கட்டுரைகள்

நிலையான பணியே தூய்மைப் பணியாளர் துயர் துடைக்கும்

மே.து.ரா.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களது 13 நாள் உண்ணாமைப் போராட்டம் எதிர்பார்த்த நோக்கங்களை இன்னும் எட்டவில்லை. இருந்தாலும், எதிர்பாராத சில வினாக்களை எழுப்பியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

துப்புரவுப் பணிகளுக்காகச் சென்னை மாநகராட்சி உடன்பாடு செய்திருக்கும் நிறுவனத்தில், பணியாளர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், தற்போதைய நிலையிலேயே தங்கள் பணிநிலை தொடரவேண்டும் என்பது மட்டும் அவர்களது வேண்டுகோளாக இருக்கவில்லை. தங்களை நிலையான பணியாளர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அவர்கள் போராட்டத்தின் அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நிலைத்த பணி இழிவை நீட்டிக்குமா?

‘மலம் அள்ளுபவனே மலம் அள்ளட்டும், குப்பை எடுப்பவனே குப்பை எடுக்கட்டும்‘ என்ற நிலைக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், இப்போது அப்பணிகளைச் செய்வோருக்கு நிலையான பணி தருவது அந்தத் தொழிலையே அவர்கள் செய்துகொண்டிருக்கட்டும் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்ற முறையில் எதிர்ப்பினை முன்மொழிந்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குலத் தொழிலாக அல்லது சாதி ஏற்பாடாக, நிலையான பணியினைத் தருவது அமைந்துவிடக்கூடாது என்பது அவருடைய உணர்வு வெளிப்பாடாகும். அச்சம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
அடித்தட்டு நிலையிலிருக்கும் மக்களுடைய உண்மை நிலைகளையும் உணர்வுகளையும் முற்றாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்காகவே இயக்கம் நடத்திவரும் திருமாவளவன் அத்தகைய மக்களுக்கு எதிரான நிலை எடுத்திருக்கிறார் என்று எவரும் குற்றம் சுமத்திவிட முடியாது.

உணர்வு வேறு உண்மை வேறு

அவருடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை என்றாலும், நடைமுறை உண்மைகளையும் புறந்தள்ளிவிடக் கூடாது. பிற தொழில்கள் அல்லது பணிகளைப் போன்று அனைத்துப் பகுதி மக்களும் விரும்பி ஏற்பதாகத் தூய்மைப் பணிகள் இருக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரே இத்தகைய பணிகளை ஏற்க முன்வருகின்றனர் என்பது உண்மைதான். இத்தகைய பணிகள் அவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், அவர்கள்தாம் பல தலைமுறைகளாகப் பெரிதும் அத்தகைய பணிகளைச் செய்து வருகின்றனர்.

அவர்களும் தூய்மைப் பணிகளை விரும்பி வேண்டி ஏற்கவில்லை. கல்வி போன்ற பிற தகுதிகள் பெற முடியாதது, வேறு பணிகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது அல்லது கிடைக்காமல் போவது என்பன போன்ற நிலைமைகளிலேயே தங்களுடைய அன்றாட வாழ்வு வேண்டல்களுக்காக அவர்கள் தூய்மைப் பணிகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

வேறு பல சமூகப் பிரிவினரும் இந்த நிலையில் உள்ளனர் என்றாலும், அவர்கள் தூய்மைப் பணிகளை நாடுவதில்லை என்பதையும் இங்கு நோக்கவேண்டும்.

இதிலிருந்து தூய்மைப் பணி என்பது தாழ்வாகக் கருதப்பட்டு வந்திருப்பது தெரிகிறது. இதனால், அது பிறப்பின் அடிப்படையில் சில சமூகப் பிரிவினர் மேற்கொள்ளும் தொழிலாக மாறியிருப்பது சமூக அவலமாகும்.
முன்னேறிய நுட்பங்கள் வரவில்லை.

தாழ்வாகக் கருதப்படும் இப்பணிகளை நிறைவேற்றுவதற்காக முன்னேறிய தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய நுட்பங்களைப் பயன்படுத்தும் ஏற்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் முறையாக, முழுமையாக மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்தையும் வலியையும் தருவதாகும். இப்பணிகளைச் செய்வதற்கான உழைப்பாளர் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருப்பதும் அடுத்த கட்ட நகர்வை முடக்கிவருகிறது.

குறிப்பிட்ட சில நுட்ப அறிவினைப் பெற்றிருப்போர் தகுதி நிலையில் மேம்பட்டவராகக் கருதப்பட்டு, அவர்களுக்குக் கோடிக்கணக்கில் ஊதியம் தரப்படுவது இன்று இயல்பாக நடந்து வருகிறது. அய்.அய்டி., அய்.அய்.எம். போன்ற குறிப்பிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்போர் மதிக்கப்பட்டு மிகு ஊதியம் பெறுகின்றனர். ஆனால், உடல் உழைப்பை மட்டும் நம்பியிருக்கும் உழைப்பாளர் தகுதி இல்லாதோராகப் புறக்கணிக்கப்பட்டுக் குறைந்த ஊதியத்திலும் நிலையான பணி பெற முடியாமலும் ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.

கல்வி பெறுதல், தகுதிப்படுத்திக் கொள்ளுதல் ஆகியன இன்னும் முழுமைப்படாத இந்திய ஒன்றியம் போன்றவற்றில், உழைப்பாளர் பலர் எளிதில் கிடைப்பதால், அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

தூய்மைப் பணி தனித் தன்மை கொண்டது.

ஆனால், தூய்மைப் பணி என்பது வேறுபட்டதாகும். தனித் தன்மை கொண்டதாகும். பணி கிடைப்பதாக இருந்தாலும், எவரும் முன் வந்து ஏற்பதில்லை. இத்தகைய பணிகளை ஏற்க முன்வருவோர், நிலையான பணி இல்லாமல், குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்கக்கூடியதாகத் தெரியவில்லை.

தூய்மைப் பணிகளை மேற்கொள்வோர், தகுதி நிலையில் தனிச் சிறப்புகளைப் பெற்றிருக்காவிட்டாலும், அந்தப் பணிகளின் தன்மைகளால் அத்தகைய பணிகள் சிறப்பு நோக்கில் கருதப்பட்டு, அதற்கேற்ற பணிக் காப்பு, மிகு ஊதியம், சிறப்பு ஊதியம் ஆகியன வழங்கப்படவேண்டும்.

மேனிலைக்கான போராட்டம்

பொருளிய, சமூக, கல்வி நிலைகளில் தாழ்நிலையில் இருப்போராகக் கருதப்படும் சில சமூகப் பிரிவினரைத் தூய்மைப் பணி போன்றவற்றுக்கு வரவேண்டாம் என்றும் அவற்றை அவர்கள் ஏற்கவேண்டாம் என்றும் வலியுறுத்துவதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் தகுதி பெற்று மேல்நிலைக்கு வரத்தக்க வாய்ப்பினை உருவாக்கப் போராடுவதும் வேண்டத்தக்கதுதான்.

ஆனால், வேறு வழியின்றித் தூய்மைப் பணிகளைச் செய்துகொண்டிருப்போருக்கு, வேறு மாற்று ஏற்பாடு எதுவும் வழங்காமல், இப்போதிருக்கின்ற பணியிலும் நிலைப்படுத்தக்கூடாது என்று முன்மொழிவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

தற்போது தாழ்வானதாகக் கருதப்படும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்போர், இந்தத் தொழிலுக்கு வந்துவிட்டதாலும், வாழ்வுக்கான வேறு பணி வாய்ப்பு உடனடியாகக் கிடைக்காததாலும் மட்டுமே பணி உறுதி உள்ளிட்ட நலன்களைத் தேடுகின்றனர்.

இப்போது அத்தகையோர் மேற்கொண்டிருக்கும் தூய்மைப் பணிகளில் அவர்களுக்கு நிலையான பணி வழங்கப்படாவிட்டாலும், அவர்கள் வேறு தொழில்களுக்கு அல்லது பணிகளுக்கு இடம்பெயர்வது அரிதுதான். மேலும், நிலையான பணி கிடைத்த பின்னரும் அவர்கள் வேறு பணிகளுக்கு மாறிச் செல்வதில் தடையேதும் வரப்போவதில்லை.

நிலைத்த பணி அடிமைப்படுத்தாது

அத்துடன், அரசு சார்ந்த பணிகள் எதுவாக இருப்பினும், அத்தகைய பணிகள் எப்போதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உரிமையுள்ளதாகவோ, கடமைப்பட்டதாகவோ அடிமைப்படுத்து வதாகவோ மாறிவிடுவதில்லை. ஆனால், பணி நிலைப்பாடு என்பது இத்தகைய பணியாளர்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது. அடிப்படையில், ஊதிய உறுதி அல்லது பொருளிய மேம்பாடு என்பதே அவர்கள் பெறும் அடிப்படைப் பயனாகும்.

வாழ்வுத் தரம் உயரும்

குழந்தைகளுக்குக் கல்வி, வேண்டிய உணவு, உடை, இருப்பிடம், பிற மேம்பாடுகள் என அவர்களது வாழ்முறையே மாறும் சூழல்கள் அமையும்.

இதனால், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அடுத்தடுத்த தலைமுறையினர் தகுதி பெற்று வெவ்வேறு பணிகளுக்குச் செல்லும் வழிகள் பிறக்கும். பிறப்பு அடிப்படையிலான தொழில் என்பது மாறும்.

சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்து இடங்களில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் இவை பொருந்தும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15இல் 10 மண்டலங்கள் முன்னரே தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. தற்போது 5, 6 ஆகிய மண்டலங்கள் தனியாருக்குத் தரப்பட்டுள்ளதால், அவற்றில் பணிபுரிவோர் நிலைத்த பணிக்காகப் போராடி வருகின்றனர்.
தேசிய நகர்ப்புற வாழ்வடிப்படை இயக்கம் சார்பில் தன்னுதவிக் குழுக்களின் வழியாக ஒப்புதல் அடிப்படையில் தற்போது தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5, 6 மண்டலங்களில் 1950 பேர் இப்போது பணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகராட்சிப் பணியாளர்களாகக் கருதப்படவில்லை. பணிக்கு வந்தால் மட்டும் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 753 ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஏமாற்றிவரும் மாநகராட்சி

ஆனால், தூய்மைப் பணிகளுக்காக மாநகராட்சி உடன்பாடு செய்துகொண்டிருக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துக் கூறப்படுகிறது. திங்கள் ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, ஆண்டுக்கு 12 நாள்கள் தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, அரசு விடுமுறை நாள்களில் பணிபுரிந்தால் இரட்டிப்பு ஊதியம், எட்டு மணியளவுக்கு மேல் பணியிலிருந்தால் கூடுதல் தொகை, எதிர்பாரா இடர்களுக்கான மருத்துவ நிதி, பணியிலிருக்கும்போது உயிரிழந்தால் உதவி நிதி எனப் பல நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன.

இவையெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால், உழைக்கும் பணியாளர்களுக்கு இத்தகைய நன்மைகளைத் தராமல் இன்றைய நாள் வரை சென்னை மாநகராட்சி ஏமாற்றி வந்திருக்கிறது என்பதையும் இது தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறது.

தூய்மை செய்வது என்பது தொடர்ந்திருக்கும் நிலையான பணியாகும். அவ்வப்போது ஏற்படும் தற்செயல் பணியாக இருக்கவில்லை.

நிலையான பணிகளுக்குத் தொடர்ந்து நிலையில்லாத பணியாளர்களை வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

அடுத்து மற்றொன்றையும் மறந்துவிடக்கூடாது. தனியார் நிறுவனம் தரப்போவதாக நம்ப வைக்கப்படும் நன்மைகள் மற்றும் பயன்கள் எவையாக இருப்பினும், அத்தகைய செலவினங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், அவற்றையும் உள்ளடக்கித்தான் உடன்பாட்டில் உரியவாறு தொகை முடிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். இதற்கு மேல் தனியார் நிறுவனத்திற்கான மிகு வருவாயும் சேர்ந்திருக்கும்.

இந்த நிலையில், தனியார் நிறுவனத்திடம் பெருந்தொகை கொடுத்துப் பணிகளை ஒப்படைக்காமல், இதைவிடக் குறைந்த செலவில் உரிய சட்டப்படியான நன்மைகளையும் பயன்களையும் வழங்கி, மாநகராட்சியே இப்பணிகளை மேற்கொள்வதில் தடை ஏதும் இருக்கவில்லை.

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சமூக நீதி காக்கின்ற அரசு செயல்படும் என நம்பலாம்.

நிலையான பணி கிடைத்துவிட்டால், பணிகள் முறையாக நடப்பதில்லை என்ற கருத்து அண்மையில் மேலோங்கி வருகிறது. உரிய மேலாண்மைப் பொறுப்புகளை நிறைவேற்ற இயலாத அரசும் உயர் அலுவலர்களும் தங்களது இயலாமைக்கு நிலையற்ற பணியாளர்களை ஏமாற்ற முயலக்கூடாது.

நிலையான பணியுடன் நுட்பப் பயன்பாடும் இணையவேண்டும். அதுவே, தூய்மைப் பணியாளருக்கு நிலைத்த தீர்வைத் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button