்பதற்கு முன், நகருக்கு வெளியேயுள்ள வெட்ட வெளிப்பகுதிகள் எதையும் விசய் கட்சியினர் கேட்டதாக அவர்களே கூறவில்லை.

கரூர் நகரம் என்றில்லாமல், மாவட்ட நிகழ்வு என்பதால் பொது மக்களை எதிர்பார்த்து விசய் கட்சியினர் விக்கிரவாண்டி போல வெளிப்பகுதியில் உள்ள வெற்றிடத்தைக் கேட்டிருக்கவேண்டும்.

எனவே, இடத் தேர்வு குறித்துக் காவல் துறையினரைக் குறை கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை.

காவலர் காப்பும் எண்ணிக்கையும்

பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்வுகளுக்குக் காவலர் பாதுகாப்பினை எதிர்பார்ப்பது இயல்பானதுதான்.

கூடிய கூட்டம் வன்முறையில் ஈடுபட்டுப் பொதுச்சொத்துக்களுக்குத் தீங்கு செய்தல், மக்களைத் துன்புறுத்தி இடையூறு செய்தல், பகை இயக்கத்தினரைத் தாக்குதல், பகை இயக்கத்தினரின் தாக்குதலைத் தடுத்தல், கலந்துகொள்கின்ற தலைவர்களுக்குப் பாதுகாப்புத் தருதல் என்பன போன்ற கடமைகளே அவர்களுக்கு மேலானதாக இருக்கும். இத்தகைய மீறல்கள் எதுவும் கரூரில் நடக்கவில்லை.

கரூர்க் கூட்டத்தில் விசய் பயணித்த பேருந்து நின்று பரப்புரை செய்யும் இடத்துக்கு வரும் வழியினை ஏற்பாட்டாளர்கள் வேலியிட்டுத் தடுத்துவைக்கவில்லை.

அத்துடன், பரந்தவெளியில் ஆங்காங்கே தடுப்புகளையும் பிரிப்புகளையும் ஏற்படுத்தி மக்கள் எளிதாக வந்துசெல்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தவில்லை. நாற்காலிகள் போடப்பட்டிருந்தால், மூச்சுவிடப் போதிய இடைவெளி கிடைத்திருக்கும்.

காணொளிக் காட்சிகளைப் பார்க்கும்போது, மக்கள் ஒருவரையொருவர் முட்டிக்கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் குழுமியிருந்தது தெரிகிறது. இடையில் ஒருவர் வெளியே சென்று மீண்டும் தம்மிடத்திற்குத் திரும்புவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டிருக்கவில்லை. இவற்றை நெறிப்படுத்தத் தக்கவாறு விசய் கட்சித் தொண்டர்கள் எங்கேயும் காணப்படவில்லை.

இந்த நிலையில், காவலர் காப்பு என்பது மக்கள் திரளுக்கு வெளியே மட்டுமே இருக்க முடியும். கூட்டத்துக்குள் புகுந்து இடையே காவலர் நின்றிருந்தால், விசய் பார்வையை மறைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுதான் எழுந்திருக்கும்.

மேலும், விசய் வந்தவுடன் கூட்டம் எழுந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு அலைமோதியபோது இடையிலிருந்த காவலர் பலரின் உயிரிழப்புகளும் தவிர்க்க இயலாமல் நிகழ்ந்திருக்கலாம்.

அரசு தொடர்பானதன்றி, பிற கட்சி அல்லது பொது நிகழ்வுகளில் காவலர்கள் கூட்டத்தினரின் இடையில் புகுந்து காப்பளிப்பது நடைமுறையில் இருப்பதில்லை.

ஆயிரக்கணக்கில் காவலர்கள் இருந்தாலும், இடைவெளியில்லாமல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்காது.

கரூர் நகரின் எல்லையிலிருந்து நிகழ்விடம் வரை விசய் பேருந்து வந்துசேரக் காவலர்களே வழியேற்படுத்தித் தந்துள்ளனர். இதனை விசய் தனது பேச்சில் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், விசய் பேருந்து கூட்டத்துக்குள் நுழைந்து செல்லமுடியாத நிலையில், இருக்குமிடத்திலிருந்து பேசலாம் என்ற காவலர் அறிவுரையை எவரும் ஏற்கவில்லை. இதனால், குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல மக்கள் திரளை விலக்கி வழியமைத்துத் தந்ததும் காவலர்களே. இந்த நிலையில் காவலர் கடமைகளில் குறை இருந்ததாகத் தெரியவில்லை.

மிகு நோயாளர் ஊர்திகள் ஏன்?

பசியிலும் தண்ணீரில்லாமலும் நீண்ட நெடிய காத்திருப்பில் சோர்வுடன் குழந்தைகள் மற்றும் பெண்கள் மயங்கிக் கிடந்தது விசய் வருவதற்கு முன்னரே ஏற்பட்டுவிட்டது. இவர்களின் நிலையினைக் காவலர் அல்லது ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கக்கூட வாய்ப்புகள் இருக்கவில்லை.

உணவு வழங்க முடியாமல் போயிருந்தாலும் தண்ணீர் வழங்கக்கூட ஏற்பாட்டாளர்கள் முன்வரவில்லை

விசய் வந்தவுடன் பார்க்கும் வெறியில் முண்டியடித்துக் கீழே விழுந்தோரை மிதித்துக்கொண்டு பலர் முன்னேற முயன்றனர்.

இந்த நிலையில், வேண்டுமென்றே நாற்பதுக்கும் மேற்பட்ட ஊர்திகள் சுற்றிச்சுற்றி உலா வந்து கூட்டத்துக்குள் புகுந்ததாக இப்போது குற்றம் சுமத்தப்படுகிறது.

இறந்தோர் 41 பேர், அடிபட்டு அல்லது மயக்கமடைந்து கிடந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். மூன்று நான்கு பேர் ஓர் ஊர்தியில் ஏற்றப்பட்டிருந்தாலும், மிகு ஊர்திகள் வேண்டப்பட்டன என்பதை ஏன் விசய் வெறியர்கள் நினைக்க மறுக்க கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

மின் இணைப்பு தடங்கலா? தடுக்கப்பட்டதா?

சிறு நிகழ்வு என்றாலும்கூட இடையில்லா மின் தொடர்பு பெற மின்னியற்றி (செனரேட்டர்) ஏற்பாடு செய்வது பொதுவான நடைமுறையாகும். கரூர் நிகழ்வுக்காக மின் வாரிய ஒப்புதல் பெற்று மின்னிணைப்புப் பெற்றதாக எவரும் கூறவில்லை. மாறாக, மின்னியற்றியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வு நடக்கும்போது அந்தப் பகுதிகளில் மின் தொடர்பு துண்டிக்கப்படவேண்டும் என்று விசய் கட்சியினர் மின் வாரியத்திடம் வேண்டியபோது, அது மறுக்கப்பட்டது என மின் வாரியம் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில், மின் கம்பங்களின் மேல் சிலர் ஏறியதைத் தொடர்ந்து மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டு, உடனடியாக இணைப்பும் தரப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கும் நிகழ்வுக்கும் தொடர்பில்லை.

நிகழ்வின்போது மின்னியற்றியின் தொடர்பைத் துண்டித்துக் குழப்பம் செய்தோர் விசய் ஆர்வலர்கள் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது.

காலம் கடந்த விசய் வருகை ஏன்?

அனைத்துக்கும் மேலாக விசய் வேண்டுமென்றே செய்த காலக் கடத்தல்தான் – காலத் தாழ்த்தல்தான் இழப்புகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது.

நாமக்கல்லில் விசய் வந்தது பகல் 2.45 மணி. கட்சியின் பொதுச் செயலாளர் வெளிப்படையாக அறிவித்தது காலை 8.45 ஆகும்.

கரூரில் விசய் வந்தது இரவு 7:15 மணி. மக்களிடம் சொல்லப்பட்டது பகல் 12 மணி.

ஆனால், சென்னையில் விசய் புறப்பட்டது காலை 8.45 மணிக்குத்தான். 8 45 மணிக்குப் புறப்பட்டால், உரிய காலமான 11,- 12 மணிக்குள் நாமக்கல் வந்துசேர முடியாது என்பது விசய்க்குத் தெரியாமலா இருக்கும்.

வரும் வழிகளில் வரவேற்பா? வழிமறித்தலா?

திருச்சி வான் நிலையத்திலிருந்து நாமக்கல் வரும்போது வழக்கத்துக்கு மாறான வழியில் பயணம் செய்ததுடன், ஆங்காங்கு பல ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டப்பட்டிருந்தனர்.

இதைப் போன்று, நாமக்கல்லிலிருந்து கரூர் வரும் வழியிலும் ஆங்காங்கே வழிமறித்தல் என்ற பெயரில் மக்கள் திரட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத் தலைநகரின் கூட்டத்துக்குச் செல்லாமல், அவரவர் ஊரில் வரவேற்பு நடத்தியது ஏன்?

இத்தகைய கூடுதல்களுக்கான ஒப்புதலினைக் காவல் துறையினரிடம் பெறவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தங்கள் ஊர்களில் விசய் பார்வையைப் பெற்ற பின் அவர்கள் ஏன் மீண்டும் நாமக்கல் மற்றும் கரூர் நகர்களுக்கு விசய் பேருந்தைத் தொடர்ந்து வரவேண்டும்? இவையெல்லாம் இயல்பாக நடந்தனவாக இருக்கவில்லை. திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நாடகக் காட்சிகளாகவே தெரிகின்றன.

நோக்கம் இதுதான்

விசய் வருகைக்காக மக்கள் மணிக் கணக்கில் நாள் முழுவதும் காத்துக் கிடந்தார்கள், பேருந்து வரும் வழியெல்லாம் அவரைப் பார்க்க மக்கள் கூடி நின்றார்கள், அவரோடு பல வண்டிகள் அணி வகுத்துவந்தன, இதனால்தான் காலம் கடந்து வரும் நிலை ஏற்பட்டது என்ற கட்டமைப்பை உருவாக்க விசய் நினைத்தார். கரூரில் உரிய காலமான மூன்று மணியளவில் 2000 முதல் 3000 மக்களே திரண்டிருந்தனர் என்பதை எல்லோரும் ஏற்கின்றனர். கூட்டம் சேர்க்கவே காலம் நீடிக்கப்பட்டிருக்கிறது.இதனால், மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை, இன்னல்களை அவர் எண்ணிப் பார்க்கும் நிலையில் இருக்கவில்லை.

வெளி மாவட்டத்தினர் பங்கேற்பு

அனைத்து மாவட்டங்களிலும் ‘மக்கள் சந்திப்பு’ என்று அறிவித்திருந்தும், கரூர் நிகழ்வில் சேலம், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர் போன்ற அண்டை மாவட்ட மக்கள் திரட்டப்பட்டிருப்பது தெரிகிறது. இறந்தோரில் சிலர் ஈரோடு, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டத்தினராக உள்ளனர். மருத்துவமனையிலும் பிற மாவட்டத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறந்தோரின் உறவினர்கள் கூற்றுகளிலிருந்து, பெரும்பாலும் திருவிழாப் பார்க்கப் போவது போலச் சென்றவுடன் திரும்பிவிடலாம் என்று அழைத்ததால், முன்னரே ஏற்பாடு செய்திருந்த சிற்றுந்தில் சென்றோர் பலராக உள்ளனர். அவர்கள் விசய் ‘ரசிகர்’கள் என்று ஒரு சிலர் மட்டுமே தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும்கூட அரசியல் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

செருப்பு வீச்சு

விசய் பேசும்போது செருப்புகள் வீசப்பட்டன என்பதைக்கொண்டு தி.மு.க.வினர்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்தனர் என்று கூற முனைகின்றனர். விசய் பேருந்து வரை செருப்புகள் பறந்து வந்துள்ளன. இவற்றை விசய்யுடன் வந்திருந்த ‘குண்டர்’ படையினரே தடுத்துள்ளனர். இதனால், விசய் பேருந்து நிற்கும் இடத்தின் மிக அருகிலிருந்துதான் செருப்புகள் வீசப்பட்டிருக்கும்.

ஆனால், செருப்பு வீசியோர் எவரையும் அருகிலிருந்த விசய் ‘ரசிகர்’கள் தடுக்கவில்லை. அவர்களைப் பிடித்துக் காவல் துறையினர் அல்லது கட்சி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கவுமில்லை. அமைப்பாளர்களும் செருப்பு வீசியோரைப் பிடிக்க முனையவில்லை.

இதிலிருந்து, காத்திருந்து பொறுமை இழந்ததாலோ அல்லது பலர் மயங்கி விழுவதை நோக்கி அவரது கவனத்தை ஈர்க்கவோ கூட்டத்தினரே செருப்புகளை வீசினர் என்பது தெளிவாகிறது.

25,000 பேர் திரண்ட கூட்டத்தில், குறைவான எண்ணிக்கையில் தி.மு.க.வினர் கலந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்க முடியாது. அல்லது 25,000 எண்ணிக்கைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் தி.மு.க.வினராக இருந்திருக்கவேண்டும்.

ஆகவே, தி.மு.க.வின் சூழ்ச்சி, குழப்பம் என்ற குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்கக்கூடியனவாகத் தோன்றவில்லை. அத்துடன், ‘திருவிழா’வுக்கு வந்தவர்களாக இருந்ததால், செருப்பு வீச்சு போன்றவற்றைக் கண்டுகொள்ளவில்லை. விசய் என்ற நடிகரைப் பார்ப்பதற்கு மேல் அவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருந்ததாகவும் அறியக் கிடைக்கவில்லை.

விசய் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தாமல் பறந்ததும், மருத்துவமனையில் இருப்போருக்கு ஆறுதல் தெரிவிக்க மறுத்ததும், ‘மோதி விட்டு ஓடுதல்’ (hit and run) என்ற குற்றமாகவே கருதப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

இவற்றையெல்லாம் விசாரணை ஆணையம் கணக்கில் எடுத்து உண்மைகளைக் கண்டறியவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button