
இன்னோர் இன்னுயிர் இழப்புடனும் இணையற்ற மனித உரிமை மீறல்களுடனும் இந்த ஆண்டின் இளம்நிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது.
மேல்மருவத்தூர் அருகில் உள்ள ஊரினைச் சார்ந்த செல்வி கயல்விழி மட்டுமல்லாது, ராசத்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் உள்ள பயிற்சியகம் ஒன்றிலிருந்த மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த மற்றொரு மாணவியும் உயர் துறந்துள்ளார்.
நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியகங்கள் நிறைந்துள்ள கோட்டா நகரில் இந்த ஆண்டு மட்டும் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் அதே ஊரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
நுழைவுத் தேர்வு அழுத்தத்தில் உயிரிழந்த அனிதாவின் ஈகையைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் துயரச் செயல்கள் எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. தேர்வுக்கு முன்னரே அச்சத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகப் பெருகித்தான் வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத் தேர்வு நடக்கும் இடங்களில், மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலும் மனித உரிமைகளைப் பறிக்கும் முறையிலும் ஆடை அணிகலன்களை ஏறக்குறையக் கலைந்தும் நடத்தப்படுகின்ற ஆய்வுகள், தேர்வுக்கு முன்னரே மாணவர்களின் உறுதியைத் தகர்த்து, மன அழுத்தத்தையும் உடல் தளர்ச்சியினையும் ஏற்படுத்தக்கூடியனவாக அண்மைக் காலங்களில் மாறியிருக்கின்றன.
மணமான பெண்களின் மங்கல அணிகலன்களை அகற்றுவது என்ற அளவுக்கு இது முற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்திய ஒன்றியம் முழுதும் மணமான மகளிர் மாங்கல்யம் எனப்படும் அணியினைத் தங்களது தனிப்பெரும் அடையாளமாகக் கருதிக் காத்து வருகின்றனர்.
பெண்களின் மங்கல அணிகளை அகற்றச் செய்தபோது அந்தப் பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? என்பதைப் பற்றிய உள்ளக் குமுறல்கள் இப்போது வெடித்து வருகின்றன. தேர்வினை எழுதும் முன் நடந்த இத்தகைய செயல், தேர்வெழுதும் அவர்களது முயற்சியில் இடையூற்றினை ஏற்படுத்தியிருக்கும் என்பதிலும் அய்யமில்லை.
மகளிர் முடியினை அவிழ்த்து, அதற்குள் ஏதேனும் வைத்திருக்கிறார்களா? என்று பார்த்திருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் பார்ப்பன மாணவர் அணிந்திருந்த பூணூலை நீக்கச் செய்தது போராட்டங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. இது குறித்து ஆய்வு நடத்த அரசும் ஆணையிட்டிருக்கிறது.
ஆனால், பெண்களின் மங்கல அணியினை அகற்றச் செய்தது பரவலாக நடந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் பெருமைகளையும் பெண்களின் உரிமைகளையும் காப்போராகத் தங்களைக் காட்டிக்கொளும் பா.ச.க.வினர் எதுவும் நடக்காதது போல நாடகமாடுவது வேடிக்கைதான். இத்தகைய செயல்களுக்கு விளக்கங்களும் அவர்களிடமிருந்து வரவில்லை.
இவை மட்டுமின்றி, ஆடைகளில் இடம் பெற்றுள்ள பொத்தான்களை வெட்டி எடுத்ததும் நடந்திருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான சில வகையான ஆடைகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், உடனடியாக விரைந்து சென்று மாற்றாடை வாங்கி அணிந்திருக்கின்றனர்.
பொதுவாக இத்தகைய நுழைவுத் தேர்வினை நடத்துவோர், தெளிவாகவும் வெளிப்படையாகவும் முன்னரே நடைமுறை விதிகளை வகுத்து வழங்கிவிடுவார்கள். செய்யவேண்டியன எவை, செய்ய வேண்டாதன எவை என்பவற்றை விரிவாகப் பட்டியலிட்டும் கொடுப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
மங்கல அணியினை அணிந்து வரக் கூடாது, பூணூல் இருக்கக் கூடாது, சட்டையில் பொத்தான் மிகுந்திருக்கக் கூடாது, குறிப்பிட்ட முறையில் மட்டுமே முடி அழகுபடுத்தப்பட வேண்டும், ஆண்களும் பெண்களும் எத்தகைய ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்பன போன்ற விவரங்கள் எழுத்து வடிவில் வரையறை செய்யப்பட்டுத் தரப்பட்டதாகத் தெரியவில்லை.
இத்தகைய கெடுபிடிகளுக்கும் கொடுமைகளுக்கும் இடையில் இத்தேர்வினை நடத்துவதற்கான வேண்டல் ஏன் வந்தது? என்பதுதான் புரியவில்லை.
நுழைவுத் தேர்வு என்பது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. ஒன்றிய, மாநில அரசுகளின் உயர்நிலை மேலாண்மைப் பொறுப்புகளில் செயல்படும் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி போன்ற அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துக்கான (ஐ.ஐ.டி.) சேர்க்கைக்காகவும் இரண்டு கட்டங்களாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) போன்ற உயர் மேலாண்மை நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காகப் பொதுச் சேர்க்கைத் தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, அதனை நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.
இத்தகைய உயர்நிலைத் தேர்வுகள் நடக்கின்ற இடங்களில் இல்லாத வன்முறைகளும் குழப்பங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் மட்டும் ஏன் நிலவுகின்றன? என்பதுதான் புதிராக இருக்கிறது.
இன்றைய நுட்ப வளர்ச்சியில், இத்தகைய கொடும் நடைமுறைகளுக்கு மாற்றுகள் இல்லாமல் இல்லை.
வினாக்களை வைத்துக்கொண்டு வரிக் கணக்கில் விடைகளை வரைகின்ற தேர்வு முறை அல்ல இது. இயற்பியல், வேதியல் வினாக்களுக்குக் கருத்துருக்களைப் பயன்படுத்தியும் கணக்கீடு செய்தும் தீர்வு கண்டும் விடை தரும் வகையில்தாம் தேர்வு முறைகள் அமைந்திருக்கின்றன.
மேலும், தரப்பட்டுள்ள நான்கு விடைகளில் எது பொருத்தமானது அல்லது ஏற்கத்தக்கது? என்ற வகையில் தேர்வு செய்கின்ற வினா வகைகளும் இருக்கின்றன.
இத்தகைய தேர்வு முறைகளில், பார்த்து எழுதுவது அல்லது குறிப்புகளை வைத்துக்கொண்டு மறுமொழி தருவது என்பன நேரடியாக நடக்க வாய்ப்புகள் குறைவு. இல்லை என்றுகூடக் கூறிவிடலாம்.
வெளியே உள்ள ஒருவரிடம் தொடர்புகொண்டு, கேட்டு எழுதுவதும் எளிதில் நிறைவேறக்கூடியதாக இருக்கப் போவதில்லை.
இருந்தாலும், தேர்வு நடக்கும் இடத்திலிருந்து, வெளியாரிடம் தொடர்புகொள்ள முடியாதவாறு முடக்கும் கருவிகளை நிறுவலாம். இதனால், வெளித் தொடர்புகளுக்கான வழிகள் முழுமையாக அடைக்கப்பட்டுவிடுகின்றன. புறத் தொடர்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
இவையன்றி, தேர்வுகள் நடக்கும் அறைகளில் மேற்பார்வையாளர்களாக மேலும் சிலரை அமர்த்திக் கண்காணிக்க முடியும்.
இன்னும் கட்டுப்பாடுகளை உறுதி செய்துகொள்ளத் தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தலாம்.
இவற்றையெல்லாம் மீறித் தேர்வர்கள் தவறுகளைச் செய்துவிட வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. பலவாறான வழிகளும் வாய்ப்புகளும் இருந்தும், இவற்றையெல்லாம் மேற்கொள்ளாமல், உடல் அளவிலும் மன அளவிலும் அழுத்தம் தந்து, தேர்வு எழுதும் உறுதியினைக் குலைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே அய்யப்படவேண்டியுள்ளது.
குறிப்பாக, சமூகத்தின் பின்னிலையில் உள்ள மாணாக்கர் பலர் புறச் சூழல்களின் தடைகளைத் தாண்டி வரும்போது, அச்சுறுத்தும் செயல்பாடுகளால் உரிய முறையில் தேர்வினை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.
இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டங்கள், வினாத்தாள் வெளியாதல், விற்கப்படுதல் போன்ற குற்றச்செயல்கள் பெரிதும் நடைபெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் தேர்வினை நடத்துவோரே உறுதுணையாகவும் உடந்தையாகவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஒன்றிய அரசின் நடுவப் புலனாய்வுப் பிரிவு, வழக்குகளைப் பதிவு செய்து விவரங்களைத் திரட்டி வருகிறது.
இந்த ஆண்டும்கூட, இத்தகைய வினாத்தாள் விற்பனை முயற்சிகள் நடைபெற்றதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
நுழைவுத் தேர்வினைச் செம்மையாக நடத்துவதற்கு மாறாக, இத்தகைய இழிசெயல்களிலேயே தொடர்புடையோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய உரிமை மீறல்களுக்கு இடையில், மனித மனத்தின் மேன்மையினைத் தமிழ்நாட்டில் உள்ள காவலர்கள் நிலைநாட்டியிருப்பது பெருமை தருகிறது.
தேர்விடம் மாறி வந்துவிட்ட மாணவியைத் தனது காவல் வண்டியில் ஏற்றி உரிய இடத்துக்கு அனுப்பிய காவல் ஆய்வாளர், ஆடையில் மிகு அளவில் பொத்தான்கள் இருந்ததால் தடுக்கப்பட்ட மாணவியைத் தனது ஈரிருளை வண்டியில் கடைக்கு அழைத்துச் சென்ற பெண் காவலர், ஆவணங்களைத் தவறவிட்ட மாணவனுக்காக அருகில் உள்ள கடைக்கு ஓடிச் சென்று புதிதாக அச்சிட்டுக் கொடுத்த தலைமைக் காவலர். ஆவணங்களை மறந்த மாணவனுக்காக உரிய காலத்தில் பெற்றோருக்குத் தனது கைபேசியில் தெரிவித்து எடுத்துவரச் செய்த பெண் காவலர் எனப் பட்டியல் நீள்கிறது.
தனிப்பட்ட முறையில் காவல் துறையினர் தாங்களும் மனிதர்களே என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியோர் ஆவர்.
இதிலிருந்து மற்றொன்றும் புலனாகிறது. தேர்விடங்களில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் அத்துமீறல்களும் எல்லை தாண்டல்களும் உள்ளூர்ப் பொறுப்பாளர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளாக இருக்கவில்லை. தேர்வு நடத்துவோர் மேலிருந்து இட்ட ஆணைகளை ஆங்காங்கு இருப்போர் செயல்படுத்தியோராகவே தென்படுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம், தலைமை அமைச்சர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். நுழைவுத் தேர்வினை நடத்துவோரும் குற்றவாளிகளாகக் குறுகி நிற்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் அத்துமீறல்கள் எல்லை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. தேர்வுகள் நடந்த பின்னர் சில நாள்கள் பேசுபொருளாக இருந்து மறக்கப்பட்டு விடுகின்றன. மீண்டும் அடுத்த ஆண்டில் இதே வன்முறைகள் தொடர்கின்றன.
தனி மனித உரிமை மீறல்களாக உருவெடுத்திருக்கும் இத்தகைய செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.