தமிழகம்

நாகை, திருவாரூரைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் இரயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

மோடியின் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நலனைப் புறக்கணித்து வருகிறது. இதில் ஒன்றிய அரசின் இரயில்வே அமைச்சகமும், தென்னக இரயில்வே நிர்வாகமும் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

நீடாமங்கலம் மேம்பாலம், இரயில் பராமரிப்பு மையங்கள், சில இரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதும் மோடி அரசின் வழக்கமாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இரயில் போக்குவரத்து குறித்து தனியாக விவாதித்து வந்த தனி நிதிநிலை அறிக்கை சமர்பிக்கும் முறையை அழித்தொழித்து விட்டது. இரயில்வே நிர்வாகத்தையும் தனியாருக்கு தாரை வார்த்து, மக்கள் நலனை முற்றிலுமாக கை கழுவி நிற்கிறது ஒன்றிய அரசு.

வேளாங்கன்னி, நாகூர், காரைக்கால் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தளங்களுக்கு மக்கள் வந்து செல்வதைத் தடுக்கும் செயலில் இரயில்வே நிர்வாகம் செயல்படுகிறது.

புகழ்வாய்ந்த இரயில்வே பணிமனை செயல்பட்ட நாகபட்டினம் இன்று செயலிழந்து கிடக்கிறது. இந்தத் துயர நிலைக்குத் தீர்வு காண, திருவாரூர், நாகபட்டினம் பகுதி பொதுமக்கள் ஒன்றுபட்டு நாளை (28.11.2022) ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் போராட்டத்தின் மீது தலையிட்டு தீர்வு காண முயற்சிக்காத தென்னக ரயில்வே நிர்வாகத்தையும், ஒன்றிய அரசின் இரயில்வே அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் மக்கள் பிரதிநிதிகளிடம், அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழிகள் அலட்சியப்படுத்தியதன் மூலம் பொதுமக்களை இரயில்வே நிர்வாகம் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடுகிறது. இந்த அணுகுமுறை உடனடியாக கைவிடப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கைகளைத் தென்னக இரயில்வே நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button