தமிழகம்

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – ஏஐடியூசி ஆதரவு!

தமிழ்நாடு அரசு தலையிடக் கோரி மே 21, 23 தேதிகளில் ஆர்ப்பாட்டம்!

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய தொழிலாளர்கள் கடந்த 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு நாட்களாக வாரிய தலைமை அலுவலகம் முன்பே போராடி வரும் தொழிலாளர்களோடு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தலையிட்டு பேசி இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று போராடும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஏஐடியூசி செயலாளர் நா.பெரியசாமி மேனாள் எம்எல்ஏ ஏஐடியூசி சார்பில் ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்து பேசினார். தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ம. இராதாகிருஷ்ணன், CCTU கன்வீனர் ஆ.பாஸ்கர், மத்திய சென்னை மாவட்ட ஏஐடியூசி செயலாளர் மு.சம்பத், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள், களப்பணியாளர்கள், சில்ட் (தூர்வாரும்) வண்டி ஓட்டுனர்கள், ஜெட் ராட்டிங் மற்றும் சூப்பர் சக்கர் வண்டி ஓட்டுநர்கள் – ஆப்பரேட்டர்கள் ஆகிய பணிகளில் 20-30 வருடங்களுக்கு மேலாக தற்காலிக தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். முழு நேர ஊழியர்களாய் தொடர்ந்து பல ஆண்டுகள் பணியில் நீடித்தாலும், இன்றும் இவர்கள் “தற்காலிக” ஊழியர்களாகவே உள்ளனர்.

அரசு பணியாளர்களின் 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இத்தகைய தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிப்பது குறித்து 2017 ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிரந்தரப் படுத்துதல் சட்டம் 1982 தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. தமிழ்நாடு அரசாங்கமே இயற்றிய சட்டப்படியும், வெளியிட்டுள்ள அரசாணைப்படியும் இத்தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாறாக தொழிலாளர்கள் ஊதியத்தையும், சமூக பாதுகாப்பையும் பறித்து முறைகேடுகளில் ஈடுபடுவதில் வல்லமை பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியமும், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிகை தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தி, வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது, போராடத் தூண்டியுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக தொழிலாளர்களாக, குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியம் பெற்று வந்துள்ளனர். உழைப்பு சுரண்டலில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட போதும், பணி நிரந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அற்ப ஊதியத்திற்கு பணி புரிந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சுரண்டியது போதாது என்று மேலும் சுரண்ட வழிவகுக்கும் ஒப்பந்த முறை என்ற படுகுழியில் இத்தொழிலாளர்களைத் தள்ளுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல; ஏற்புடையதுமல்ல. இத்தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோருவது நிராகரிக்க முடியாத நியாயமான கோரிக்கையாகும்.

ஆகவே, போராடும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் (ஏஐடியூசி) தனது ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

போராடும் தொழிலாளர்களை சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு மாறாக மௌனம் காப்பது மனித உணர்வை மதிக்காத, தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். எனவே, உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வுக்கு தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். சுமூக தீர்வு எட்டப்படவில்லை என்றால்

தமிழக அரசே! நகராட்சி நிர்வாக துறையே!
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியமே!

போராடும் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் கோரிக்கை மீது பேசித் தீர்வு காண்க !

நவீன கொத்தடிமை மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் ஒப்பந்த முறையை கைவிடு !

பணி நிரந்தரம், சட்டப்படி ஊதியம், பாதுகாப்பு கருவிகள், சமூக பாதுகாப்பு உறுதிசெய்!

என வலியுறுத்தி வரும் 21.05.2022 அன்று சென்னையிலும் 23.05.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி துறை ஏஐடியூசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனத்தின்( ஏஐடியூசி) பொதுச்செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button