தமிழகம்

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

சட்டசபையில் டி.ராமச்சந்திரன் பேச்சு

தமிழகத்தின் 2022- 2023 ஆம்ஆண்டிற்க்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீது தளி சட்டமன்றத் உறுப்பினர் டி.இராமச்சந்திரன் பேசியது வருமாறு:
-இந்த அரசு பொறுப்பேற்ற காலம் கொரானா பேரிடர் காலம், கடுமையான பொருளாதார நெருக்கடி மேலும் கடந்த காலங்களில் சரியான முறையில் நிதி மேலாண்மையை கையாள காரணத்தினாலும், ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாலும் கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் மீது புதிய வரிகள் சுமத்தாமல் வரியில்லா நிதி நிலையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
இந்த பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் சாலை கட்டமைப்பு பணிகள், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், கல்வி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், கருத்தியல் பண்பாட்டிற்கும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை 21 மொழிகளில் உலகமெங்கும் பரப்பும் வகையில் அதிர்ச்சி மற்றும் மின்னூல் பதிப்பகத்திற்கு நிதி ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவிகள் இடைநிற்றல் போக்கவும், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கவும், மாதம்தோறும் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை திட்டம், கல்வியில் பின் தங்கிய 10 மாவட்டங்களில் 125 கோடியில் மாதிரிப் பள்ளிகள் புதியதாக 18000 கூடுதல் வகுப்பறைகள் என ஒரு நாட்டின் வளர்ச்சியில் கல்வியும், வேளாண்மையும் முக்கிய பங்கு வகிப்பதை அறிந்து பள்ளிக்கல்வித்துறைக்கு 16 ஆயிரத்து 898 கோடியும், வேளாண் துறைக்கு 33 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தமிழக வளர்ச்சி பாதைக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறதிகளை நிறைவேற்றும் வகையில் தகுதி படைத்த விவசாயிகளுக்கு பயிர் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்திருப்பது இந்த அரசின் மீது விவசாயிகளுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது அதே போல மாணவர்கள் பெற்ற கல்வி கடனையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர் அரசு நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சில மாதங்களாக கட்டுமான பொருட்களான கம்பி சிமென்ட் ஜல்லி எம்.சாண்ட், செங்கல் போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் கட்டுமான தொழில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கின்ற நிலைமையும் சாமனிய மக்கள் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகி போகிறது ஆகவே அரசு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
சமீபகாலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆணவ படுகொலைகளை தடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 36 நல வாரியங்கள் அமைக்கப்பட்டது. இவற்றிற்கு வேட்டு வைக்கும் வகையில் ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து 4 தொகுப்புகளாக கொண்டு வந்திருப்பது தொழிலாளர் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது. விவசாயிகளை பாதிக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது போல ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டம் பயன் தராது என கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
1990 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சியாளர்களால் மூன்று முறை மக்கள் நலப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் மீண்டும் பணி வழங்க தீர்ப்பு வழங்கிய பிறகும் கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்றத்தில் அதன் மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு தடை ஆணை வாபஸ் பெற்று பணி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும் மிகவும் மோசமான பொருளாதார நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய ஓய்வுக்கால பென்ஷன் பணக்கொடைகளை வாங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் கிராம உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றக்கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
2012ஆம் ஆண்டு 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16000 ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது 12000 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ 10,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரால் தொழில் பேட்டைகள் சிப்காட் அமைக்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நாகமங்கலம், அயர்னப்பள்ளி, உத்தன பள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளில் நான்காவது சிப்காட் அமைக்க சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சிப்பதால் அப்பகுதி விவசாயிகளின் மத்தியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஓசூரில் 1,2,3சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்திருக்கும் நிலையில் நான்காவது சிப்காட் அமைத்தால் ஒட்டுமொத்த விளைநிலங்களையும் பறிகொடுத்து விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறும் அவல நிலை ஏற்படும். ஆகவே அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1990ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்தபோது பம்பு செட்டுகள் வைத்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.
அதேபோல தமிழகத்திலேயே முதல்முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்தார். இந்த அரசின் இரண்டாவது பட்ஜெட் இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக 33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை மனதில் கொண்டு 2 ஆயிரத்து 339 கோடி காப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கலைஞர் கொண்டுவந்த உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ 15 கோடியும் புதிய உழவர் சந்தைகளை உருவாக்க ரூ 10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும், விவசாயத்தை முதன்மையாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் 1550 கிலோ மீட்டர் தூரம் கால்வாயை தூர்வார நிதி ஒதுக்கீடு மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியாக டன் ஒன்றுக்கு ரூ 195 ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் கரும்பு வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
தென்னை நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்ற அதேவேளையில் தேங்காய் கொள்முதல் மையங்களை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும். தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டர் மா பயிரிடப்படுகிறது எனவே அரசின் சார்பில் மா கொள்முதல் மையம் மற்றும் மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
மலர் சாகுபடி அதிகமாக உள்ள கிருஷ்ணகிரி சேலம் மதுரை புதுக்கோட்டை மாவட்டங்களில் நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
தளி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை சுற்றுப்புற ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும்.
அஞ்செட்டியை மையமாகக்கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.
தளி தொகுதியில் வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button