கட்டுரைகள்

தேசத்துரோக சட்டம் நீக்கப்பட வேண்டும்!

– டி.ராஜா

230 ஆண்டுகளுக்கு முன்பு, புகழ்மிகு பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரும், அரசியல் அறிஞரும், தத்துவஞானியாகவும் திகழ்ந்த தாமஸ் பெய்ன் ‘மனிதரின் உரிமைகள்’ எனும் ஆய்வு நூலை இங்கிலாந்தில் வெளியிட்டார். இதன் காரணமாக, அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ‘மனிதரின் உரிமைகள்’ முடியாட்சி முறையையும் வம்சாவளி அரசாங்க முறையையும் மிகக் கடுமையாக விமர்சித்தது; ஏழைகளுக்கான சமூக நலவாழ்வு நடவடிக்கைகளை முன்னிறுத்தியது.

முடியாட்சி மற்றும் பிரபுத்துவத்திற்கு எதிரான தாமஸ் பெய்னின் விமர்சனம், தனி நபர் இறையாண்மை மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை ஆகியவை ஆளும் வர்க்கத்தினருக்கு எரிச்சல் ஊட்டியது. அவதூறான முறையில் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு முறையான விசாரணையும் இன்றி தாமஸ் பெய்னுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இன்றைய நமது காலத்தில் முடியாட்சி முறையை ஆதரிக்கும் கருத்துகள் கண்ணுக்கு புலப்படவில்லை. ஜனநாயக சமுதாயத்தின் வலிமைமிகு தூண்களாக மக்களாட்சி முறைமை, அரசமைப்பு விழுமியங்கள் மற்றும் மக்களின் இறையாண்மை உள்ளிட்டவை எழுச்சி பெற்றுள்ளன. தாமஸ் பெய்னின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தூக்கு தண்டனை விதித்தவர்களின் கூற்று பொய்யாகிப் போனது.

தாமஸ் பெய்னுக்கு தூக்கு தண்டனை  விதிக்கப்பட்டு 200 ஆண்டுகள் கழிந்த பிறகு 2010ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கம் தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்திட முடிவு செய்தது. அது குறித்து பிரிட்டிஷ் நீதித்துறை அமைச்சர் கிளேயர், “தற்காலத்தில் பேச்சுரிமை ஜனநாயகத்தின் உரைகல்லாக கருதப்படுகிறது. மேலும், சுதந்திரத்தைப் பாதுகாத்திட அரசை விமர்சிக்கக் கூடிய குடிமக்களின் ஆற்றல் மிகவும் இன்றியமையாதது ஆகும்“ என்று கூறினார்.

நமது சட்டத்துறை கட்டமைப்பில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஆறாவது அத்தியாயத்தில் தேசத்துரோகச் சட்டம் இடம் பெறுகிறது. இந்திய வெகுமக்களின் விடுதலை உணர்வைக் கண்டு அஞ்சி நடுங்கிய காலனிய அரசாங்கம், தேசிய விடுதலை இயக்கத்தையும், பேச்சுரிமையையும் நசுக்கிட இந்தச் சட்டத்தை தாராளமாகப் பயன்படுத்தியது. 1898ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி பாலகங்காதர திலகர் தொடங்கி மகாத்மா காந்தி உள்ளிட்ட எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாய்ந்தது. தேசத்துரோக குற்றச்சாட்டு விசாரணையின்போது பேசிய மகாத்மா காந்தியடிகள், “குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்டப் பிரிவுகளில் 124-A தலையாய சட்டப்பிரிவு ஆகும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைப் பெற்ற பிறகு உதயமான இந்திய குடியரசின் தேவைகள் பிரிட்டிஷ் காலனிய அரசாங்கத்தின் தேவைகளில் இருந்து மிகவும் வேறுபட்டவைகளாக இருந்தன. காலனிய அரசாங்க சட்டங்களின் நோக்கமானது, எழுச்சியுறும் விடுதலை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு குடிமக்களின் கருத்துச் சுதந்திரம், மத நம்பிக்கை, வழிபாடு ஆகிய உரிமைகளை இந்திய அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தியது. நமது ஜனநாயக வாழ்வின் கோட்பாடுகளாக சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை உருப்பெறவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கர் உணர்சிகரமாக வாதிட்டார். நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தேசத்துரோக சட்டத்தை சமரசமற்ற முறையில் விமர்சித்தார் என்ற போதிலும் கூட, அந்தச் சட்டப்பிரிவு இன்றளவும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் பேச்சுரிமை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமைகளை அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 19 (1)(a) அடிப்படை உரிமைகளாக உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தையும், அதன் கொள்கைகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு அத்தியாவசியமான பகுதியாகும். விமர்சனமும், சகிப்புத்தன்மையும் மக்களாட்சி மாண்பார்ந்த சமுதாயத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. அரசாங்கத்தின் பொறுப்புடை தன்மையை நடைமுறைப்படுத்துவதால் இவை இரண்டும் தேசப்பற்றின் ஒரு வடிவமாகத் திகழ்கின்றன.

எனினும், காலனிய ஆட்சியின் எச்சமாகத் தொடரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-A பிரிவானது, பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான ஒரு பிரிவாக நீடித்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒழிப்பதற்காக தேசத்துரோக சட்டப்பிரிவை அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்தப் போக்கை கருத்தில் கொண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-A வை நீக்க வேண்டும் என்பதற்காக 2011ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் சட்ட முன்வடிவை நான் கொண்டு வந்தேன்.

குடிமக்களுக்காகவும், சமச்சீரான மேம்பாட்டிற்காகவும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பணியாற்றி வரும் அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது இந்தப் பிரிவு ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளை நான் மாநிலங்களவையில் எடுத்துரைத்தேன். 1860ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து பிரிவு 124-A வை நீக்க வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. மாநிலங்களவையில் நான் கொண்டு வந்த தனிநபர் சட்ட முன்வடிவு வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும், நான் முன்வைத்த வாதங்கள் இந்த மோசமான சட்டப்பிரிவின் மீது ஒரு விவாதத்தை ஏற்படுத்தியது.

தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று தனிநபர் சட்டமுன்வடிவை நான் கொண்டு வந்தபோது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. இதை நான் குறிப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால் எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது பற்றியதல்ல எனது சிந்தனை; சட்டப்பிரிவு 124&ஏ மற்றும் உபா சட்டம் போன்ற ஜனநாயக விரோத, எதேச்சதிகார, நியாயமற்ற அதிகாரங்கள் அரசாங்கத்திட்டம் இருப்பது பற்றியதாகவே எனது சிந்தனை மேலோங்கி இருந்தது.

2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றிகண்ட பிறகு தேசத்துரோக சட்டப்பிரிவு பயன்படுத்தப்படுவது குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து துணிந்து கேள்வி எழுப்பும் அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலைக்குமேல் 124-A எனும் வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. கருத்து வேறுபாடு உடையவர்களை தேச விரோதிகள் என்று முத்திரையிட்டு, அவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்வது தற்போது ஒரு வழக்கமாகி விட்டது. இந்தப் போக்கு விடுதலைப் போராட்டத்தின் போது உயர்த்திப் பிடிக்கப்பட்ட லட்சியங்களான விவாதித்தல், கலந்தாலோசித்தல், மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பது ஆகியவற்றிற்கு எதிரானதாக இருக்கிறது.

தேசத்துரோக சட்டப்பிரிவின் கீழ் பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவது மட்டுமின்றி மற்றவர்களின் தேசப்பற்றை கேள்விக்குள்ளாக்குவதும் பாஜகவின் நடைமுறை வழக்கமாகி விட்டது. “நேயத்தைச் சட்டத்தால் உற்பத்தி செய்திடவோ, முறைப்படுத்திடவோ முடியாது” எனும் காந்தியடிகளின் மகத்தான பொன்மொழியை பாஜக தலைவர்களால் ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது.

124-A மற்றும் உபா சட்டத்தின் (UAPA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த தரவுகளைப் பார்க்கும்போது இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது முற்றிலுமாக அம்பலப்பட்டு விடுகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 2017ஆம் ஆண்டில் மொத்தம் 156 தேசத்துரோக குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த ஆண்டில் போலீசார் மட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அல்லது வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் 27 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டன. நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்ட 58 வழக்குகளில் ஒரு வழக்கில் மட்டுமே குற்ற நிர்ணயம் நிரூபணம் ஆனது. தேசத்துரோக வழக்குகளில் ஏறத்தாழ 90 சதம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அண்மையில், தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இன்றி நிலைமை தொடர்கிறது. பதிவு செய்யப்பட்ட 230 வழக்குகளில் 23ல் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் ஏறத்தாழ 95 சதம் தேசத்துரோக குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

அரசாங்கத்தின் ஆணைகளை எதிர்த்து கேள்வி எழுப்புவோரை அச்சுறுத்துவதற்காகவும், தொடர்ந்து தொல்லை கொடுப்பதற்காகவும் வலுவற்ற சாட்சியங்களின் அடிப்படையில் அல்லது போதிய சாட்சியங்கள் இன்றி தேசத்துரோக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்பது குறைவான குற்ற நிர்ணய விகிதத்தின் (lesser Conviction Rate) மூலம் தெளிவாகிறது.

அடிப்படை ஆதாரமற்ற தேசத்துரோக குற்றச்சாட்டுகள் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் பெயரால் அச்ச உணர்வு மிக்க ஒரு சூழலை உருவாக்கிட, அரசியல் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை போராளிகள் உள்ளிட்டோரை அரசாங்கம் மீண்டும், மீண்டும் சிறையில் அடைத்து வருகிறது.

உபா சட்டம் தொடர்பான பிரச்சினையிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. 2017 – 2020 ஆம் ஆண்டுகளில் உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை  75% அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மொத்தம் 4,827 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில், அந்த ஆண்டில் 398 வழக்களில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிந்தது. 95% வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்தியாவின் மோசமான சிறைச்சாலை சூழல்களில் பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கு சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வேதனையுற்று வருகிறார்கள் என்பதைத்தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

நமது அரசியலமைப்பின் அடிப்படையான விழுமியங்களுக்கு அபாயத்தை உருவாக்கி வரும் இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் திரளும் அரசியல் துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பிரிவு 124-A செயல்படுத்தப்படுவது குறித்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று இந்திய சட்ட ஆணையம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று வெளியிட்ட ஒரு கலந்தாய்வு அறிக்கை கூறுகிறது.

அண்மையில் 2022 மே 11 அன்று 124-A சட்டப்பிரிவு குறித்த விஷயம் விரிவான முறையில் பரிசீலிக்கப்படும் வரையில் ஒன்றிய, மற்றும் மாநில அரசுகள் தேச துரோக சட்டப்பிரிவை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் மீது இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள எதார்த்தமான சூழலில், நமது தேசத்தின் ஜனநாயக அடித்தளங்களை மேம்படுத்த வேண்டும் என்றால், தேசத்துரோக சட்டத்தை நாம் கட்டாயம் ஒழித்தாக வேண்டும். ஜனநாயகத்தின் உயிர்ப்பான செயல்பாட்டிற்கு விமர்சனம், மாற்றுக் கருத்துகள் மற்றும் விவாதங்கள் அவசியமானவை ஆகும்.
உண்மை இவ்வாறு இருக்க, மற்றொரு புறத்தில் அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்புவோர் வேட்டையாடப்படுவது வரலாற்றின் மத்திய காலத்தையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. பேச்சுரிமை மற்றும் விவாதத்திற்கான சகாப்தத்திற்கு உண்மையில் நாம் கட்டியம் கூற வேண்டிய காலம் உதயமாகி விட்டது. அதற்கு தேசத்துரோக சட்டம் நீக்கப்பட வேண்டும்.

தமிழில்: அருண் அசோகன்     

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button