கட்டுரைகள்

பாரதியும் பொதுவுடைமையும்

– கே முருகன்

பாரதியின் நினைவு நூற்றாண்டு நிறைவு பெரும் தருணம், நமது நாட்டின் 75 ஆவது விடுதலைத் திருநாள் கொண்டாட்டம். இதனை பாஜக கொண்டாடுவதோடு பொருத்திப் பார்க்க வேண்டும். விடுதலைப் பெற்ற பிறகு முதலாளித்துவ திசைவழி வளர்ச்சியால் சமத்துவமற்ற நிலையில் மக்களின் வாழ்க்கை நிலை உள்ளது. ஏற்றத்தாழ்வு தற்போது மேலும் விரிவடைந்து வரும் நிலையில் பாரதியின் பொதுவுடைமை கருத்துகளை நாம் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

விடுதலை இயக்கத்தில் பாரதி தனது பாடல்கள் மூலம் மக்களைத் தட்டி எழுப்பியதோடு சமயச் சண்டைகள், பெண்ணடிமை, பெண் விடுதலை, கல்வி, மனிதநேயம் என்று தனது பார்வையைச் செலுத்தியுள்ளார். இதை அவரது பாடல்கள் மூலம் அறியலாம்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்று சுதந்திரப்பள்ளு பாடியுள்ளார். சமுக மறுமலர்ச்சியைக் காண விரும்பிய பாரதி, வளங்களும், விளைச்சலும் அனைவருக்கும் பொதுவானவை, ஒரு சிலர் சொத்துக்களைக் குவித்துக் கொண்டு எங்கள் உடைமை என்று கூறி உழைக்கும் மக்களைப் பசியிலும், பஞ்சத்திலும் தவிக்கவிடுவதைக் கண்டு வேதனையுற்றார்.

இல்லாமை மிகக் கொடியது என்பதை உணர்ந்து, “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் – இனியொரு விதி செய்வோம் தனியொருவனுக்கு உணவில்லையெனில்-ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடுவதன் மூலம் வளங்கள் பொதுவுடைமையாக்கப்பட்டு அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று முழங்கினார்.

பொதுவுடைமை சமுதாயம் மலர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரான்சு, ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி போன்று இந்தியாவிலும் புரட்சி ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தோடு 1917ல் நடந்த ரஷ்யப் புரட்சியைப் பார்த்து “ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்று பாடினார். ரஷ்யப் புரட்சியைப் பாடிய முதல் இந்தியக் கவிஞர் பாரதியே!

பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற, வளமான சமுதாயம் வேண்டும் என்று விரும்பிய பாரதி, “எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்தியமக்கள். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பாடினார்; பொதுவுடைமை சமுதாயம் மலர வேண்டும் என விரும்பினார். “முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை” என முரசறைந்தார்.

ரஷ்யப் புரட்சி ஏனைய ஆசிய நாடுகளிலும் எதிரொலிக்கும் என்ற தீர்க்கமான தரிசனம் கொண்டவர் பாரதி. எனவே, பாரத சமுதாயம் பொதுவுடைமை சமுதாயமாக மலர வேண்டும் எனப் பாடியதில் வியப்பேது!

அடிமைத்தனம், ஏழ்மை, ஏற்றத்தாழ்வு ஆகியவை இல்லாத, பொதுவுடைமைச் சமுதாயம் அமைவதற்கு மக்கள் மனதில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்படும் சமுதாயம் பொருளாதார சமத்துவம் உடையதாக, ” ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே! வாழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே! ” இருந்திட வேண்டும் என்று பாரதி தனது பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். இது பாரதியின் பொதுவுடைமை பார்வையை உறுதிப்படுத்தியுள்ளது.

கம்பனுக்குப் பின் தமிழ் மக்களுக்கு உணர்ச்சியாற்றல், கற்பனையாற்றல், ரசனையாற்றல் முதலிய சிறப்பு வாய்ந்த கவித்துவ அம்சங்கள் நிரம்பப் பெற்ற மகாகவி பாரதி! சாதி மதங்களைப் பாரோம் வேதியரும் ஈனச்சாதியரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் என்றவர் வாழ்வும் வீழ்வும் முப்பது கோடி முழுமைக்கும் பொது என்று கர்ஜித்தான்.

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?”

என்று இந்நாட்டோரும் எந்நாட்டோரும் என்றும் கடைப்பிடிக்க வேண்டிய மனித மந்திரத்தை எடுத்தோதினான்.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய ஆளுமை பாரதி – நமது தேசத்தின் குரல்! அந்நியருக்கு அடிமைப்பட்டும், உள்நாட்டில் ஒடுக்கப்பட்டும் தவித்த மக்களின் குரல்! பொதுவுடைமை, புரட்சி போன்ற சொற்செல்வங்களைத் தமிழுக்குச் சேர்த்தவர்.

ஐரோப்பிய நாகரீகத்தின் இன்னுமொரு பகுதியான நவீன ருஷ்யாவில் ஆண், பெண் சம உரிமை எனும் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறுகின்றானே தவிர, ஐரோப்பாவின் முதலாளித்துவ நாடுகளில், பெண்கள் விடுதலைப் பெற்றதாக பாரதி கருதவில்லை. இதுவும், பொதுவுடைமை கொள்கையின் மீது பாரதி கொண்டிருந்த பிடிப்பை எடுத்துக்காட்டுகிறது.

“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுற குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார் “

எனக் கூறியதன் மூலம் பாரதியின் பொதுவுடைமை கொள்கைப் பிடிப்பு தெளிவாகின்றது.

பாரதியின் ‘செல்வம்’ என்ற கட்டுரையில், லெனின், மிந்த்ரோஸ்கி ஆகியோர் அதிகாரத்தின் கீழ் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனி, துருக்கியிலும் வலுபெற்று வருகின்றது. வடஆசியாவில் சைபீரியா ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை வலுவடைந்துள்ளது. பிரான்சு, இங்கிலாந்து நாடுகளிலும் பரவி விடும் என பயந்து அவர்கள் அதை தடுக்க முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சுரண்டல் அதிகரித்துள்ள தனிவுடைமை சமூக கட்டமைப்பு தற்போதைய வலதுசாரி பாசிச ஆட்சியில் வேகமெடுத்து உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லை என்று கேட்போரிடம் கடவுளின் பெயரைச் சொல்லி முன்வினைச் செயல் என்று உழைக்கும் மக்களிடையே புளுகு மூட்டையை கட்டவிழ்த்துவிடும் பாசிச மதவாத சிந்தனையை முறியடிக்க பாரதியின் பொதுவுடைமைப் பாடல்கள்
நமக்கான ஆயுதம்!

பாரதியின் நினைவு நூற்றாண்டு நிறைவின் முழக்கமாக, பொதுவுடைமைக் கருத்துகள் நிறைந்த அவரது பாடல்களை, உழைக்கும் மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு சேர்ப்போம். பாரதி பாடிய யுகப் புரட்சி இந்தியாவில் சாத்தியமாகக் களம் அமைப்போம்! இளைஞர்களை வீறுகொள்ளச் செய்வோம்! பொதுவுடைமை கருத்துக்களை வலுப்படுத்துவோம்!

நிறைவாக, மார்க்சியப் பேராசான் தோழர் ஜீவா, பாரதியைப் பற்றி , “தமிழ் சான்றோர்கள், பாரத நாட்டு முனிவர்கள், மேலை நாட்டு நவீன அரசியல் சமுதாயப் புலவர்கள், இவர்களின் சமூகக் கண்ணோட்டம் என்ன என்பதை பாரதி நன்றிந்தவன். நம் நாட்டுப் பண்புக்கு பங்கம் வராமல் புத்தம் புதிய கருத்துக்களின் தேவையைப் புறக்கணிக்காமல், இன்றைய நமது சமுதாயத்தின் அதள பாதாள நிலையைக் கல்லும் கனிந்துருக பாரதி பாடியிருக்கிறான் என்று கூறியதையும், பாரத சமுதாயப் பாட்டு பாரதி பாடிய இறுதிப்பாட்டு.. பாரதியின் முதிர்ந்த அரசியல் சமுதாய தத்துவ ஞானச்சாரம் நிறைந்த பாட்டு… இதில் பாரத சமுதாயம் பொதுவுடைமை சமுதாயமாக, உலகுக்கொரு புதிய சமுதாயமாக பாரதி காண்கிறான்.” என்று கூறுகிறார்.

வாழ்க பாரதி புகழ்! வளர்க அவரின் பொதுவுடைமைக் கருத்துக்கள்!

தொடர்புக்கு – 76039 30397

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button