தமிழகம்

சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களைத் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மேலெடுக்க வேண்டும் : இரா முத்தரசன் பேச்சு

செய்தி தொகுப்பு : இதழாளர் இசைக்கும்மணி

சென்னை: ஜனநாயக அரசியலமைப்பைப் பாதுகாத்திட வேண்டிய தேர்தல் ஆணையர், நீதிபதிகள், மாநில ஆளுநர்கள் சமூக நீதிக்கு எதிராக இருந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு ஆதரவானவர்களாக மாறிவிடுவதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளோடு இணைந்து நின்று போராட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கமும் முன் வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேசினார் .

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் டிசம்பர் 13 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.லிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. வீரபாண்டியன் மாநிலச் செயலாளர்கள் வழக்கறிஞர் கீ. சு.குமார் , கோவை அஸ்ரப் அலி, தென் சென்னை எஸ். கே. சிவா , விருதுநகர் பழனிக்குமார் , நெல்லை சுகுமாரன், வி உதயகுமார், செண்பகம் , அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் புதுவை ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து ,சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி. லதா உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

மறைந்த ஆளுமைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் கடைபிடிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இரா. முத்தரசன் பேசியதாவது: தற்போது குஜராத் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டு சட்டமன்ற முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. டெல்லி மாநகராட்சிக்கும் , உத்தபிரதேச சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்று இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க இடத்தை தக்க வைக்காமல் தோல்வியைத் தழுவியதால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது . டெல்லி மாநகராட்சியிலும் பா.ஜ.க தோல்வி கண்டு டெல்லி பிரதேச ஆளும் கட்சியான ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. நிலைமை இப்படி இருக்க, குஜராத்தில் பா.ஜ.க இமாலய வெற்றி என்பதைத்தான் ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டது வியப்பாக உள்ளது.

நம் நாட்டுக்கு ஜனநாயக முறைப்படி எப்படி தேர்தல் நடத்துவது என்பதையெல்லாம் நமது அரசியல் அமைப்பு சட்டம் எடுத்துரைத்துள்ளது . அதன்படி, தேர்தல் ஆணையமும் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் தயா ரிக்கப்பட்டு , திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டு தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தி வருகிறது. ஆனாலும், முறைகேடுகளும் இருந்த வண்ணம் உள்ளது என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

அரசு ஊழியராக இருந்து, ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதைக் கண்டித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடைகோடி மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கான அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து, அதன்படியான தீர்ப்புகளையே வழங்கி வருகிறார்கள். நீதிபதி பதவி ஓய்வுக்கு பின் மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆகி ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள்; இதனால் நீதிபதியாக இருப்பவர்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது.

உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருந்து வருகிறது . இந்திய விடுதலைக்கு பிறகு, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகியவை இஸ்லாமிய நாடுகளாகப் பிரிந்து சென்றுள்ளது. இந்தியா இந்துமத நாடு என சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. பிஜேபிக்கு வழிகாட்டுதலாக இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்றிய அரசை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்ளாத தத்துவார்த்தை கைக்கொண்டு உள்ளதாக மாற்றி அமைத்து வருகிறது.

காங்கிரஸ் அல்லாத ஆட்சி என்பதால்தான் வி.பி. சிங் ஆட்சியை இடதுசாரிகள் ஆதரித்தார்கள். இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்திட முன் நின்றவர் வி.பி.சிங். மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்த முடியாத அளவுக்கு பிஜேபி கட்சினர் அப்போது எதிர் நிலைகளை மேற்கொண்டனர். அத்வானி ரத யாத்திரை மூலம் வன்முறைகளைத் தூண்டிவிட்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டார்கள் . வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்திட்டார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோசி உட்பட உ.பி முதல்வராக இருந்த கல்யாண்சிங் உள்ளிட்டவர்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும், நிரூபனங்கள் இல்லாமல் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள். உச்ச நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தகைய காரணங்களாலேயே குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பிஜேபி வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

விடுதலைப் போராட்டத்தில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்திடாத ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க தான் இப்போது ஆட்சியில் இருந்து வருகிறது. ஆர்.எஸ். எஸ் – பா.ஜ.க ஒன்றிய அரசின் கைப்பாவையாக அந்தந்த மாநில ஆளுநர்கள் இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநரும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத கொள்கையைப் பின்பற்றி வருவதால் அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29 -ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே அதிபர் எனும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான போக்குகள் அமலாக்கப்படுவதை எதிர்த்திட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கமும் முன்வர வேண்டும்; சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களை மேலெடுக்க வேண்டும் என முத்தரசன் பேசினார்.

பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்தும் பேசினார்.

அடுத்ததாக, விருதுநகர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் நாட்காட்டி வெளியிடப்பட்டது. மாநில தலைமை குழு உறுப்பினர் என்.எஸ். பிரதாபச் சந்திரனின் “தோழர் சி.கே. மாணிக் கம் வாழ்க்கை வரலாறு” நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. தீர் மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள், மாநில குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மாநில குழு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button