தமிழகம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைத்திடுக!

தூத்துக்குடி அருகில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தின் நச்சுக் கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதித்து, உயிர் வாழ்வும் பறிபோகும் அபாயம் எட்டிய நிலையில், அந்த ஆலையை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகளும், அப்பகுதி பொதுமக்களும் நீண்ட காலம் போராடி வந்தனர். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்ற வழக்குகளும் நடைபெற்றன. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி வந்த அமைப்புகள் ஒருங்கிணைந்து 2018 ஆண்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டம் தொடங்கிய நூறாவது நாளில், 2018 மே 22 ஆம் தேதி பெரும் மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்போதைய அஇஅதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மூன்றாண்டுகளாக விசாரணை நடத்தி கடந்த 2021 மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அரசுக்கு சமர்பித்தது. தற்போது இறுதி அறிக்கையை அரசுக்கு வழங்கி விட்டதாகவும், அதில் உள்ள பரிந்துரைகள் சிலவும் செய்திகளாக வெளியாகியுள்ளன. குறிப்பாக, சம்பவ நேரத்தில் காவல்துறை தென் மண்டல ஐஜியாக பணியாற்றியவர் உட்பட 17 காவல்துறையினர் தான் துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என தெரிவித்திருப்பதும், மாவட்ட ஆட்சியரின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற செயலும் தான் துப்பாக்கி சூட்டிற்கு முக்கிய காரணங்கள் என ஆணையம் மதிப்பிட்டிருக்கிறது.

நூறு நாள் தொடர்ந்து நடந்த போராட்டம் குறித்து, அதுவும் அதிகார மையத்தில் செல்வாக்கு செலுத்தும் பன்னாட்டு நிறுவனத்தின் ஒரு ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை நிர்வாகம் ஒரு முறை கூட விவாதிக்கவில்லையா? அப்போது உள்துறை நிர்வாகத்தை தனது பொறுப்பில் வைத்திருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு முறை கூட ஸ்டெர்லைட் போராட்டம் அல்லது பிரச்சனை குறித்து விவாதிக்கவில்லையா? என்ற வினாக்கள் எழுகின்றன.

மாவட்ட தலைநகரில் பெரும் மக்கள் எண்ணிக்கை கூடுவது குறித்தும், அது குறிப்பிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வருவது குறித்தும் உளவுத்துறை அரசுக்கு தகவல் அனுப்பவில்லையா?
ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், உயிர் வாழ்வு ஆபத்துக்கள், சுகாதாரக் கேடுகள் குறித்து சுற்றுச்சூழல்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி நிர்வாகம் போன்றவை கவனம் செலுத்தியதா, இல்லையா?
ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக அணுகியது அரசின் கொள்கை சார்ந்ததா? இல்லை, நிறுவனம் மற்றும் அதிகார வர்க்கத்தின் விருப்பம் சார்ந்ததா?

மே 22, 2018 துப்பாக்கிச் சூட்டிற்கு மூன்று வட்டாட்சியர்கள் மட்டுமே உத்தரவு வழங்கியதை சட்டமுறைகளுக்கு உட்பட்டதாக ஆணையம் கருதுகிறதா? சுடவைகண்ணு என்ற காவலர் கண் மூடித்தனமாக மட்டும் அல்ல, மனித உணர்வை இழந்து வெறி பிடித்தபடி துப்பாக்கி சூடு நடத்தியதை குறிப்பிட்டுள்ள ஆணையம், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மற்ற காவலர்களின் நடவடிக்கையை எப்படி கருதுகிறது?
கடந்த 2021 மே 14 ஆம் தேதி விசாரணை ஆணையம் வழங்கிய இடைக்கால அறிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு 21.05.2027 ஆம் தேதி ஸ்டெர்லைட் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. போரட்டம் காரணமாக கல்வியை தொடர முடியாமல் தடைபட்ட, வேலையிழப்பு ஏற்பட்டவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை தொடர தடையின்மை சான்றிதழ்கள் வழங்குவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை துப்பாக்கி சூட்டிற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, ஆலை நிர்வாகத்திற்கு நற்சான்று கொடுத்திருப்பாக கூறும் செய்தி அதிர்ச்சியளிப்பதுடன், ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

துப்பாக்கி சூட்டில் இறந்துபோனவர்கள் குடும்பங்களுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ள இழப்பீட்டை விட கூடுதலான தொகையை அரசு நிர்ணயித்து வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை கட்டறிந்து, அவர்களது மறுவாழ்வை உறுதிப்படுத்த அரசு வேலை வழங்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக உள்துறை தலைவர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் அப்போதைய அமைச்சரவையின் பங்கு குறித்து பரிசீலிக்க வேண்டும்.
ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலம் தான் மக்களாட்சி கோட்பாட்டை வலுப்படுத்த முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் இயக்கங்களை அணுகுவதில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை அணுகுமுறை உருவாக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பொது விவாதம் நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button