கட்டுரைகள்மாநில செயலாளர்

அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வேட்டை நாய்களாக்குவதா?

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் எழுதும் கட்சிக் கடிதம்

போர்க்குணம் மிக்க தோழர்களே!

நாட்டை ஆளும் மாமன்னர் நரேந்திர மோடி குறித்து யாரும், எவரும் விமர்சிக்க கூடாது. ஏனெனில், அவர் சாதாரண மனிதர் அல்லர். மகாபாரதத்தில் அநீதிகளை அழிக்க கிருஷ்ணர் அவதாரம் எடுத்து வந்ததைப் போன்று, அநீதிகளை அழிப்பதற்கென்றே ஆர்எஸ்எஸ்- ஆல் அனுப்பப்பட்ட அவதாரம்.

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், நாட்டின் விடுதலைப் போரில் குடும்பத்துடன் பங்கேற்ற, 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த, நாட்டு மக்களின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்ற ஜவஹர்லால் நேரு தொடங்கி, வாஜ்பாய் உட்பட பலரும் நாட்டின் பிரதமர் பொறுப்பை வகித்துள்ளனர்.

சத்திரிய வம்சத்தைச் சேர்ந்த வி.பி.சிங் கூட நாட்டின் பிரதமராக இருந்தார்.

எந்த ஒரு பிரதமரும் தன்னை நாட்டின் மன்னராகவோ, மாமன்னராகவோ கருதியது இல்லை.

ஒவ்வொரு பிரதமரும் அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பளித்தும்; ஜனநாயகத்தை மதித்தும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட்டு வந்தனர்.

நாட்டின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வின்றி, சீரான முறையில் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டது. அதற்கென உருவாக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டக் குழு சீரும் சிறப்புமாக செயல்பட்டு வந்தது.

அந்த அமைப்பு முதன் முறையாக மோடி ஆட்சியில் கலைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்; பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி; மற்ற மாநிலங்களுக்கு குறைவான நிதி; இப்படி ஜனநாயகத் தன்மையற்ற, சர்வாதிகார முறையை மோடி பின்பற்றுகிறார்.

நாட்டின் பிரதமர், நாடு முழுமைக்குமான தலைவர் என்ற உயர் நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சார்பு நிலையினை மேற்கொண்ட சுயநலவாதியானார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மேற்கண்ட ஒரு உதாரணம் போதுமானது.

மோடி, பிரதமர் என்ற நிலையில் செயல்படாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணைகளை ஏற்று, அட்சரம் பிறழாமல் செயல்படுத்தி, தனக்கு கிடைத்திட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றார்.

ஒன்றிய அரசு நாட்டின் ஒட்டுமொத்த 142 கோடி மக்களுக்கான அரசு என்ற நிலை மாறி, அதானி, அம்பானி என்ற விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களின் நலன் சார்ந்த அரசாக, கடந்த 10 ஆண்டு காலமாக செயல்பட்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

நாடு வளர்கின்றது; வளர்ச்சியை நோக்கி நடை போடுகின்றது என்று நாள்தோறும் மோடி முழக்கமிடுகின்றார். ஆனால் அவரது முழக்கம் உண்மைதான். அவரது முழக்கத்தின்படி நாட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. சொல்லப்போனால், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்ததைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு முன்னேற்றம்? உலக முதலாளிகள் பட்டியலில் முதன்மை இடத்தைப் பெற்றவர் அதானியா? அல்லது அம்பானியா? என்பதுதான் மோடியின் ஆட்சியில் வளர்ச்சியாக உள்ளது.

2014 மற்றும் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நாடு போற்றிப் பாதுகாத்து வரும் மதச்சார்பின்மை என்கிற மகத்தான கொள்கைக்கு மோடியின் ஆட்சியில் என்றுமில்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை துச்சமென மதித்து, குப்பைக் கூடையில் வீசியெறிந்து விட்டு,  மக்களால் நிராகரிக்கப்பட்ட மனுதர்மத்தை அரசியலமைப்புச் சட்டமாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.

சுருங்கக் கூறின், நாட்டை ஜனநாயகப் பாதையில் இருந்து திசை மாற்றி சர்வாதிகார, பாசிச ஆட்சியை உருவாக்கிட அனைத்து முயற்சிகளும் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்விக் கொள்கையை மாற்றி, தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரால் குலக்கல்வி முறையை புகுத்துதல்.

ஒரே நாடு; ஒரே மொழி
ஒரே நாடு; ஒரே தேர்தல்
ஒரே நாடு; ஒரே வரி (ஜிஎஸ்டி)
ஒரே நாடு ஒரே மதம்

என ஒரே.. ஒரே.. என்று கூறி, இறுதியாக ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் நயவஞ்சக நாடகத்தை, நாட்டு மக்களுக்கு உணர்த்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். வரும் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது. அமர்ந்தால் அது நாட்டிற்கு ஏற்படும் பேராபாயம் என்பதை உணர்ந்த கட்சிகள், ஒருங்கிணைந்து உருவாக்கி இருப்பதுதான் ‘இந்தியா’ கூட்டணி.

இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இது நாள்தோறும் வளர்கின்றது. பாஜக தோற்பது உறுதியாகி வருகின்றது. மூன்றாம் முறை ஆட்சி என்பது ஒருபோதும் கிடையாது என்கிற நிலை நாடு முழுவதும் எதிரொலித்து வருகின்றது.

இத்தகைய உண்மையை நம்மைக் காட்டிலும் மோடியும் அவரது சகாக்களும் அறியவும் உணரவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உதாரணத்திற்கு, பாஜக தலைமை தாங்கி வழிநடத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்று கொண்டு இருக்கின்றன என்பது மட்டுமல்ல, இன்றும் அக்கூட்டணியில் தொடர்கின்ற கட்சியின் மிசோரம் மாநில முதலமைச்சர், “மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பரப்புரைக்கு மோடி செல்லவே முடியவில்லை.

இவற்றைக் கண்டுணர்ந்த மோடி கும்பல் ஆத்திரத்தில் உள்ளது. இந்த நாட்டை தாங்கள் மட்டுமே ஆள வேண்டும். தங்களின் விருப்பப்படி ஆள வேண்டும். நாட்டை ஆள்வது மட்டுமல்ல; அகண்ட பாரதத்தை உருவாக்கிட வேண்டும். அகண்ட பாரதம் எனில், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை என அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரே நாடு, அதுதான் பாரத நாடு என்கிற கனவில் மண் விழுந்து விட்டதே என்கிற கோபத்தில், கடல் போல கொந்தளிக்கின்றது மோடி கூட்டம்.

இதற்கு மாற்று வழி இல்லையா? ஏன் இல்லை, இருக்கிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை இவ்விரு அமைப்புகள்தான் பாஜகவின் மிக மிக நெருக்கமான கூட்டணி. இவ்விரு அமைப்புகளைக் கொண்டு தன்னை எதிர்ப்போரை, விமர்சிப்போரை, அடுத்து வரும் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம் என உறுதிப்பூண்டுள்ளோரை பலவீனப்படுத்திட பாஜக பயன்படுத்தி வருகின்றது.

வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் வேட்டை நாய்கள் போன்று செயல்படக்கூடிய அவலத்திலும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வேட்டை நாய்களை வளர்க்கும் எஜமானனின் கட்டளையை அவை நிறைவேற்றும்.

அத்தகைய வேட்டை நாய்களாக வருமான வரித்துறையும் அமலாக்க துறையும் ஆக்கப்பட்டு விட்டதா? ஆம், அப்படித்தான் செயல்படுகின்றன.

ஆர்எஸ்எஸ் அமைப்பை, அதன் அரசியல் கருவியான பாஜகவை, அதன் ஆட்சியை கொள்கை ரீதியாக எதிர்த்துப் போராடுவதில் திமுக முதன்மை நிலையில் உள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்சிக் கூட்டங்கள் மட்டுமின்றி, அவர் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிகள் அனைத்திலும் மணமக்களை வாழ்த்திப் பேசுவதுடன், வகுப்புவாத சக்திகளால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து குறித்து விளக்கம் அளித்துப் பேசி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

பாஜகவால், மோடி கும்பலால் அரசியல் ரீதியாக திமுகவை எதிர்கொள்ள இயலவில்லை.  முதலமைச்சர் முன்வைக்கும் விளக்கங்களுக்கு விடையளிக்க முன்வராமல், குறுக்கு வழியில் திமுகவை பழிவாங்க வேட்டை நாய்களைப் பயன்படுத்துகின்றது.

திமுகவில் சிறப்பாக செயல்பட்டவர்.  இரண்டு மாவட்டங்களுக்குப் பொறுப்பேற்று, உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியை அந்த மாவட்டங்களில் மகத்தான வெற்றி பெறச் செய்தவர். அமைச்சர் பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றி வந்தார். அவர் செய்த பெரும் தவறு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலை என்ன? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டார். விளைவு, சிறையில் உள்ளார். ஜாமீனில் கூட வர முடியவில்லை.

திமுகவின் மற்றொரு முக்கியமான செயல் வீரர், சிறந்த பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் வேட்டை நாய்களின் சோதனை.

திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், ஆற்றல் மிக்கவர். அவருக்கு அளித்திடும் பொறுப்புகளில் முத்திரை பதிப்பவர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. அவருடைய வீடு, நிறுவனங்கள் அனைத்திலும் வேட்டை நாய்கள் புகுந்து சோதனை.

மீதமுள்ள நான்கு மாத காலத்திற்குள் மற்ற திமுக அமைச்சர்களின் வீடுகளுக்கு வேட்டை நாய்கள் செல்லும் என்பது மோடி கும்பலுக்குத் தெரியும்.

பாஜகவை எதிர்த்து நிற்பதில், டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி உறுதியுடன் இருந்து வருகிறது. இந்தக் கட்சியைக் கண்டு நிலைகுலைந்து நிற்கிறது பாஜக.

நாடாளுமன்றம் நமது கைக்குள் இருக்க டெல்லி மாநிலத்தை ஆம் ஆத்மி ஆள்வதா?

சட்டமன்றம் மட்டுமல்ல, அங்குள்ள மாநகராட்சியையும் ஆம் ஆத்மி கைப்பற்றி விட்டது.

சிங்கமாகத் திகழும் தங்களை சுண்டெலியான ஆம் ஆத்மி எதிர்ப்பதா? போடு சிறையில்!  அம்மாநில துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா சிறையில்.  அவருடன் ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் வீடுகளில் வேட்டை நாய்களின் சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர், டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறையின் சம்மன் உத்தரவு.

“எதற்காக என்னை அழைக்கின்றாய், ஒரு விவரமும் இல்லாமல் நீ வா, என்றால் வரவேண்டுமா? முடியாது. உன் சம்மனை திரும்பப் பெறு” என்று கெஜ்ரிவால் கடிதம்.  அடுத்த சில நாட்களில் என்ன நடக்கும் என்று தெரியாது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது.

அரசியலாக எதிர்கொள்ள இயலாத மோடி வகையறாக்கள், தங்களது வேட்டை நாய்களை முதலமைச்சரின் இரு மகன்களுடைய வீடுகளுக்கு சோதனைக்கு அனுப்பியுள்ளது. அவை போதாது என ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களில் சோதனைகள். மக்களின் கவனத்தை திசைதிருப்ப, குறுக்கு வழியில் அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடிக்கும் மோடி கம்பெனிகளால் வேட்டை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி 15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக அம்மாநில ஊழல் ஒழிப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை எத்தகைய நிலையில் உள்ளது என்பதனை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. அங்கே தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் லஞ்சம் வாங்கினார் என்பது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

மொத்தத்தில், எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாத மோடி கம்பெனி, தங்களை எதிர்ப்பவர்களை, விமர்சிப்பவர்களை தங்களின் வேட்டை நாய்களைக் கொண்டு பழிவாங்க முயல்கின்றது.

இத்தகைய அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்பாடுகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆயத்தமாவோம்.

2024 தேர்தலில் தக்க பாடம் புகட்ட தற்போதே ஆயத்தப் பணிகளை மேற்கொள்வோம்.

மீண்டும் சந்திப்போம்.

தோழமைமிக்க,

(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

(கட்டுரை: ஜனசக்தி, நவம்பர் 12-18 இதழ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button