

ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டது என்றால் மறைமுக வரி குறைவாகவும், நேரடி வரி அதிகமாகவும் இருக்க வேண்டும். மேட்டில் இருந்து எடுத்துப் பள்ளத்தைச் சரி செய்வதுதான் முறையான வரி! ஆனால் மோடியின் ஆட்சியில் பள்ளத்தை மேலும், ஆழக் குழி தோண்டி மேட்டை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்.
ஜிஎஸ்டி பிறந்த கதை!
ஒரு நாடு, ஒரு வரி (One Nation, One Tax) என்ற முழக்கத்துடன் அறிமுகமானதுதான் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகும்.
இது நுகர்வோர் மீது விதிக்கப்படும் ஒரு இலக்கின் அடிப்படையிலான வரியாகும். முன்பு இருந்த நிலைக்கு முரணாகச் செலுத்தப்பட்ட வரியின் மதிப்புடன், உற்பத்தியாவதிலிருந்து இறுதி நுகர்வு வரை அனைத்து நிலைகளிலும் வரி விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு மதிப்புக் கூட்டு வரியே விதிக்கப்படும். அத்தோடு, இந்த வரிச்சுமை இறுதியாக நுகர்வோர் மீது சுமத்தப்படும்.
101வது அரசியலமைப்புத் திருத்தம் 2016 படி திருத்தியமைக்கப்பட்ட 366(12A) அரசியலமைப்பு பிரிவு சரக்கு மற்றும் சேவைகள் பற்றி விளக்குகிறது. மனிதன் உட்கொள்ளும் மது விநியோகம் நீங்கலாக, சரக்கு அல்லது சேவைகள் வழங்கல் அல்லது இரண்டின் மீதான வரி என்று விளக்குகின்றது.
கடைக்கோடியில் உள்ள 50 விழுக்காடு மக்கள், 65 விழுக்காடு ஜிஎஸ்டியைக் கட்டுகின்றனர். ஆனால், உயரடுக்கில் உள்ள 10 விழுக்காடு மக்கள், 3 விழுக்காடு ஜிஎஸ்டியைத்தான் கட்டுகின்றனர். இதன்மூலம் யாருக்கு இது சுமை என்பது விளங்கும்!
உண்மையில் விலையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
கச்சா எண்ணெய், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதிவேக டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய ஐந்து பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்கு வெளியில் தற்காலிகமாக வைத்துள்ளது. எந்தத் தேதியிலிருந்து அவை ஜிஎஸ்டிக்குள் சேர்க்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்யுமாம். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த போதெல்லாம் இதைக் காரணம் காட்டியே மக்களை, மடை மாற்றம் செய்வது பாஜகவின் வழக்கம், 8 ஆண்டுகள் கடந்து ஓடியும் இன்றுவரை அது குறித்துப் பேசாமல் இருப்பது ஏன்?
சாதாரண, ஏழை, எளிய, மக்கள் விலை உயர்வுக் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முதலில் பெட்ரோல், டீசல் மீது ஒன்பது முறை உயர்த்தப்பட்ட வரிகளை உடனடியாக நீக்க வேண்டும். சர்வதேச அளவில் சலுகை விலையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அந்த விலைச் சலுகையைச் சாதாரண மக்களுக்குக் கொடுக்காது, பெரும் கார்ப்பரேட்களுக்கு அதிலாபம் பெறுவதையே முக்கியமாகக் கருதுகிறது மோடி அரசு! இதனால் சரக்குக் கட்டணங்களும், பயணக் கட்டணங்களும் அதிக அளவில் உயர்த்தப்பட்டுவிட்டன. அந்த உபாதையைக் குறைக்க மோடி, நிர்மலாக்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?
தேர்தல் கணக்குக்காகத் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி!
ஜவுளி மற்றும் பின்னலாடைத் துறை உட்பட பல சிறு, குறு தொழில்களில் கச்சா பொருட்களின் மீதான இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு பல முறைகளில் அந்தத் தொழில்களையே அழித்து விட்டது. உதாரணத்திற்கு இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு வரி, அது நூலாக நூற்கப்படும் போது அதற்கு வரி, அது ஆயத்த ஆடையாக வடிவம் பெறுகிற போதும் வரி என்று ஒரே பொருளின் மீது மூன்று முறைகளில் வரி விதிக்கப்படுவது, வரி பயங்கரவாதம் அன்றி வேறு என்ன? இந்தத் துறைகளில்தான் வேலை வாய்ப்பு அதிகம் கிடைத்து வருகிறது. அந்த வேலைவாய்ப்பையும் அழித்து, ஒழித்து விட்டு மக்கள் நலனுக்காக இந்த ஜிஎஸ்டி மாற்றம் என்பது யார் காதில் பூச்சுற்ற?
மேலும், மின்சாரமும் ஜிஎஸ்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது. எனவேதான் சொல்கிறோம் இது நடைபெற இருக்கிற பீகார் உள்ளிட்ட மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி, வாக்கு பெறும் முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இவை திணிக்கப்பட்டு விடும் என்பது உறுதி!
வரி விதிப்பில் கூட வடக்கு தெற்கு பாகுபாடு!
ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டியை 5 மற்றும் 18 விழுக்காடு வரி விகிதங்களாகக் குறைத்து அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியர்கள் விரும்பி உண்ணும் இட்லி தோசை மீது 5 சத வரி தொடர்கிறது. அத்துடன் அடைக்கப்பட்ட அரிசி, எண்ணெய் வித்துக்களுக்கு அதீத வரியை விதித்தது.
துக்ளக் தர்பார்!
திடீரெனச் சில ஆண்டுகளுக்கு முன்பு 25 கிலோ மூட்டையில் அடைக்கப்பட்ட அரிசி என்றால் வரி என்றது. அதனால் ஏற்கனவே 25 கிலோ எடை அளவில் இருந்த அரிசி மூட்டைகளை, அனைத்து நிறுவனங்களும் 26 கிலோவாக மாற்றம் செய்தனர், அதிகச் செலவு செய்து, அதனையும் மக்கள் தலையில் கட்டினர். துக்ளக் மன்னனின் கிறுக்குத்தனம் போல இது பளிச்சென்று தெரியும்.
ஏற்கனவே மருத்துவ உபகரணங்கள், அவசர சிகிச்சைக் கட்டணங்கள், செயற்கைக் கால் செயற்கை, மோட்டார் சக்கர நாற்காலிகள், மரபணு சிகிச்சைகள் மீதும் 18 சத வரியை விதித்திருந்தது, இந்தக் கருணையில்லா ஆட்சி! இதனைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் கேளாச்செவியாக இருந்து வந்தது மோடி அரசு!
ஆனால் வாக்குகளைக் கவர்வதற்காக இன்று மேலே குறிப்பிட்ட அனைத்துக்கும் விளக்கு அளித்துள்ளது. அத்துடன் தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு, இனி ஜிஎஸ்டி வரி கிடையாது என அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி, ‘தீபாவளி, ஆயுத பூஜை பண்டிகைக்கான மத்திய அரசின் இரட்டைப் பரிசு எனப் பெருமிதம்‘ கொள்கிறார். ஆனால் இந்நடவடிக்கை ஏன் 8 ஆண்டுகள் தாமதமாக நடந்திருக்கிறது? அப்போதெல்லாம் தீபாவளிகள் வரவில்லையா அல்லது மோடிக்கு மனம் இல்லையா?
காகித விலை உயர்வு!
காகிதத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காடாக உயர்த்தியிருப்பது, இனி பத்திரிகைகளுக்குத் தேவையான காகிதப் பொருட்கள் அனைத்தும் விலையேறும். காலண்டர், டைரி உள்ளிட்ட பொருட்கள் 6 விழுக்காடு விலை உயரும். ஏற்கனவே 12 விழுக்காடு வரி அடுக்கில் இருந்த காகிதம், 5 விழுக்காட்டிற்குக் குறைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 18 விழுக்காடு வரி அடுக்கிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது, நாட்காட்டி, மாதக்காட்டி, டைரிகள் உட்பட, காகிதத்தால் உருவாக்கம் பெறும் பல்வேறு பொருட்கள், வழக்கத்தைவிட 6 விழுக்காடு விலை உயர்வைச் சந்திக்க வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு காகிதத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் சிறு, குறு நிறுவனங்களையும் பாதிக்கும். திருப்பூரைத் தொடர்ந்து சிவகாசி தொழிலிலும் அழிவைச் சந்திக்கும். பின்பு எங்கனம் தீபாவளி கொண்டாடுவது?
விலை குறையும் பொருட்கள்!
ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், நெய், சீஸ், டெய்ரி ஸ்ப்ரெட், பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள், பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள், தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள், சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீடு ஜிஎஸ்டி 18% லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தெர்மோமீட்டர், மருத்துவத் தர ஆக்ஸிஜன், நோயறிதல் கிட், குளுக்கோமீட்டர், சோதனை அட்டைகள் (strips) ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வரைபடங்கள், விளக்கப்படங்கள், குளோப்கள், பென்சில்கள், ஷார்ப்பனர்கள், வண்ணங்கள், கல்வி புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், அழிப்பான் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி
பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது.
டிராக்டர் டயர்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி 18% லிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள், சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள், தெளிப்பான்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், மோட்டார் பொருத்தப்பட்ட மின்விசிறிகள் மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் ஏசி இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிவி, மானிட்டர்கள், புரொஜெக்டர்கள், செட்டாப் பாக்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து நுகர்வில் பலவீனம் தெரிவதால் இந்தக் குறைப்பு பெரும்பாலும் பெரும் நிறுவனங்களின் விற்பனை அதிகப்படுத்தும் நோக்கத்தைச் சார்ந்தும் இருக்கிறது.
என்னதான் ஜிஎஸ்டியைக் குறைத்தாலும் சரக்குக் கட்டணம் குறையாது. அதோடு ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுங்கக் கட்டணமும், மின் கட்டணம் உயர்ந்த போது பொருட்களின் விலை எப்படிக் குறையும்?
விலை உயரும் பொருட்கள்!
ஆடம்பரப் பொருட்கள் வரி 40%
பான் மசாலா, சிகரெட், குட்கா, சோடா போன்ற காற்றூட்டப்பட்ட நீர், கார்பனேட்டட் பானங்கள், பெரிய அளவு கார் போன்றவற்றின் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. வரி விகிதக் குறைப்பால் அரசுக்கு 93,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் ஆனால் 40 சதவீத அடுக்கில் இருந்து அரசுக்கு சுமார் 45,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை.
நிர்வாகக் கூட்டாட்சியைச் சிதைத்தது போல நிதிக் கூட்டாட்சியையும் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கிவிட்டது ஒன்றிய அரசு. ஏற்கனவே பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உதவும் திட்டங்கள் கொண்டு வந்தும் அதை நட்டாற்றில் விட்டு மாநிலங்களைத் தவிக்க விட்ட வரலாறு அவர்களுக்கு உண்டு. அந்த வகையில்தான் மாநிலங்களின் வரி உரிமையை லாவகமாகத் தனதாக்கி இன்று மாநிலங்களுக்குப் பிச்சை போடும் இடத்திற்கு ஒன்றிய அரசு வந்து விட்டது. ஆணவத் தெறிப்பும், அதிகாரக் குவிப்பும்தான் பாசிச பாஜக!
இந்த நாசகாரச் சக்திகளை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவதே இடதுசாரி, ஜனநாயக, முற்போக்குச் சக்திகளின் ஒரே முழக்கம்!