கட்டுரைகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன நாள்: கட்சியின் முன் உள்ள சவால்கள் மற்றும் பணிகள்

டி. ராஜா

1925 டிசம்பர் 26 – இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு காலனி என்ற நிலையில் இருந்து சுதந்திரம் பெற்ற ஒரு ஜனநாயக குடியரசு என்ற நமது நாட்டின் நீண்ட பயணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நாள்! அந்நாளில் தான், தாய்த்திருநாட்டின் பற்றுறுதி கொண்ட புரட்சியாளர்கள் சிலர் கான்பூர் நகரில் ஒன்று கூடினர்; நமது நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்தனர். 1925 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாடு, தேசம் முழுவதிலும் இருந்த, பொதுவான இலட்சியம் கொண்ட, பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களையும், புரட்சியாளர்களையும் சங்கமிக்கச் செய்தது.

ரஷ்ய புரட்சி மற்றும் தொழிலாளர்களின் அரசை நிறுவுவதில் அது பெற்ற மகத்தான வெற்றியின் விளைவாக, உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் மீதான பற்று பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. ரஷ்ய புரட்சி இந்தியா மீது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தாக்கத்தைக் கொண்டிருந்தது. தங்கள் நாடு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்தும், சுரண்டலில் இருந்தும் விடுதலையடைய வேண்டும் என்று விரும்பிய எண்ணற்ற கம்யூனிஸ்டுகளை, காலனிகள் குறித்த கம்யூனிஸ்டு அகிலத்தின் கொள்கை ஈர்த்தது. மார்க்சியம் எனும் மாபெரும் சித்தாந்தத்தாலும், ரஷ்ய புரட்சியின் உயர்ந்த இலட்சியங்களாலும், நமது நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட சமத்துவத்திற்கான பணிகளாலும் உத்வேகம் பெற்ற இளம் கம்யூனிஸ்ட் கட்சி, வெகு விரைவில், தேச விடுதலைப் போராட்டத்திலும், சோஷலிச சமுதாய நிர்மாணத்திற்கான போராட்டத்திலும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தது.

கம்யூனிஸ்டுகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. எனவே, தவழும் பருவத்திலேயே, கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்திட, அனைத்து வகையிலும் முயன்றது. இந்திய மக்களிடையே பரவிக் கொண்டிருந்த புரட்சிக்கனலை அணைத்திட, தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு எதிராகப் பல்வேறு சதிவழக்குகள் தொடுக்கப்பட்டன. நமது முன்னோடிகளின் மனவுறுதி மற்றும் துணிவைப் பிரிட்டிஷாரால் வெற்றிகொள்ள இயலவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் பிரிட்டிஷாரை வீரத்துடன் எதிர்த்துப் போராடினர்; ஒரு புரட்சிகர செயல்திட்டத்தின் அடிப்படையில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை அணிதிரட்டினார்கள்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய போதும், மன்னர்கள் மற்றும் ஜமீன்தாரர்கள் போன்ற உள்நாட்டு சுரண்டல் பேர்வழிகள், பாகுபாடு கொண்டோரை எதிர்த்துப் போராடிய போதும், கம்யூனிஸ்டுகள் புரிந்த மகா உன்னதமான தியாகங்கள், நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தினுடைய மகத்தான வரலாற்றின் ஒரு பகுதியாகும். சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பானது, அந்தப் போராட்டத்தின் செயல்திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. கம்யூனிஸ்டுகள் நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்; வென்றெடுத்தார்கள். பரிபூரண சுதந்திரத்திற்கான கோரிக்கை முதல் நிலவுடைமை ஒழிப்பு கோரிக்கை வரை, கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்பு வருங்கால இந்திய குடியரசின் செயல்திட்டத்தை மேலும் மக்கள் நலன் சார்ந்ததாக, சமத்துவம் நிறைந்ததாகச் செய்தது.

இத்தகு மாபெரும் பாரம்பரியத்தையும், பலத்தையும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், தற்போது தேர்தல் களத்தில் தளர்ச்சியடைந்து இருப்பதைக் காண்கிறோம். நமது கட்சியும், அமைப்பு ரீதியான கம்யூனிஸ்ட் இயக்கமும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டை நிறைவு செய்யவுள்ள இந்தச் சூழலில், இந்தப் பிரச்சனை குறித்து நாம் ஆழ்ந்து சிந்தித்து, ஒரு புத்துயிர் பெற்ற சக்தியாக மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.

தேர்தல் பின்னடைவுகளுக்கான காரணிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட வேண்டும். மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் பொருத்தப்பாடு உலகில் அதிகரித்து வருவதை நாம் தெளிவாக உணர்ந்திட வேண்டும். பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வரும் நவீன-தாராளமய கொள்கைகள் மக்களை, இருப்போர் மற்றும் இல்லாதோர் என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளது. செல்வ வளங்களின் குவிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகரித்துள்ளது. நவீன-தாராளமய தனிமனித கோட்பாடு ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் அனைத்து தலைமுறையினரையும் பிடித்து உலுக்குகிறது. இயற்கையின் இயங்கியலைப் புரிந்து கொள்வதில் தோல்வியுற்ற முதலாளித்துவத்தின் விளைவாக உண்டான காலநிலை மாற்ற நெருக்கடியானது உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்தி வருகிறது. எங்கெல்லாம், இடதுசாரிகள் இந்தப் பிரச்சனைகளை முன்னெடுத்தார்களோ, அங்கெல்லாம், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில், அவர்களின் ஆதரவுத் தளங்கள் பன்மடங்கு பெருகி இருக்கிறது. ஆகையினால், இடதுசாரிகள் சரிவடைந்துவிட்டார்கள் என்று கூறுவது தவறாகும்.

இந்தியாவில், சோஷலிச கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை தன்பால் ஈர்த்துக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் ஏதோ ஒரு வகைப்பட்ட சோஷலிசத்தைக் கூறிவருகிறது. சமுதாயத்தின் பல்வேறு பிரிவு மக்களிடையே இடதுசாரிகள் கொண்டிருக்கும் செல்வாக்கும், அவர்களின் தேர்தல் வெற்றிகளும் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் பண பலம் மற்றும் வன்முறை ஆகியவற்றின் அதிகரித்து வரும் பாத்திரம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவழித்து முதலாளித்துவ கட்சிகள் செய்து வரும் தேர்தல் பணிகள் கற்பனைக்கும் எட்டாத விலையுயர்ந்த காரியமாகிவிட்டது. இது தேர்தல் பணிகள் மீதான கட்டுப்பாட்டை கார்ப்பரேட் நிறுவங்களிடம் அளிப்பதாக இருக்கிறது.

சமுதாயத்தில் மையப்படுத்துதல் (Polarization) என்பது அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. அதனைத் தூண்டிவிடும் அவப்பெயருக்கு ஊடகங்கள் உள்ளாகியுள்ளன. தகவல் தருவது மற்றும் பெறுவதிலும் கூட, சமதள பண்பு சிதைக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களிடையே, அவர்களின் பொருளாதார நலன்களைக் காட்டிலும், வகுப்புவாத, பாசிச மற்றும் பிரிவினைவாத செயல்திட்டமே அதிகமாகத் திணிக்கப்படுகிறது. அழிவுகரமான நவீன-தாராளமய பொருளாதார கொள்கைகைகளினால் ஏற்பட்டுள்ள விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை மற்றும் இதர வாழ்வாதார பிரச்சனைகளால் பொதுமக்கள் அல்லலுற்று வருகிறார்கள். இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள், கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்களால் மறைக்கப்படுகிறது. பதிவான வாக்குகளில் அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படும் தற்போதைய தேர்தல் முறை பாரபட்சம் உடையதாகும். குதிரை பேரமும், மத்திய அரசாங்கத்தின் முகமைகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேர்தல் ஜனநாயக முறையை ஸ்திரத்தன்மையற்றதாக்கி, அழித்தொழிப்பது தான் தற்போது பரவலாகி வருகிறது.

அரசியல் வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாக்கு என்பது உண்டு. ஆனால், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மதிப்பு என்பது இல்லை எனும் டாக்டர் அம்பேத்கரின் கூற்றை விரிவான தேர்தல் சீர்திருத்தம் இல்லாத நிலை உறுதிப்படுத்துகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்த பிரச்சனை தொடர்கிறது.

இத்தகையதொரு சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரி கட்சிகள், தேர்தல் களத்திலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிடும் அளவிற்குத் தங்களின் உத்திகளைப் புனரமைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் கோரிக்கைகளை நாம் எழுப்பும் போது போராட்டக் களத்தில் உண்டாகும் பெருந்திரள் பங்கேற்பு தேர்தல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும். அதற்கு, சமகாலத்தின் முக்கியத்துவம் நிறைந்த பிரச்சனைகளை நாம் எழுப்பும் போது, இந்திய சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். நமது போராட்டங்கள் வர்க்க, சாதிய மற்றும் பாலின எதார்த்தங்களை கருத்தில் கொண்டு, சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் ஆணாதிக்க கட்டமைப்புகளை உடைத்தெறிய முயல வேண்டும்.

சமுதாயத்தில் இடதுசாரிகள் பெற்றிருக்கும் செல்வாக்கிற்கு இணையான தேர்தல் வெற்றிகளைப் பெற்றிட, பிரச்சனைகளுக்கான நீடித்த வெகுமக்கள் இயக்கமும், தேர்ந்த தேர்தல் கூட்டும் வித்திடும். தேர்தலில் இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், கம்யூனிசம் தான் அழிவுகரமான சித்தாந்தம் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிவைத்துத் தாக்குகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளின் செயல்திட்டமும், ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டமும் ஒன்றுக்கொன்று நேரெதிராக முரண்பட்டு நிற்கின்றன. கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் க்கு எதிரான தத்துவார்த்த மாற்றை வழங்க முடியும். ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிரதமர் இதனை நன்குணர்ந்தவர் என்பதால், கம்யூனிஸ்டுகளை இகழ்ந்துரைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவர் நழுவவிடுவதில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட ஆண்டான அதே 1925 -ல் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நிறுவப்பட்டது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மூலமாக அரசியல் அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன், இந்து தேசம் எனும் அதன் வகுப்புவாத, பாசிச செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் அணி மூர்க்கத்தனமாக முயலுகிறது. கார்ப்பரேட் வகுப்புவாத பாசிசம் தேசத்தின் ஒற்றுமை மற்றும் பன்மைத்துவத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அரசியலமைப்பையும், மதச்சார்பற்ற கட்டமைப்பையும் தகர்த்தெறியத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் -ன் அபாயகரமான சூழ்ச்சிகளுக்கு எதிரானதொரு நீடித்த, அரசியல், தத்துவார்த்த மற்றும் சமூக எதிர்ப்பு/சவால் என்பது கம்யூனிஸ்டுகளிடம் இருந்து மட்டுமே வெடித்தெழ முடியும். நமது கட்சியை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதன் மூலம் நாம் இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும். கட்சியின் தற்போதுள்ள தளங்களை ஒருங்கிணைப்பது, புதிய தளங்களுக்குக் கட்சியை விரிவுபடுத்துவது ஆகியவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களை அரசியல்படுத்துவதற்கான அமைப்புரீதியிலான தத்துவார்த்த கல்வியைக் கட்சி தொடர்ந்திட வேண்டும். இந்தியக் குடியரசைப் பாதுகாத்திடும் போராட்டத்தைத் தீவிரப்படுத்திட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் வலுப்பெற வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்திடவும், இடதுசாரி ஒற்றுமையை மேலும் ஒருங்கிணைக்கவும் , ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றிட ஜனநாயக, முற்போக்கு சக்திகளைக் கொண்ட பரந்துபட்ட அணியை உருவாக்கிடவும், வாழ்வாதார பிரச்சனைகளுக்கான வெகுமக்கள் இயக்கங்களைத் தீவிரப்படுத்தவும், சோஷலிசத்தை நோக்கிய சமூக மாற்றத்திற்கான நமது தீவிரமான செயல்திட்டத்தை முன்னெடுக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது பேராயம் அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழில் – அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button