தமிழகம்

தமிழக அரசே! SKM பூர்ணா ஆயில் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளியின் விபத்து மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திடுக! ஏ.ஐ டி.யு.சி முறையீடு

ஏஐடியுசி ஈரோடு மாவட்டக்குழுவின் சார்பில் இன்று (8-4-2022) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவசர முறையீடு பின்வருமாறு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும்:

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்!

பொருள்: ஈரோடு மாவட்டம் – SKM பூர்ணா ஆயில் பேக்டரியில் நடந்த வடமாநிலத் தொழிலாளியின் விபத்து மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோருதல் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோருதல்…

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்கா, நஞ்சை ஊத்துக்குளியில் செயல்பட்டுவரும் எஸ்கேஎம் பூர்ணா ஆயில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமோத்ராய் (30) என்ற தொழிலாளி கடந்த 6-4-2022 அன்று இரவு தொழிற்சாலைக்குள், வேலை நேரத்தில் லாரி பின்பக்கமாக மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, இறந்த தொழிலாளியின் பிரேதத்தை அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல நிர்வாகம் முயன்றுள்ளது. இதனை அறிந்த இதர தொழிலாளர்கள் ஒன்று திரண்டு இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், தொழிலாளர்களின் நியாயமான இக்கோரிக்கை மீது பேசி சுமூகத் தீர்வு காணாமல், காவல்துறையினர் மூலம் பிரேதத்தை எடுத்துச் செல்ல நிர்வாகம் முயற்சித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளும் தொழிலாளர்களின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு தீர்வுகாண முயற்சிக்காமல் அதிகாரத்தை பயன்படுத்தி, தொழிலாளர்களை அப்புறப்படுத்திவிட்டு பிரேதத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதனைத் தொழிலாளர்கள் தடுக்க முயன்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஏஐடியுசி ஈரோடு மாவட்டக்குழு சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

# எஸ்கேஎம் பூர்ணா ஆயில் தொழிற்சாலையில் நடந்த காமோத்ராய் என்ற தொழிலாளியின் விபத்து மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய விசாரணைக் குழு அமைத்து விரிவான நீதி விசாரணை நடத்த வேண்டும்!

# கைது செய்யப்பட்டுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்! அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்பெற வேண்டும்!

# இறந்த தொழிலாளி காமோத்ராயின் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்!

# புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டமும், இதர தொழிலாளர் நலச்சட்டங்களும் இங்கு (SKM நிறுவனத்தில்) அமலாக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தொழிலாளர் துறைக்கு உத்தரவிட வேண்டும்! சட்ட மீறல்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட எமது முறையீட்டின் மீது தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவன்புடன் வேண்டுகிறோம்.

நாள்: 8-4-2022

இப்படிக்கு, எஸ்.சின்னசாமி

மாவட்டத் தலைவர் ஏஐடியுசி, ஈரோடு மாவட்டக்குழு,15, கருப்பண்ண வீதி,ஈரோடு – 638001 Cell: 9442522355 Email: aitucschinnasamy@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button