தமிழகம்

முதல்வர் காப்பீடு திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்துவதை கைவிடுக! அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் இலவசமாக வழங்கிடுக! – DASE வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உடனடியாக உயர்த்திட வேண்டும்!

கொரோனா பூஸ்டர் தவணையை அனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டும்!

வெளிநாடுகளில் படித்த மருத்துவப் பட்டதாரிகள் தங்குதடையின்றி பயிற்சி மருத்துவத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், இன்று ( நாள் : 10.07.2022 ) சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் .
இரவீந்திரநாத் வெளியிட்ட ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:

ஊதிய உயர்வு ,காலமுறை பதவி உயர்வு மற்றும் படிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

அரசாணை G0.354 படி, pay Band 4, 12 ஆண்டுகள் முடிந்து 13 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்பட வேண்டும். அல்லது, குறைந்த பட்சம் அனைத்து மருத்துவச் சங்கங்களும், தற்பொழுது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஏற்றுக்கொண்டுள்ளபடி, 14 ஆம் ஆண்டு துவக்கத்திலாவது வழங்க வேண்டும். ஏற்கனேவே , மேற்படிப்புக்கான ஊதிய உயர்வு (PG increment ) முறையை, அதாவது பட்டய படிப்பு (Diploma ) முடித்தால் ஒரு இன்கிரீமெண்ட், முதுநிலை (Degree) படிப்பு முடித்தால் 2 இன்கிரீமெண்ட், உயர் சிறப்பு படிப்பு (Super speciality) படித்தால் 4 இன்கிரீமெண்ட் என நடைமுறையில் உள்ளது. இந்த இன்கிரீமெண்ட்டுகளை உயர்த்த வேண்டும்.

பட்டயப் படிப்பு முடித்தால் 2 இன்கிரீமெண்ட், முதுநிலை படிப்பு முடித்தால் 4 இன்கிரீமெண்ட், உயர் சிறப்பு படிப்பு படித்தால் 8 இன்கிரீமெண்ட் என இன்கிரீமெண்டுகளை உயர்த்த வேண்டும். இந்த இன்கிரீமெண்டுகளை கொரானா காலத்துக்கு முந்தைய தேதியிட்டு வழங்க வேண்டும். அதுவே, அனைத்து மருத்துவர்களுக்கும் நிரந்தரமாகவும், நீண்டகாலத்தும், குழப்பமின்றியும் நன்மை பயக்கும்; பயனளிக்கும்.

அரசாணை GO.293 , குறிப்பிட்ட சில மேல்படிப்பு படித்தவர்களை Scarce எனவும் சிலவற்றை Non Scarce எனவும் வகைப்படுத்தி, PG அலவன்ஸ் வழங்குகிறது. இது சமத்துவமின்மையை மருத்துவர்களிடையே உருவாக்குகிறது. பிரிவினையையும்,
பிளவையும் ஏற்படுத்துகிறது. குறிப்பிட்டப் படிப்பு படித்த மருத்துவர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட தொகையை Service சீனியாரிட்டி எதையும் கருத்தில் கொள்ளாமல், PG அலவன்ஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எப்போது வேண்டுமானாலும் Scarce படிப்பு என்பது Non Scarce என அறிவிக்கப்பட்டு, பலருக்கு PG அலவன்ஸ் கிடைக்காமல் செய்துவிடும் அல்லது குறைத்துவிடும். இது மருத்துவர்களிடையே பாரபட்ச போக்கை உருவாக்கும். இன்கிரீமெண்ட் பெறுவதில் நிச்சயமற்ற நிலையையும் ஏற்படுத்தும். எனவே GO.293 – ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

2009 ஆம் ஆண்டு வெளியிட்ட GO 354 என்ற அரசாணை, அரசு மருத்துவர்களுக்கான அடிப்படை தகுதியான எம்பிபிஎஸ் படிப்பிற்கான அடிப்படைத் ஊதியம் தொடர்புடைது. ஊதியப்பட்டை 4 ஐ பணியில் சேர்ந்த 12 ஆம் ஆண்டின் முடிவில் வழங்குவது பற்றி கூறுகிறது.

GO 293 அரசாணை என்பது Diploma, MD,MS, MCh போன்ற மேற்படிப்பு படித்தவர்க்களுக்கான படிகள் ( Allowances) தொடர்பான புதிய அரசாணையாகும்.

இந்த இரண்டு வெவ்வேறு அரசாணைகளை ஒன்றிணைப்பது, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை வழங்குவது, ஒன்றை மட்டும் முதலில் வழங்குவது போன்ற விவாதங்களை உருவாக்குவது சரியல்ல.

இந்த நடவடிக்கை ஊதிய உயர்வை வழங்காமல் தள்ளிப் போடவும், குழப்ப நிலையை நீட்டிக்கவே வழிவகுக்கிறது. இது, அரசு மருத்துவர்களை உயர்கல்வி படித்தவர்கள் மற்றும் உயர்கல்வி படிக்காதவர்கள் என பிளவுபடுத்துகிறது. எனவே, இத்தகைய முயற்சிகளை கைவிட வேண்டும்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. இது கவலை அளிக்கிறது. கொரோனா தடுப்பூசிகள், கொரோனா இறப்புகளைத் தடுப்பதில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் 43 லட்சம் இறப்புகளைத் தடுத்துள்ளன. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பூஸ்டர் தடுப்பூசியை தகுதி உள்ள அனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறுவதற்கான பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5% லிருந்து 20% ஆக உயர்த்திட வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற தேசிய மருத்துவ ஆணையத்தையும் (NMC) , ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 12.07.2022 காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள, பதிவு பெற்ற மருத்துவர்களை முறைப்படுத்தும் வரைவு (Registered Medical Practitioner Regulations Draft) அறிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இது இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து மருத்துவமனைகள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான அறிக்கையாகும். இந்த அறிக்கை மருத்துவர்களுக்கும், சிறிய மருத்துவமனைகளுக்கும், ஏழை எளிய மக்களின் நலன்களுக்கும் எதிரானது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சாதகமானது. எனவே, அந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

மருத்துவர்களின், பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு, புதிய வரைவு அறிக்கையை அனைவரின் கருத்துக்களையும் அறிந்து தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்க வேண்டும்.

ஒன்றிய அரசு மருத்துவக் கல்வியை இந்துத்துவமயமாக்குவதையும் ,
கார்ப்பரேட்மயமாக்குவதையும் கைவிட வேண்டும்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், மீண்டும் மருத்துவப் படிப்பை தொடரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பல் மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். பல்மருத்துவ படிப்புகளில் உள்ள
பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்திட வேண்டும்.

முதல்வர் காப்பீடு திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைபடுத்துவதை கைவிட வேண்டும். அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் முழுமையாக இலவசமாக வழங்கிட வேண்டும்.

குழந்தையின்மை சிகிச்சைகளை முழுமையாக, ஏழை பெண்கள் நலன் கருதி மாவட்ட அளவில் அரசு மருத்துவமனைகளில் வழங்க வேண்டும்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ,மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி இடங்களை உருவாக்க வேண்டும். நிரந்தர அடிப்படையில் அவர்களை பணியமர்த்த வேண்டும்.

பயற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், அரசு மருத்துவர்களுக்கு 24 மணி நேரம், 48 மணிநேரம் என தொடர்ச்சியாக பணி வழங்கக்கூடாது.

மருத்துவ மாணவர்கள் நலனை பாதுகாக்க அவர்களுக்கென தனியான நல வாரியம் அமைக்க வேண்டும்.

MRB தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்காலிகமாக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு மீண்டும் நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் டாக்டர் த.அறம், பொருளாளர் டாக்டர் ஜி.இரமேஷ், செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி , என்.வெங்கடேஷ் ஹரிகணேஷ், அருணந்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவண்,
டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர் ,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
9940664343
9444181955

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button