தமிழகம்

“12 மணி நேர வேலை தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தை திரும்ப பெறுக” – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு தீர்மானம்!

செய்தித்தொகுப்பு: A. P. மணிபாரதி

கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டம் 23.4.2023 காலை 11 மணிக்கு ஜீவா இல்லத்தில் சி. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 21.04.2023 ம் தேதி தொழிற்சாலைகள் தீர்த்திருத்த சட்டம் 2023 ( தமிழ்நாடு ) பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்ட திருத்தம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உள்ளது. மிகை நேர வேலையின் கால அளவையும் நீடித்தது, வேலை அளிப்போரின் விருப்பப்படி தொழிற்சாலை சட்டத்தை வளைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் தொழிலாளர்கள் போராடி பெற்ற வேலை நேர உரிமையையும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதையும் தடை செய்கிறது. இச்சட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பை கருத்தில் கொண்டு, பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை மாவட்ட குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இது சம்பந்தமாகத் தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசும் நடவடிக்கையை மாவட்ட குழு வரவேற்கிறது.

பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஒரு வார கால நடைபயண இயக்கம்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. உணர்ச்சியை தூண்டும் வெறுப்பு அரசியல் காரணமாக நாட்டில் மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. பட்டியல் சாதியினர், பெண்கள், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் அரசியல் அதிகாரத்தின் துணையோடு விடுதலை ஆகிறார்கள்.

சிறு குறு நடுத்தர தொழில் பன்னாட்டு நிதி மூலதன சந்தைகளுக்கு பலியிடப்படுகின்றன. பங்குச் சந்தை கணக்கியல் மோசடிகளுக்கு பச்சைக்கொடி காட்டி, அதானி நிறுவனங்கள் இந்திய செல்வ வளங்களை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்த மோசமான விளைவுகளைத் தடுக்க, பாஜக ஒன்றிய அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுமாறு வலியுறுத்தி, இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5ம் தேதி முதல் 10ம் தேதி முடிய ஒரு வார காலம் கோவை மாவட்டம் முழுவதும் நடைபயண பரப்புரை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா. பெரியசாமி, மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மாவட்ட செயலாளர் சி.சிவசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button