கட்டுரைகள்

பா.ஜ.கவை முறியடிப்போம் – தேசத்தைப் பாதுகாப்போம்!

து. ராஜா
பொதுச் செயலாளர், சி.பி.ஐ 

1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து, ஒரு மேம்பட்ட வாழ்க்கைக்கான மக்கள் போராட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நின்று போராடி வருகிறது. தேசத்திற்காகவும், மக்களுக்காகவும் தியாகங்கள் புரிவது என்று வரும்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இணையாக எந்த அமைப்பையும் சுட்டிக்காட்டிவிட முடியாது. நமது புகழார்ந்த வரலாற்றில், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக நமது கட்சி உரிமை முழக்கம் செய்துள்ளது; தேசத்தின் செயல்திட்டத்தை ஆக்கப்பூர்வமாக வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது. நமது போராட்டங்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் மாபெரும் வெற்றிகளை அளித்துள்ளது. போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகளானாலும், விவசாயிகள் நலன்களானாலும், அவற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு மகத்தானது ஆகும். மக்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஒப்புயர்வற்ற தியாகங்கள் புரிந்த மாவீரர்களின் செங்குருதியில் தோய்ந்த நமது கீர்த்திமிகு வரலாறு நமக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

நமது தேசத்தில் ஜனநாயகத்தின் இருப்பு கூட கேள்விக்குறியாகியுள்ள, முன்னெப்போதும் இல்லாத, ஒரு புதிய சூழலைத் தற்போது நாம் எதிர்கொண்டு வருகிறோம். ஆர்.எஸ்.எஸ்-ன் பிரிவினைவாத செயல்திட்டத்தால் இயக்கப்படும் ஒரு ஆட்சி பல மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் நடைபெறுகிறது. நமது விடுதலைப் போராட்ட இயக்கம் உயர்த்திப் பிடித்த ஒவ்வொரு இலட்சியத்தையும் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரிவினைவாத செயல்திட்டம் அழித்துக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவ பரப்புரைகள் நமது தேசத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டதிலிருந்து, நமது குடியரசின் மைய விழுமியங்களான மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் ஆகியவை நசுக்கப்படுகின்றன. மனுவாத முறையின் கீழ் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் பிரிவினர் மீதான பாகுபாடுகள் தற்போது அமைப்பு ரீதியாக வலுப்பெற்று வருகிறது. சலுகைசார் முதலாளித்துவம், அரசாங்கத்தின் ஆதரவுடன் தேசத்தின் விலைமதிப்பற்ற வளங்களைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்ல, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு முன்மொழிந்துள்ள ஏப்ரல் 14 முதல் மே 15 வரையிலான அரசியல் பரப்புரை முக்கியத்துவம் பெறுகிறது.

2022 அக்டோபர் மாதம் விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டில் ஏற்கப்பட்ட அரசியல் தீர்மானத்தில், “நமது செயல்திட்டத்தின் அடிப்படையான கோரிக்கைகளாகப் பொது சுகாதாரம், பொது கல்வி, நிலம், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை நாம் முன்னிறுத்தியுள்ளோம்.” குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் கூட இந்த அரசாங்கம் தோல்வியடைந்திருப்பதை நமது அரசியல் பரப்புரை மக்களிடம் பிரதானமாக எடுத்துரைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மையப்படுத்தி, நாம் மக்களை அணிதிரட்ட வேண்டும்.

ஏப்ரல் 14 – நமது அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியும், தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் போராடிய டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே மாதம் முதல் நாளைக் கொண்டாடுகிறார்கள். சமூக நீதி மற்றும் சோஷலிசம் குறித்து நமது கட்சி பரப்புரை மேற்கொள்வதுடன், அவற்றுக்காகப் போராட மக்களை அணிதிரட்ட வேண்டும்.

தேசிய மற்றும் மாநில அளவில் அண்மைக் காலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும் நமது பரப்புரையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதானி குழும முறைகேடுகள் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை ஒரு சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது; மோடி அரசாங்கத்தின் சலுகை சார்பை அம்பலப்படுத்தியுள்ளது. அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திட மோடி அரசாங்கம் மறுத்து வருவதே, இந்த முறைகேடுகளுக்கு அரசாங்கம் உடந்தையாக இருப்பதற்கு ஆதாரம் ஆகும்.

நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் கூட பா.ஜ.க விற்குத் தான் பெரும்பான்மை கிடைக்கும். அப்படி இருப்பினும், இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்திட அவர்கள் அஞ்சுகிறார்கள். இதுவே பா.ஜ.கவின் சலுகைசார் முதலாளித்துவ போக்கினை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. நமது அரசியல் பரப்புரை இந்தப் பிரச்சனை குறித்தும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் ஊழல் அமைப்பு ரீதியாகவும், மிகப் பரவலாகவும் தலைவிரித்தாடுகிறது என்பது இந்தப் பிரச்சனையின் மற்றொரு கோணம் ஆகும். நமது குடிமக்களின் கடின உழைப்பாலும், பங்களிப்பாலும் உருவாக்கப்பட்ட தேசிய சொத்துக்கள் மிகக் குறைவான விலைக்கு ஒரு சிலரிடம் விற்கப்படும் அதே காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க பெரும் நிதியை சேர்த்துக் கொண்டு வருகிறது. மக்களைப் பாதிக்குமே என்ற அக்கறை சிறிதுமின்றிப் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்படுகின்றன. எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் நிதிசார் நேர்மை மற்றும் தன்னாட்சி ஆகியவை அரசாங்கத்தின் சலுகைசார்பு காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிறுவனங்களில் இருப்பது பொதுமக்களின் பணம் ஆகும். இந்த நிதியைப் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சில முதலாளிகளின் நலன்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். நாட்டு மக்கள் பணவீக்கம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் போது, அவர்களின் சேமிப்பு பணம் ஊழல் முதலாளிகளின் கஜானாக்களை நிரப்பிட மடைமாற்றம் செய்யப்படுகிறது; நாட்டு மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் நமது பரப்புரை அம்பலப்படுத்துவதுடன், அவற்றுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த வேண்டும்.

பா.ஜ.க தேர்தல் மூலமாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்தாலும், அதன் சித்தாந்த ஊற்றுக்கண்ணாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தொடக்க காலத்திலிருந்தே ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த ஆதிக்கத்தின் காரணமாக, அரசாங்கமே இப்போது ஜனநாயக விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன், அத்தகைய செயல்பாடுகளை ஊக்கப்படுத்தவும் செய்கிறது. மக்களின் உரிமைகளைத் துச்சமெனப் புறந்தள்ளுவது வழக்கமாகி வருகிறது. நமது குடியரசின் அரசியலமைப்பு வடிவம் தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற எண்ணிக்கை பெரும்பான்மை தவறாகப் பிரயோகம் செய்யப்பட்டு, நாடாளுமன்றமும் தேவைக்கதிகமான ஒரு அமைப்பாகக் கருதப்படுகிறது. எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் மீது தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதுடன், எதிர்கட்சிகளைக் களங்கப்படுத்துகின்றன. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும், நமது அரசியல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இந்துத்துவ சக்திகளின் தாக்குதலில் இருந்து தேசத்தைப் பாதுகாத்திட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற முழக்கத்தையும் நாம் எழுப்ப வேண்டும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கமானது, எதிர் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம், அரசியலமைப்பின் பாற்பட்ட அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தின் வருங்காலம் குறித்த பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவமானது, எதிர்கட்சிகளை அச்சுறுத்திட, எதேச்சதிகார பாசிச ஆட்சியை நிறுவிட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அணி தீட்டியுள்ள அபாயகரமான சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது.

இது போன்ற, மேலும் பல பிரச்சனைகளைப் பற்றி பொதுமக்களிடம் எடுத்துரைக்கவுள்ள நமது அரசியல் பரப்புரை பல்வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்; குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது செயல்திட்டத்தை விளக்கும் பிரசுரங்கள் அனைத்து மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டு, பெருந்திரளான மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நமது பரப்புரையின் நோக்கங்கள் சென்றடைந்திட வேண்டும். நமது வர்க்க, வெகுஜன, பண்பாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, சமுதாயத்தில் நிலவி வரும் அனைத்து வகையான பிரிவினைகளுக்கு எதிரான ஒற்றுமையின் தேவை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நிகழ்வுகளை நடத்திட வேண்டும்.

அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே சித்தாந்த மற்றும் கொள்கை அடிப்படையிலான ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதே நமது பரப்புரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்திட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவை இடதுசாரிகள் மட்டுமே சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ள முடியும் என்பதையும், மக்களுக்கான, மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்றை இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்க முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நமது அரசியல் பரப்புரை, மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டும்.

நமது தேசத்தின் வரலாற்றில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தத் தேர்தலுக்கு முன், சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பா.ஜ.கவிற்கான நுழைவாயிலாக கர்நாடக மாநிலம் கருதப்படுகிறது. அங்கே, மே மாதம் 10 ஆம் நாள் மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். தேசத்தையும், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்திட, நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும்.

நமது வீரஞ்செறிந்த போராட்டம் மற்றும் மகத்தான தியாகத்தின் வரலாறானது, நம்மை, நமது தேசத்தின் ஜனநாய கட்டமைப்பின் ஒன்றிணைந்த ஓர் அங்கமாக உருப்பெறச் செய்துள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் பிரிவினைவாத, சுரண்டல் ஆட்சியிடமிருந்து நமது தேசத்தையும், அரசியலமைப்பையும், விளிம்புநிலை மக்களையும் பாதுகாத்திட, தலைமையேற்றுப் போராட வேண்டியது இடதுசாரிகளின் வரலாற்றுக் கடமையாகும். செங்கொடி என்றென்றும் மக்களுடன் உறுதிபூண்டு நிற்கிறது. மாற்று செயல்திட்டத்துடன் மக்களை நோக்கிச் செல்லும் நமது அரசியல் பரப்புரை பெரும் வெற்றி பெறும்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்துவதே தற்போதைய தேவை ஆகும். வகுப்புவாத, பாசிச சக்திகளின் சவால்களை எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமையைப் போராட்டங்கள் கட்சிக்கு வழங்கும்!

தமிழில் – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button