
விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருப்பதால், ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்துத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் (NCRB) என்பது மாநிலங்களில் நடைபெறும் குற்றச் செயல்களை பதிவு செய்து, வெளியிடும் ஒன்றிய அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களின் படி, உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருவதாக பீற்றிக்கொள்ளும் நிலையில், உறுபசி போக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் குறையவில்லை என்பதற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 418 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதில் விவசாயிகள் 4690 பேர். விவசாயத் தொழிலாளர்கள் 6096 பேர். இதில் ஆண்கள் மட்டுமே 4553 பேர். பெண்கள் 137 பேர். சிறிய மாநிலங்கள் எட்டு மற்றும் பெரிய மாநிலங்கள் ஆறு ஆக 14 மாநிலங்களில் தற்கொலைகள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தற்கொலைகள் கொஞ்சம் குறைந்துள்ளது. வேளாண் உற்பத்தி உயர்ந்து வருகிறது. வேளாண் மகசூல் மும்மடங்கு, விவசாயிகளின் வருமானம் இருமடங்கு என்பதை ஒன்றிய அரசின் கொள்கைத் திட்டமாக பிரதமர் அறிவித்தும், விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் தொடர்கிறது?
ஒன்று மட்டும் நிதர்சனமான உண்மை, வேளாண் மகசூல் உயர்ந்திருப்பது உண்மை. இது எல்லா விவசாயிகளுக்குமோ, அனைத்துப் பயிர்களுக்குமோ, அனைத்துப் பருவத்திற்குமோ உரியதல்ல. சில ஆண்டுகளில், சில பயிர்கள் மட்டுமே.
பல பருவங்களில் மகசூலில் பாதிப்புகளே அதிகம். பேரிடர் காலங்களில் பாதிப்பின் அளவிற்கேற்ப அரசுகள் நிவாரணமோ காப்பீட்டுத் திட்ட இழப்பீடோ வழங்குவதில்லை. அதனை காப்பீட்டு நிறுவனங்களும் கொடுப்பதில்லை. 33 சதத்திற்கு மேல் உற்பத்தி இழப்பு இருந்தால் தான் அரசின் நிவாரணம் பெறுவதற்கே விவசாயிகள் தகுதி பெறுவர். இதன் கீழ் மகசூலை இழக்கும் விவசாயிகளுக்கு எவ்வித உதவியும் இல்லை. விவசாயிகள் வங்கிகளில் பெற்ற வேளாண் கடன்களை, பெருமளவு இயற்கைப் பேரிடர் ஏற்படும் ஆண்டுகளில் கூட தள்ளுபடி செய்யப்படாமல் அபராத வட்டி விதிக்கப்படுகிறது. அரசின் குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாயிகள் இதுவரை போராடி வரும் சி2+50 படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
இவ்வளவு இடர்பாடுகளுக்கும் இடையே நாட்டின் தேவைக்கும் மேல் உணவுப் பொருட்களை விவசாயிகள் விளைவித்துக் கொடுப்பதால்தான், வேளாண் விளைபொருட்களைக் கொண்டு அரசு எத்தனால் தயாரிக்க முடிகிறது. நாட்டின் அன்னிய செலாவணி இழப்பைக் குறைக்க முடிகிறது.
விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு என்பது விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கிறது. வேளாண் தொழிலில் ஆண்டு முழுதும் வருமானமில்லாத நிலையிலும் மாற்றுத் தொழிலை மேற்கொண்டாலும் உறுதியான உத்தரவாத வருமானமின்மையும், நுண்கடன் பெற்று திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் தன்மானத்தைக் காத்திடவும் பல குடும்பங்கள் தற்கொலையை நாடுகின்றன.
இப்படியான பல்வேறு சூழலில் தான் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலையை தீர்வாக்கிக் கொள்கின்றனர். இந்தத் தற்கொலை கணக்கு முழுமையானதல்ல. ஏனெனில், தற்கொலைகளை அரசுக்குத் தெரியாமல் மறைப்பதும் நடக்கிறது. பல நேரங்களில் வேளாண்மை இழப்பால் ஏற்பட்ட தற்கொலையாக காவல் துறையோ வருவாய்த் துறையோ ஏற்றுக்கொள்வதில்லை.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதற்கென தனிக் குழு அமைத்து இவற்றை ஆய்வு செய்திட வேண்டும். இந்தக் குழுவில் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். சமூக அக்கறையுடன் ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்துத் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.
