உள்ளூர் செய்திகள்

பொங்கல் சிறப்பு தொகுப்பில்  தேங்காய்களையும் சேர்த்து வழங்க வேண்டும்

முதலமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்..

உழவர் திருநாளே பொங்கல் திருநாளாகும். அந்நாட்களில் விவசாயிகள்.. தாங்கள் விளைவித்த புத்தரிசி, சர்க்கரை, தேங்காய், கரும்பு, மஞ்சள், இஞ்சி,  காய்கறிகள் மற்றும் பூக்களை கொண்டு தனது குடும்ப விழாவாக, மனம் ஒருமையுடன், தன் உறவுகளுடன் ஒருங்கே இணைந்து கொண்டாடுவதே பொங்கல் என்பது தாங்கள் அறிந்ததே.‌ அவர்கள் விளைவித்த விளைபொருள்களுக்கு  உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே தாங்கள் தொடர்ந்து பொங்கல் சிறப்பு திட்டம் என்பதை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறீர்கள்.

இந்த நிலையில் பொங்கலிடுவதில் அடிப்படை பொருட்களில் ஒன்றான தேங்காய்களையும் இதில் சேர்த்து கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கடந்த இரு ஆண்டுகளாக தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காது போராடி வருவதை தாங்கள் அறிந்த நிலையில் தான் வழக்கமான இலக்கில் விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதலை தங்கள் அரசு செய்து முடித்தபின்.. மேலும் கொப்பரை கொள்முதலை  நீட்டித்தால் தான் தென்னை விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றதுடன்.. ஒன்றிய ஆட்சியாளர்களிடம் நிலைமைகளை வலியுறுத்தி, மேலும் கொப்பரை கொள்முதலை 56000 டன்னிலிருந்து இருந்து 90000 டன்னாக உயர்த்தி கொள்முதல் செய்து அதுவும் 26-11-2023 உடன் முடிந்துள்ளது.

விளையும் தேங்காய்களின் அளவிற்கு, இக்கொள்முதல் இலக்கு ஈடு செய்யாது என தாங்கள் அறிவீர்கள்.

இதுவரை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளையும்,  வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வெளிச்சந்தையில்  கொப்பரை விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு தேங்காய்களாக கொள்முதல் செய்தால் தான் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

எனவே பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு தேங்காய்களை கொடுத்திட தமிழ்நாடு  அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று பி.எஸ்.மாசிலாமணி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button