
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை நிர்வாகத்தின் வல்லுநர் குழு ஆய்வில், நமது வெப்ப நிலையில் சராசரியாக 10சி, அளவுக்கு உயர்வு காணப்படுகிறது.
இதனால், இந்தியாவில் உணவு தானியங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் கோதுமையில் உற்பத்தி இழப்புகள் வருடத்திற்கு 6 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணித்தது.
மேலும் இததகைய உற்பத்தி இழப்புகள் பிற பயிர்களில் ஏற்படுவதுடன், இந்திய விவசாயிகளுக்கு சுமார் 20 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வருமான இழப்புகள் ஏற்படும் எனவும் தெரிவித்தது. இதனால் கிராமப்புறப் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் நடைமுறைச் சூழல் நிலவுகிறது. இதனால் வேளாண் விளைவுப் பொருட்களின் விலை உயர்வுகளால் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழலில், நிகழ் மற்றும் எதிர்காலத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கமே அதிக அளவு பாதிக்கப்படும்.
ஒருபுறம் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து விட்டாலும், இன்னமும் நமது நாட்டில் தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அதிக அளவு ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தற்போதைய பருவ மாற்றுப் பிரச்சினைகளால், மேலும் தற்போதைய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் பிரச்சனைகள் பெருவாரியாக நமது நாட்டு மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்கின்றன. இந்தச் சூழலில், ஒரு மாற்று வேளாண் செயல் திட்டம் வாயிலாக நமது நாட்டின் மற்றும் மாநிலத்தின் வேளாண் துறையின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பெருக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
புதிய ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைய செயல்திட்டம்
தற்போதைய வேளாண் துறையில் பெருவாரியாகப் பின்பற்றப்படும் ஒரு பயிர் சாகுபடிக்கு மாற்றாக உணவு தானியம்+கோழி+மீன் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றி, நமது விவசாயிகள் செயல்பட அவர்களுக்கு நாம் பயிற்சிகளும், சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர் தங்களின் வயல்களில் பின்பற்ற மிகவும் குறைந்த மானிய விலையில் அல்லது இலவசமாக இதற்குரிய வேளாண் இடுபொருட்கள் வழங்க வேண்டியது அவசியம்.
கடந்த பல ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பேராசிரியர் இராம.கதிரேசன் தலைமையிலான வல்லுனர் மற்றும் விரிவாக்கக் குழு நெல், மீன், கோழி போன்றவற்றைக் கொண்டு, அதிக அளவு இயற்கைச் சீற்றப் பாதிப்புகளைக் கொண்ட மாநிலத் திட்ட கமிஷனால் அடையாளம் காணப்பட்டது. இவை மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் வெற்றிகரமாக பல நூறு ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்களில் அறிமுகம் செய்து, மிகவும் குறுகிய காலத்தில் ஏழை, எளிய பண்ணை மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பிரச்சனைகளுக்கு உரிய ஆக்கபூர்வமான வேளாண் தீர்வுகளைப் பெற்றுத் தந்தது. இத்துடன், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகை செய்தது. தற்போதைய பருவ மாற்றுப் பிரச்சினைகளில் இருந்து விவசாயிகளின் உற்பத்தி, உற்பத்தித் திறன் பெருக்கம், வருமானம் உயரவும் பெரிதும் உதவியுள்ளது.
எனவே நமது மாநிலத்திலும், நாடு முழுவதும் தற்போதைய ஒரு பயிர் சாகுபடிக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த பண்ணைய முறை பின்பற்றுவதன் வாயிலாக, நம்மால் தற்போதைய பருவமாற்றுப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
