தமிழகம்

ஏஐடியுசி தமிழ்நாடு மாநில மாநாடு – திருநெல்வேலி – டிசம்பர் 1, 2, 3 : ஏஐடியுசி மாநில பொதுக்குழு தீர்மானம்

ஏஐடியுசி மாநில பொதுக்குழு கூட்டம் தருமபுரி அதியமான் அரண்மனையில் ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் ஏஐடியுசி மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் டி எம் மூர்த்தி வேலை அறிக்கை வைத்தார்.

தேசிய செயலாளர் வகிதா நிஜாம், மாநிலத் துணைத் தலைவர்கள் ஏ.எஸ்.கண்ணன் முன்னாள் எம்எல்ஏ, வேலூர் எஸ்.ஆர்.தேவதாஸ், திருப்பூர் என்.சேகர், கோவை என் செல்வராஜ், கல்பாக்கம் எம் சங்கையா, துணைப் பொதுச் செயலாளர் கே இரவி, செயலாளர்கள் எஸ் காசி விஸ்வநாதன், நா.பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ, எஸ் சந்திரகுமார், எம் ராதாகிருஷ்ணன், எஸ் சின்னச்சாமி, எம் ஆறுமுகம் முன்னாள் எம்எல்ஏ, பொருளாளர் பீட்டர் துரைராஜ் உள்ளிட்ட 116 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

  1. தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம்:

கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மீது தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதனால், ஒன்றிய அரசை நடத்திவரும் பாஜக-வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். அந்தக் கொள்கைகளுக்கு மாறாக, தமிழ்நாடு அரசு தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து, 2022 செப்டம்பர் 13ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், தொழில் மையங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

கோரிக்கைகள்:

  1. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 21,000 என சட்டப்படி அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உள்ளாட்சி, மருத்துவத்துறை, ஆஷா, கூட்டுறவு, டாஸ்மாக், பொதுத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 21,000 ஊதியமாக வழங்க வேண்டும்.
  2. தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் துறைகளில், தொழிற்சாலைகள் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் நிரந்தர தன்மை கொண்ட பணியிடங்களில் கேஷுவல், காண்ட்ராக்ட், அவுட் சோர்ஸிங் உள்ளிட்ட பெயர்களில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஊதியத்தையும் சமூக பாதுகாப்பையும் இடைத்தரகர்கள் சுரண்டிக் கொழுக்கவுமே இந்த ஒப்பந்த முறை வழி வகுக்கிறது. எனவே, ஒப்பந்த முறைமையை ஒழிக்க வேண்டும். 240 நாள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும்.
  3. மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செங்குத்தாக உயர்த்தியுள்ளதைக் கைவிட வேண்டும்.
  4. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகர் பொருள் வாணிப கழகம், மின்வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு பொது நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
  5. ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை எதிர்த்து, ரத்து வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநில விதிகளை நிறைவேற்ற மறுக்க வேண்டும்.
  6. கட்டுமான, உடல் உழைப்பு நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். நலவாரியத்தில் இருந்து மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

2. இந்திய கம்யூனிஸ்ட் மறியலுக்கு ஆதரவு:

மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்ய கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழ்நாடு முழுமையிலும் நடத்தும் மறியல் போராட்டத்தை ஏஐடியுசி ஆதரிக்கிறது. அதில் பங்கேற்பது என முடிவு செய்கிறது.

3. மாநில மாநாடு:

ஏஐடியுசி-ன் தமிழ்நாடு மாநில மாநாட்டை 2022 டிசம்பர் 1,2, 3 தேதிகளில் திருநெல்வேலியில் நடத்துவது என பொதுக்குழு கூட்டம் முடிவு செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button