தமிழகம்

நடராஜர் திருக்கோயிலை அரசு ஏற்க சட்டம் நிறைவேற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

தலித் பக்தர்களை தாக்கும் தீட்சிதர்களை கைது செய்க!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராசர் திருக்கோயில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே பாகுபாடு மற்றும் சாதி தீண்டாமை காட்டுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. வரலாற்று தொன்மையும், திராவிடக் கட்டிடக்கலையின் பெருமையும் கொண்ட தில்லை நடராசர் திருக்கோயில் நிர்வாகத்தை, தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்றி, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.

கடந்த 13.02.2022 சிதம்பரம் நடராசர் ஆலயத்திற்கு சென்ற பட்டியலின பெண் பக்கதர் ஜெயஷீலா என்பவரை, தீட்சிதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுத்து, அவரது சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, அவமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவிலுக்கு உள்ளே நிற்க விடாமல் தள்ளி வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருப்பது சரியல்ல, அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெறும் வகையில் வழக்கை நடத்த வேண்டும்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் நிறைவேற்றி, அதன்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்து, சமூகநீதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தையும், அதன் உடைமைகளையும் கையகப்படுத்த தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் முழு நிர்வாகத்தையும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இங்கு பணிபுரியும் தீட்சிதர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button