

இனக்கலவரம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு வழியாக மணிப்பூர் சென்று வந்துள்ளார் மோடி! அதுவும் தானே விரும்பி சென்ற பயணம் அல்ல. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை வைத்தன. அதற்காகத்தான் இந்தப் பயணம்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அவருக்கு மனமில்லை. தற்போது மேள, தாளத்தோடு வரவேற்பு கொடுக்கப்பட சென்று வந்துள்ளார். வாம்மா மின்னலு என்பதைப் போல உடனடியாக திரும்பி வந்துவிட்டார்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம், மெய்தி – குக்கி இனக்குழுவினருக்கு இடையில் மோதல் வெடித்தது. அதை ஒட்டி ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் 280-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப் பகுதிகளில் இருந்து 70,000க்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் இரட்டை எஞ்சின் ஆட்சி என்று கூறியது பாஜக, ஆனால் தற்போது அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு செப்.13 அன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார்.
காணாமல் போன நீதி
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்கு உரிய நீதி குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட அங்கு உதிர்க்கவில்லை. அசாம், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான பயணங்களுடன், மணிப்பூர் பயணத்தை திட்டமிட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை. 3 மணி நேரத்தில் முற்றுப்பெற்றிற்று. அதனால் எந்த தாக்கமும் ஏற்படவில்லை.
மணிப்பூர் வன்முறையைப் பொதுமைப்படுத்தும் முயற்சி!
அனைத்து முதலமைச்சர்களிடமும், ‘‘தங்கள் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்’’ என்று பேசி உள்ளார் பிரதமர். சம்பவம் ராஜஸ்தானில் நடந்தாலும் சரி, சத்தீஸ்கரில் நடந்தாலும் சரி, மணிப்பூரில் நடந்தாலும் சரி, அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, சட்டத்தின் ஆட்சியையும், பெண்களுக்கான மரியாதை அளிப்பதையும் பராமரிப்பது மிக முக்கியம் என்றார்.
மணிப்பூர் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மேற்கூறிய மாநிலங்களோடு ஒப்பிடுவதன் மூலம் அதன் பயங்கரத்தைக் குறைப்பது அல்லது ‘சிண்டுமுடித்து’ விடுவது அவரது நோக்கமாகும். ஏனெனில் அப்போது அந்த மாநிலங்களில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் பிரச்சாரப் பயணம்!

தொடர்ச்சியான வன்முறைகளை எதிர்கொண்டு, வீடுகள் இல்லாமல் வாழ்ந்து வரும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்து, ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் மணிப்பூர் மக்கள், மோடியின் வருகை, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கம் நிலவும் என்று நம்பிய அவர்களின் நம்பிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
குக்கி, சோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சூரசந்த்பூருக்கு பிரதமர் வருகை தந்தபோது, மெய்தி மக்கள் உடன் சென்றிருக்க வேண்டும். மெய்தி ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்குக்கு அவர் சென்றபோது, அவரது குழுவில் சில குக்கிகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது பயணத்தின் அப்படியான ஏற்பாடுகள் எதுவுமில்லை.
எனவே, பிரதமரின் மணிப்பூர் சூறாவளி சுற்றுப்பயணம், ஒரு பிரச்சாரம்தான் என்பதை உறுதிப்படுத்திற்று.
முக்கியப் பிரச்சினைகள்
பிற சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி அவர்கள் பகுதிக்குச் சென்று குடியேறியுள்ளார்கள். ஆயிரக்கணக்கான குக்கி -சோமி மக்கள் இம்பால் மற்றும் பள்ளத்தாக்கின் பிற நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர், அதே நேரத்தில் மெய்திகளின் எல்லை நகரமான மோரே மற்றும் காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் போன்ற மலை நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
மெய்தி பெரும்பான்மையாக வாழும் இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் குக்கி -சோமி பெரும்பான்மையாக உள்ள மலைகளின் எல்லையில், இதுபோன்று பரஸ்பரம் நடந்துள்ளது. இந்த இடப்பெயர்வுகள் மற்ற சமூகத்தினரின் தாக்குதல்களுக்குப் பிறகு அல்லது அத்தகைய தாக்குதல்களுக்குப் பயந்து நிகழ்ந்தன.
அப்போதைய தலைமைச் செயலாளர் பி.கே.சிங், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நிவாரண முகாம்களையும் மூடுவதை நோக்கமாகக் கொண்ட மூன்று கட்ட மீள்குடியேற்றத் திட்டத்தை அறிவித்தார். இது முதலில் இரண்டாவது வகை இடம்பெயர்ந்த மக்களைக் கட்டங்களாக மீள்குடியேற்றுவதை உள்ளடக்கும் வகையில் உள்ளது. ஜூலை, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இலக்கு காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டன. பின்னர் முழு இயல்புநிலை மீட்டமைக்கப்பட்ட பிறகு முதல்வகை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சுமார் 5,000 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியதாக அதிகாரிகள் கூறினாலும், இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே உண்மை.
போக்குவரத்து இடைவெளி
மாநிலத்தில் சுதந்திரமான நடமாட்டம், பள்ளத்தாக்கு மற்றும் மலை மாவட்டங்களுக்கு இடையே கடினமாகிவிட்டன. மேலும் இரு சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களும் பிற சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பாதுகாப்பாகப் பயணிக்க முடியவில்லை.
இந்த எல்லைகள் பாதுகாப்பு இராணுவ வீரர்களால் பெருமளவில் நிர்வகிக்கப்படுகின்றன, மெய்திகள் மாநிலத்தின் மத்திய பள்ளத்தாக்கை விட்டு வெளியேற முடியவில்லை, என்பதுடன் நெடுஞ்சாலைகளையும் அணுக முடியவில்லை, மேலும் குக்கி -சோமி மக்கள் இம்பால் மற்றும் அங்குள்ள விமான நிலையத்திற்குச் செல்ல முடியவில்லை.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, மாநில நெடுஞ்சாலைகளில் சுதந்திரமான போக்குவரத்தை அமல்படுத்துவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இது முதல் நாளிலேயே பின்னடைவை ஏற்படுத்தியது.
குக்கி -சோமி பெரும்பான்மையாக உள்ள காங்போக்பி மாவட்டத்தில், இதை எதிர்த்தபோது, இம்பாலில் இருந்து மணிப்பூர் மாநிலப் போக்குவரத்து பேருந்தை அழைத்துச் சென்ற பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் மோதியதை அடுத்து ஒருவர் இறந்தார், பலர் காயமடைந்தனர்.
தற்போது, குக்கி- சோமி குழுக்கள் நெடுஞ்சாலைகள் வழியாகப் பள்ளத்தாக்கிற்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இடைநிலை மண்டலங்கள் வழியாக மெய்திகளின் இயக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பள்ளத்தாக்கில் குக்கி- சோமி மக்களின் நடமாட்டத்திற்காக மெய்தி குழுக்களுடன் இதேபோன்ற எந்த ஒப்பந்தமோ, உறுதிமொழியோ எட்டப்படவில்லை.
தன்னாட்சிக் கோரிக்கை!
மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், குறிப்பாக இரு தரப்பு மக்களும் அதிகளவில் ஆயுதம் ஏந்தியிருப்பதாலும், சமூகங்களுக்கிடையில் எந்த உரையாடலும் இல்லாததாலும், மாநிலம் தொடர்ந்து, வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கின்றனர். தற்போது, உள்துறை அமைச்சகம் இரு தரப்பினருடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கடந்த வாரம் குக்கி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் குக்கி- சோமி கிளர்ச்சிக் குழுக்களுடன் நடவடிக்கைகளை நிறுத்துதல் (SoO) ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது.
ஒப்பந்தத்தில் உள்ள ஒரு முக்கியமான பிரிவு, குக்கி- சோமி குழுக்கள் “மணிப்பூரின் பிராந்திய ஒருமைப்பாட்டை” மதிக்க ஒப்புக்கொண்டதைக் காட்டியது, இது குக்கி -சோமி பிரதிநிதிகளின் “தன்னாட்சி நிர்வாகம்’’ என்ற அவர்களது முதன்மைக் கோரிக்கைக்கு முரணானது.
ஒன்றிய அரசாங்கத்துடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசத்தைக் கோருவதில் இப்போது கவனம் செலுத்துவதாக கூறுகின்றனர்.
முன்னாள் முதல்வர் என்.பிரேன் சிங்கின் கீழ் மாநில அரசின் பாரபட்சமான நடத்தை, அரம்பாய் தெங்கோல் போன்ற இனவெறி மெய்தி ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தல், அரசைப் பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு அளித்தல், உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற ஒரு ஏற்பாடு அவசியமாகிவிட்டதாக குக்கி -சோமி குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. இதுதான்அவர்கள் பெருமை பேசும் இரட்டை எஞ்சின் அரசின் லட்சணம்!
உணர்வுகளுக்கு வேலி!
மியான்மருடனான சுதந்திரப் போக்குவரத்து ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது.இது இருபுறமும் எல்லையில் வசிக்கும் பழங்குடியினர் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் 16 கி.மீ வரை பயணிக்கவும் இரண்டு வாரங்கள் வரை தங்கவும் அனுமதித்திருந்தது. ஆனால் இன்று நுண்துளைகள் கொண்ட எல்லை வேலி அமைக்கப்படும் என்று அறிவித்தது.
இது குக்கி -சோமிக்கு மட்டுமல்ல, நாகாக்களுக்கும் ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாகும். ஏனெனில் இரு சமூகங்களும் எல்லையின் மறுபக்கத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய இன, பொருளாதார மற்றும் அன்றாட உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. குக்கி-சோமி மற்றும் நாகாக்களும் ஒன்றியத்தின் இந்த முடிவை எதிர்க்கின்றனர். பிரதமரின் வருகைக்கு முன்னதாக, மணிப்பூரின் நாகா சமூகங்களுக்கான உச்சக் குழுவான ஐக்கிய நாகா கவுன்சில், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மாநிலத்திற்குள் பொருட்கள் நுழையும் அனைத்து முக்கிய வழிகளையும் தடுத்து “வர்த்தகத் தடையை’’ அறிவித்திருந்தது. ஆனால் இப்போது அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக மணிப்பூர் மாறிவிட்டது. ஆட்சி அதிகாரத்திற்காக, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் உம் பயன்படுத்திய மத, இனவெறி, பிளவுவாத அரசியல் என்று ஒரு மாநிலத்தையே முடக்கி விட்டது. இதிலிருந்து மீள இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். அதுவே மணிப்பூருக்கான ஒரே தீர்வு!