

ஷாங்காய் ஒத்துழைப்பு கழகத்தின் (ஷாங்காய் கோவாபரேஷன் ஆர்கனைசேஷன்-எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவில் உள்ள டியான்ஜின் நகரில் செப்டம்பர் முதல் நாள் அன்று நடைபெற்றது.
அதில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன தலைவர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள் “நாங்கள் எதிரிகள் அல்லர், பங்காளர்கள்” என்ற தோற்றம் உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கது
2020 லடாக் நெருக்கடிக்கு பின்பு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பெரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு என்ற பாதையில் இந்த பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது.
நெருக்கடிகள்:
2020 க்கு பின் சீனாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது. டிக் டாக், வீசாட், ஷேர்இட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சீன செயலிகள் தடை செய்யப்பட்டன.
பிற வெளிநாடுகளைப் போல் அல்லாமல், சீனாவில் இருந்து நேரடி அந்நிய முதலீடு வந்தால் அரசு அனுமதி பெற வேண்டும், மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் பாதுகாப்புத்துறை மற்றும் வெளி விவகாரத்துறை ஆகியவற்றின் அனுமதி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
சீனாவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஆன்ட்டி டம்பிங் வரிகள் கூடுதலாக விதிக்கப்பட்டன.
சீனாவை ஒரு எதிரி நாடாக வகைப்படுத்தினார்கள். சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடுகளை பற்றி இந்தியர்கள் பேசுவதே தேசத்துரோகம் என்று சங்கிகள் பொங்கினார்கள்.
சீனாவின் எதிர்வினை:
இதற்கு பதிலடியாக, சீனாவும் இந்தியா மீது பல வணிகத் தடைகள், இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது.
மெட்ரோ பாதை போட தேவையான, துளையிடும் எந்திரங்களை அனுப்ப தடை விதித்தது அல்லது தாமதம் செய்தது. அரிய வகை கனிமங்கள், தனிச்சிறப்பு உரங்கள் இந்தியாவுக்கு அனுப்புவதில் இருந்து தடுக்கப்பட்டன. தொழில் நுட்பங்களை பகிர்வது நிறுத்தப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதல்:
இந்தியர்களின் நண்பன் என்று மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட டிரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு அபராத வரி உள்ளிட்ட 50 சதவீதம் விதித்துள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் உயர்கல்வி பெற முடியாதவாறு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதிகளை செய்வதற்கு பெரும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும்?
அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளோடு இந்தியாவின் ஒத்துழைப்பு மேம்படுத்தப் படுவதற்கான அவசியம் இன்று அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய-சீன தலைவர்கள் சந்தித்து பேசியதின் விளைவாக, எல்லை பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசுவது என்றும், ஐந்து ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள வணிகக் தொடர்புகளை மீண்டும் செயல்படுத்துவது என்றும், மீண்டும் நேரடி விமான பயணங்களை துவக்குவது என்றும் முடிவு செய்துள்ளது, இரு தரப்பு உறவுகளின் தேக்க நிலையை உடைத்துள்ளது.
உலக வர்த்தக கழகம், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள உலக நிதி நிறுவனங்களின் எதேச்சதிகார போக்குகளை எதிர்கொள்ள, எஸ்சிஓ மேம்பாட்டு வங்கி உள்ளிட்ட தெற்குலக நிதி ஒத்துழைப்பை விரிவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தெற்கு ஆசிய மண்டல வணிகம் மந்தமாகிக் கிடந்தது. இப்போது அது உயிர்ப்பிக்கப்படுகிறது. இது இந்தியத் தொழில், விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும். புதுடெல்லியும் பெய்ஜிங்கும் இணைந்து முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பதட்டம் தணிவதால், எல்லையோர பாதுகாப்பு செலவு குறையும்.
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்களின் உற்பத்தி சீன ஒத்துழைப்பால் அதிகரிக்கும். இதனால் சீன ஏற்றுமதிகளுக்கு உதவி கிடைப்பதோடு, இந்திய சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி அடைவதற்கும் வழி ஏற்படுகிறது.
வணிகத்தைப் பொறுத்தவரை, பற்றாக்குறையை குறைக்குமாறும், சந்தையை எளிதில் அணுக வழி செய்யுமாறும் இந்திய பிரதமர் மோடியும், அதே நேரத்தில் வணிகக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும், வளர்ச்சியை குவிமையப்படுத்துமாறும் சீனத் தலைவர் ஜின்பிங்கும் பரஸ்பரம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
எந்த தரப்பும் தான் விரும்பியதை எல்லாம் பெற்று விட முடியாது. வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளையும் பாதிக்கிற மோதல் போக்கை கைவிட்டு ஒருவரை ஒருவர் சார்ந்ததாக, உறவுகளை மேம்படுத்த முன் வந்திருப்பது இரு நாடுகளுக்கும் நலன் விளைவிக்கும்.
‘சீன அச்சுறுத்தல்’ எனும் புலம்பல்
“சீன அச்சுறுத்தல்” என்று இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் எப்போதும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளின் நலன் இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்திய-சீன மோதல் போக்கை ஊக்குவிப்பதன் மூலம், ஏகாதிபத்திய நாடுகளோடு இந்தியாவை ராணுவ ஒப்பந்தங்களை செய்து கொள்ள வைப்பதும், ஆயுதங்களை வாங்க வைப்பதும் எளிதாகும்.
பெய்ஜிங்குடனான உரையாடல் உணர்ச்சிபூர்வமானது அல்ல; இந்தியப் பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான பேரம் பேசும் சக்தியைப் பற்றியதாகும்.
டியான்ஜின் பேச்சுவார்த்தை இந்தியா சீனாவுக்கு இடையிலான போட்டிகளை முடிவுக்கு கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒழுங்குபடுத்தி இருக்கின்றன.
அமைதி என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல; அது திட்டமிடப்படுவது. அவ்வாறு திட்டமிட யானையும் டிராகனும் நீண்ட முடக்கத்துக்கு பின்பு ஒப்புக் கொண்டுள்ளன.