கட்டுரைகள்

முரண்களில் மூழ்கும் அமெரிக்காவை இந்தியா காக்கவேண்டியதில்லை

மே.து.ரா.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் டிரம்ப் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள், உலக அரங்கில் அமெரிக்கா அடுத்தடுத்து இழந்துவரும் செல்வாக்கினை மீட்கும் முயற்சிகளாகவே தோன்றுகின்றன.

உலக ஏற்றுமதி வணிகத்தில் 1950இல் 17% என்றிருந்த பங்களிப்பு, 2024இல் 10%க்கும் கீழாகக் குறைந்துவிட்டது.

உலகின் கூட்டுத் தொழில் உற்பத்தியில் 60% என்பது தொடர்ந்து சரிந்து கீழ்நிலைக்கு வந்துவிட்டது.

கணினி நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சிப்பிகளின் உருவாக்கம், பணிச் செயல்பாடுகள் ஆகியவற்றுடன், போர்க் கருவிகளின் உற்பத்தி போன்ற ஒரு சில துறைகளில் மட்டுமே அமெரிக்கா தன்னைக் காத்துவருகிறது. இதற்குத் துணையாக அமெரிக்க டாலரின் ஏற்புத் தொடர்ந்து குறைந்தும், பரவலான பயன்பாடு செல்வாக்கை நிலைநிறுத்துகிறது.

2022ஆம் ஆண்டில் உலக ஏற்றுமதி வணிகத்தில் 10.89% பங்களிப்பு இருந்தபோதிலும், இறக்குமதி 14.59% என இருந்தது. இந்த இடைவெளி, அமெரிக்காவின் கடன்களை மேலும் பெருக்கிவிட்டது. உள்நாட்டு வரவு செலவுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளும் கடன்களும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இதனை மாற்றுவதற்குத்தான் ‘மீண்டும் சிறப்பான இடத்துக்கு அமெரிக்கா’ என்ற முழக்கத்தை டிரம்ப் முன்னெடுத்தார். தற்போது சிறப்பாக இல்லை என்பதன் ஒப்புதல் வாக்காகவே இது அமைந்திருக்கிறது.
மீண்டும் உயர்நிலை, மேல்நிலை, வளர்நிலை, செல்வாக்கு நிலை, அடக்குமுறை நிலை பெறுவதற்காக எடுத்துவரும் முயற்சிகளும், இவற்றுக்கான அரசியல் செயல்பாட்டு முனைப்புகளும், முரண்களில் முட்டி மூழ்கிக்கொண்டிருக்கின்றன.

அச்சுறுத்தல், வேண்டாத பொருள்களை வற்புறுத்தித் திணித்தல் என்ற வகையில் தன்னைக் காத்துக்கொள்ள அமெரிக்கா எவ்வகையிலும் தயங்கவில்லை.

இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி

இவையெல்லாம் காட்டும் உண்மைகளை உற்று நோக்கவேண்டும்.

அமெரிக்காவில் உற்பத்தியாகாத, ஆயினும் வேண்டியிருக்கின்ற பொருள்களை அமெரிக்கா இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. ஆனால், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருள்கள் பெருமளவில் அதனிடம் இல்லை. அல்லது பிற நாடுகள் பெறுகின்ற தரத்திலும் விலையிலும் அமெரிக்காவால் கொடுக்க முடியவில்லை.

அமெரிக்காவுக்கு இந்திய ஒன்றியம் ஏற்றுமதி செய்வதைவிட, இறக்குமதி செய்வது குறைவாக இருக்கிறது. இதனை இணைப்படுத்த மேலும் பல அமெரிக்கப் பொருள்களை இந்திய ஒன்றியம் வாங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் டிரம்ப்.

இதற்கு முன்னரே பயணச் செலவு மிகுந்திருந்தும் எண்ணெய்ப் பொருள்களை அமெரிக்காவிடமிருந்து இந்திய ஒன்றியம் வாங்கிவருகிறது. அத்துடன், ரசியாவில் கிடைக்கும் வாய்ப்புகளிருந்தும் போர்க் கருவிகள் சிலவற்றையும் பெற்றுவருகிறது. இவையன்றி அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பொருள்கள் பெரிதாக எதுவுமில்லை. உலக நாடுகள் யாவற்றுக்கும் இதே நிலைதான்.

இருப்பினும், இந்திய ஒன்றியத்தின் 140 கோடி மக்கள் தொகை கண்களை உறுத்துகிறது. சிறிய நாடுகள் பலவற்றுக்கு விற்கும் பொருள்களின் அளவைவிட, இந்திய ஒன்றியம் ஒன்றுக்கு மட்டும் விற்கும் அளவு மிகுந்திருக்கும். இதனால்தான் இந்திய ஒன்றியம் குறி வைக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எப்போதும் வேண்டாத மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், இப்போதைக்கு வேண்டாத எண்ணெய், போர்க் கருவிகள் போன்றவற்றை வாங்குமாறு வற்புறுத்தப்படுகிறது.

25% இறக்குமதி வரி, ரசியாவிடம் எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25% எனக் கூட்டாக 50% வரி நடைமுறைக்கு வந்துவிட்டது.

ரசியாவில் எண்ணெய் வாங்குவது மட்டும்தான் காரணி என்றால், இந்தியாவைவிட மிக அதிக அளவில் எண்ணெய் எரிபொருள்களை வாங்கிக்கொண்டிருக்கும் சீனா, பெருமளவில் பெற்றுக் கொண்டிருக்கும் நேட்டோ உறுப்பினரான துருக்கி, பிற அய்ரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்குக் கூடுதல் வரி இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்போது அமெரிக்காவும் இந்திய ஒன்றியமும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன. பேச்சுக்கள் ரசிய எண்ணெய் குறித்திருக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்தை வாங்குவதே முன்னிற்கிறது. மக்காச்சோளத்தை வாங்கிவந்த சீனா தற்போது நிறுத்திவிட்டதால், அமெரிக்க வேளாண் மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதைத் தீர்க்க இந்திய ஒன்றியம் அச்சுறுத்தப்படுகிறது. அதற்காகவே 50% வரி செயல்படுத்தப்படுகிறது.

ரசிய எண்ணெய் பெறுவதை நிறுத்தமாட்டோம் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. இதனை எதிர்த்து அமெரிக்காவில் பல நிலைகளில் உள்ள தலைவர்கள் இழிவாகப் பேசி அச்சுறுத்துவதை இன்னும் நிறுத்தவில்லை. எனினும், வணிகப் பேச்சுக்கள் நல்ல முடிவுகளைத் தருமென ‘நண்பர்கள்’ டிரம்பும் மோடியும் உறவாடுகின்றனர்.

இந்திய ஒன்றியத்திற்கு வேண்டாத பொருள் என்றாலும் மக்காச்சோளத்தை வாங்க முன்வந்தால் பேச்சுக்கள் வெற்றி பெறும். உடன்பாடுகள் ஏற்படும். வரியும் குறையலாம். ஆனால், ரசிய எண்ணெய் என்பது முகமூடி என்பது இங்கு வெளிப்பட்டுவிட்டது.

ரசிய – உக்ரைன் போரில் உயிரிழப்புகள்

ரசிய – உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் கூறும் அடிப்படை அங்கு பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதுதான். ஆனால், இசுரேல் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டு எழுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது ட்ரம்பின் கண்களுக்குத் தெரியவில்லை. காசாவில் லட்சக்கணக்கானோர் ஒரு வேளை உணவின்றிப் பட்டினியால் வாடுவது டிரம்புக்குப் பொருட்டில்லை.

அமெரிக்க நட்பு நாடான கத்தாரில் எல்லை மீறி இசுரேல் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் டிரம்பின் கடமை முடிந்துவிட்டது.

ரசிய – உக்ரைன் போரில் மனித உயிர்கள் பெரிதென டிரம்ப் புலம்புவது உண்மையென்றால். எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட பாலத்தீன உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்த டிரம்ப் முன்வந்திருக்கவேண்டும். இசுரேல் நாட்டின் மீது பொருளியத் தடை போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக உயர்நுட்பப் போர்க் கருவிகள் மேலும் வழங்கப்பட்டுவருகின்றன. இங்கிலாந்து, செர்மனி, ஆத்திரேலியா, கனடா போன்ற நாடுகள் பாலத்தீனத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பின்னர், இதை எதிர்த்து அமெரிக்கா குரலெழுப்பி வருகிறது.

ஏன் இந்த முரண் என்பதற்கான விளக்கங்களை இன்று வரை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

புதின் – டிரம்ப் உடன்பாடு

ஆகத்து 15ஆம் நாள் புதின் – டிரம்ப் பேச்சுக்களில் உடன்பாட்டுக்கான அடிப்படைகள் ஏற்கப்பட்டதாக இருவரும் அறிவித்தனர்.

இதனையொட்டி, வாக்கெடுப்பில் இணைத்துக்கொண்ட கிரிமியா உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களை ரசியப் பகுதிகளாக உக்ரைன் ஏற்கவேண்டும் என்பது தொடர்பாகப் புதிய வரைபடம் ஒன்றினை உக்ரைன் நாட்டின் தலைவர் செலன்ஸ்கியிடம் டிரம்ப் வழங்கினார். ஆனால், இன்றுவரை உக்ரைன் தனது முடிவினைத் தெரிவிக்கவில்லை. ஆனால், செலன்ஸ்கியும் புதினும் பேசவேண்டும் என்று மட்டும் டிரம்ப் வற்புறுத்தி வருகிறார்.

உக்ரைன் கட்டமைப்புகளை ரசியா தொடர்ந்து தகர்த்து வருவது போலவே, ரசிய எண்ணெய்க் கிடங்குகளைத் தொடர்ந்து உக்ரைன் தாக்கி வருகிறது. இரு புறங்களிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

இருப்பினும், புதின் போக்குகளில் தனக்கு நிறைவு ஏற்படவில்லை என்று அடுத்தடுத்து அறிவித்து வரும் டிரம்ப், மறுமொழி கூறாமல் செலன்ஸ்கி இருப்பதைக் கண்டுகொள்ளவேயில்லை. ஏன் இந்த மாறுபட்ட நிலை?

ரசியா நிலையான தீர்வினை நாடும் நிலையில், உக்ரைன் மற்றும் அய்ரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்தை மட்டுமே வலியுறுத்தி வருகின்றன.

நிலையான தீர்வு ரசியாவுக்குச் சார்பாகத்தான் அமைய முடியும் என்பதும் அந்நாடுகளுக்குத் தெரியும். அத்துடன், உக்ரைன் நாட்டில் செலன்ஸ்கி செல்வாக்கும் சரிந்துவிடும்.

இதனால், போர் நிறுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட அய்ரோப்பியப் படைகளை ரசியாவின் அருகில், உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிறுத்தித் தொடர்ந்து ரசியாவுக்குத் தொல்லை தரவேண்டும் என்பதும், அடுத்து ரசிய வளங்களைக் கைப்பற்றவேண்டும் என்பதும் அவர்களின் கனவாகும்.

100% வரியைப் பரிந்துரைக்கும் டிரம்ப்

ரசியாவிடமிருந்து எண்ணெய், எரிபொருள்கள் வாங்கும் சீனம், இந்திய ஒன்றியம் போன்ற நாடுகளுக்கு 100% இறக்குமதி வரியினைச் செயல்படுத்தவேண்டும் என்று அய்ரோப்பிய நாடுகளை டிரம்ப் வற்புறுத்துகிறார். ஆனால், சீனப் பொருள்களுக்கு 25%க்கும் குறைவாக இறக்குமதி வரியினை அவர் நிறுத்திக்கொண்டார்.

இந்திய ஒன்றியம், பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமே 50% இறக்குமதி வரி.

அமெரிக்காவுக்கு வேண்டிய இந்திய ஒன்றியப் பொருள்களுக்கு 50% இறக்குமதி வரிகளோடு நிறுத்திக்கொண்ட டிரம்ப், அய்ரோப்பிய நாடுகளை மட்டும் 100% வரிக்கு வற்புறுத்துகிறார். அதற்கு அவர் கூறும் காரணி, ரசியாவுக்கு அருகில் உள்ள அய்ரோப்பிய நாடுகள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான்.

ரசியாவுக்குப் பொருளியத் தடைகள்

ரசியா மீது பொருளியத் தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தவேண்டும் என்றால், அய்ரோப்பிய நாடுகள் ரசியாவிடமிருந்து எரிபொருள்கள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்ற ஒரு புதிய கட்டுப்படுத்தலை டிரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.

மற்ற நாடுகள் பொருளியல் தடைகளை ஏற்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கின்ற டிரம்ப், தான் மட்டும் தப்பித்துக்கொள்ள நினைக்கிறார். உலக அரங்கில் ரசியாவை முழுமையாகப் பகைத்துக்கொள்வதும், சீனாவை முற்றிலும் புறக்கணிப்பதும் இப்போதைக்கு அமெரிக்காவுக்கு இயலாததாகும்.

இதைப் போன்றே 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய ஒன்றிய அங்காடியை இழக்காமல் காப்பதும் இன்றியமையாததாகும்.

இவை போன்ற பல முரண்களில் அமெரிக்கா சிக்கித் தவிக்கிறது.

மன்மோகன் அரசு முன்னரும், மோடி அரசு இப்போதும் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கும் வற்புறுத்தல் களுக்கும் நெருக்குதல்களுக்கும் அடிபணிந்து வழிகாட்டிவிட்டன. இந்திய ஒன்றியப் பொருள்களை வாங்கமாட்டோம் என்பதை முன்னிறுத்திய அச்சுறுத்தலில், இந்திய ஒன்றிய மக்களுக்கு வேண்டாத அமெரிக்கப் பொருள்களை வெகு விலை கொடுத்து வாங்குவதை வழக்கப்படுத்திக்கொண்டன.

டிரம்பைப் பொறுத்தவரை மோடிக்கு நண்பர்தான். ஆனால், இந்திய நாட்டு மக்களுக்கு அவர் பகையானவராகவே இருக்கிறார்.

நட்பு வேறு, நாடு வேறு. இதை மோடி புரிந்துகொள்ளவேண்டும். டிரம்புக்குப் புரிய வைக்கவேண்டும்.

அமெரிக்கா மறுக்கும் பொருள்களை வாங்க ரசியாவும் சீனாவும் முன்வந்துள்ளன. இதனால், அமெரிக்காவை வல்லரசாக்க இந்திய ஒன்றியமும் பிற நாடுகளும் அடிபணிய வேண்டியதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button