வரலாறு

தியாகச் சுடர் சி.கெ.மாதவன்

என்.எஸ்.பிரதாப் சந்திரன்

தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றில் மறக்க முடியாத மகத்தான மனிதர், தொழிலாளர்களால் சி.கெ.எம் என்று அழைக்கப்படும் சி.கெ.மாதவன் அவர்கள். இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலகட்டத்தில் சிதறிக் கிடந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அவர்களுடைய உரிமைக் கனலை நெஞ்சில் ஏற்றிப் போராட்டக் களம் அமைத்த மகத்தான தலைவர்.

இவர் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிய காலம், தொழிற்சங்க வரலாற்றில் அனல் வீசிய காலம் என்றும் சொல்லலாம். எத்தனை எத்தனை போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அப்படி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் பல்வேறு உரிமைகளையும், நலன்களையும் தொழிலாளி வர்க்கம் பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

சிறுவனாக இருந்த காலத்திலேயே கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்து அவர் மூலமாக அரசியல் போதனை பெற்று, தொழிற்சங்கப் பணியில் காலடி எடுத்து வைத்தவர் சி.கெ.எம். சங்கத்தில் சந்தா வசூலிப்பாளராக தனது தொழிற்சங்கப் பணியைத் தொடங்கியவர். தனது அயராத உழைப்பால் பல்வேறு தொழிற்சங்கங்களுக்குத் தலைமை தாங்கினார்.

மாதவரம் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம், மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர் சங்கம், டி.எஸ்.ஆர் கோகுல் பவுடர், தாதாபார் மெடிக்கல், கல்பனா லேம்ஸ், கோரமண்டல் ப்ராடக்ட்ஸ், எஸ்.ஆர்.எப், எம்.எப்.எல், ஐஓசி, இந்தியா சிமெண்ட், இந்தியா ரேடியேட்டர், வெங்கடேஸ்வரா மில், அசோக் லேலண்ட், நகரச் சுத்தித் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களுக்குத் தலைமை தாங்கினார். முதன்முதலில் கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களையும் சங்கமாக அணி திரட்டினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செங்கல்பட்டு ஜில்லா போர்ட் உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்று, மாதவரம் பஞ்சாயத்து உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் மாதவரம் பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு பெற்றார். இவர் தலைவராக இருந்தபோதுதான் மாதவரத்தில் முதன்முதலாக தெருவிளக்கு அமைக்கப்பட்டு அன்றைய முதலமைச்சர் காமராஜரால் தெருவிளக்கு எரிய வைக்கப்பட்டு, காமராஜரின் பாராட்டைப் பெற்றார்.

நாளும் பொழுதும் தொழிலாளர் வர்க்கத்திற்காக உழைத்ததன் காரணமாகக் கொலைப்பழி, தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை எனப் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். அவர் மட்டுமா? அவர் குடும்பமே அனுபவித்தது. தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் வர உழைத்த அந்த மனிதனின் வாழ்க்கையில் மட்டும் ஒரு நாளும் அந்த வசந்தம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால் அனுபவித்த கொடுமைகளுக்கு அளவு உண்டா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தலைமறைவுக் காலத்தில் தங்கியிருந்த மறைவிடங்களில் ஒன்று மாதவரம் பகுதி. அப்பொழுது ஜீவா பெண் வேடமிட்டு கே.எம்.சாமி அவர்களுடைய மனைவியின் கொலுசைக் காலில் அணிந்து கொண்டு இந்தப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் மாலையில் லாரி நிறைய காவல்துறையினர் சி.கெ.எம் வீட்டைத் துப்பாக்கியுடன் சூழ்ந்து கொள்கிறார்கள்‌. எம்.ஆர்.வெங்கட்ராமனை வீட்டிலிருந்து வெளியே வருமாறு காவல் துறையினர் மெகா போனில் அழைக்கின்றனர். வீட்டிலிருந்து யாரும் வெளிவரவில்லை. இதனால் ஊரில் உள்ள மக்களை எல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் அச்சுறுத்த ஆரம்பிக்கிறது. ஆனாலும் யாரும் எம்.ஆர்.வியைக் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. இதற்கு மேலும் அங்கு இருப்பது சரியல்ல, இதுநாள் வரை தன்னைப் பாதுகாத்த மக்களுக்கு அது பெரிய துன்பமாக மாறிவிடும் என்று எண்ணி வீட்டில் இருந்து வெளியே வருகிறார் எம்.ஆர்.வி. அவருடன் சேர்த்து சி.கெ.மாதவனும், அவருடைய தந்தை கெம்புவேலும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

சிறையில் அவர்களுக்குப் பெரிய சித்தரவதைகள் நடைபெறுகின்றன. ஆனாலும் தங்களை நம்பி வந்த தலைவரை உரிய பாதுகாப்பு இல்லாமல் காவல்துறை கைது செய்யும்படி ஆகிவிட்டதே என்று தந்தையும் மகனும் கவலைப்படுகின்றனர்.

மற்றொரு முறை தந்தையும் மகனும் கைது செய்யப்படுகிறார்கள். இருவரின் உடைகளையும் களைந்து நிர்வாணமாக்கி, ஒருவர் கண்ணெதிரே மற்றவரைப் புளியாம் விளாரால் அடிப்பார்கள். “என்னை அடிக்கும் போது எங்க அப்பா கத்துவார். என்னை வேண்டுமென்றால் அடிங்க, அவனை விட்டு விடுங்கள்” என்று. அதுபோல் அவரை அடிக்கும் போது, “நான் கத்துவேன். என்னை வேண்டுமானால் அடியுங்கள், எங்க அப்பாவை விட்டுவிடுங்கள்” என்றார். “இதுபோல் ஒரு வாரம் அடித்தார்கள். ஒரு சிகிச்சை கூட இல்லை. ஒருவருக்கொருவர் வடியும் ரத்தத்தைத் துடைப்பது தவிர வேறு வழியில்லை. இந்நிலையில் சீழ் வேறு பிடிக்க ஆரம்பித்தது. நாங்கள் பட்ட வலிக்கும் வேதனைக்கும் அளவு உண்டோ?”

“இந்நிலையில், ஒரு நாள் கோர்ட்டில் ஆஜர்படுத்த எங்களை அழைத்தனர். எங்களுக்கு உடையில்லை. வேறு யாரோ ஒரு கைதி பயன்படுத்திய ஒரு துணியைக் கொடுத்தனர். அந்தத் துணி மூட்டையில் கையில் அகப்பட்ட துணி ரத்தமும், சீழும் படிந்து, சீலைபேன் ஓடிக் கொண்டிருந்தது. கையில் தொட்ட உடனே ஒரு அருவருப்பு. அம்மணமாக இருந்தாலும் இருக்கலாம். இதைப் போடக்கூடாது என்று தூக்கி எறிந்து விட்டோம். இதைக் கண்ட காவலர்கள் எங்களை அடித்துத் துன்புறுத்தி உடையை போடச் செய்தனர். அதை அணிந்து நாங்கள் நீதிமன்றம் சென்றபோது உடலெல்லாம் ஒரே அரிப்பு. விசாரணை முடிந்து சிறைக்கு வந்து அந்த உடையைக் களைந்த போதுதான் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

அன்று எங்களுக்கு மானம் மறைக்கும் உடையை விட அம்மணமே மகிழ்வைத் தந்தது. இளைய வயதில் நானும், முதிர்ந்த வயதில் எனது தந்தையும் இந்தக் கொடுமைகளை அனுபவித்தோம்” என தான் அனுபவித்த சிறைக் கொடுமைகளை சி.கெ.எம் விவரித்துள்ளார்.

ஜீவாவின் போதனையை ஏற்று, ஜீவா வழியில் வாழ்ந்த அந்த மனிதர். ஜீவா போன்று குடிசையில் பிறந்து, குடிசையிலே மறைந்து போனார்.

செப்டம்பர் 29: சி.கெ.மாதவன் நினைவு நாள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button