உள்ளூர் செய்திகள்

இது குஜராத்தா? தமிழ் நாடா?

பெரம்பலூர் எம்ஆர்எப் வாயிற்கூட்டம்

பெரம்பலூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு, ஏஐடியுசி உடன் இணைக்கப்பட்ட எம்ஆர்எப் தொழிலாளர் சங்கத்தின் வாயிற் கூட்டமும், கொடியேற்று விழாவும் 22.8.2023 அன்று நடத்தப்பட இருந்தன.

கொடிமரம் ஊன்ற இடம் பார்த்தபோதே ஹைவே பாட்ரோல் காவல்துறையினர் வந்து, இங்கு கொடி ஊன்றக் கூடாது என்று தடுத்தார்கள். நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகளிடம் எல்லாம் அனுமதி பெற்றாக வேண்டும் என்று அச்சுறுத்தினர்.

காவல்துறைக்கு 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பம் தந்தாகிவிட்டது. ஆனால் அனுமதி மட்டும் தரவில்லை. சங்கத்தின் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான தோழர் ஞானசேகரனோடு சங்க நிர்வாகிகள் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து நேரடியாக முறையிட்டனர். கொடியேற்ற கொடி மரம் நடுவதற்கு உரிய இடத்தில் அனுமதி பெறுங்கள். மற்றபடி வாயிற் கூட்டத்தை சாமியானா பந்தல், ஒலிபெருக்கி வைத்து நடத்திக் கொள்ளுங்கள் என்று மாவட்ட கண்காணிப்பாளர் கூறி வழி அனுப்பி வைத்தார்.

ஆனால் ஆலத்தூர் வட்டாட்சியர் சங்கத்தினரை அழைத்து, அந்தப் பகுதியில் இந்திய சட்ட தண்டனைச் சட்டத்தின் கீழ் 107வது பிரிவு உத்தரவு அமுல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், கொடியேற்றவோ கூட்டம் போடவோ கூடாது என்றும், 22 ஆம் தேதி மாலை தன் முன்னே அமைதி கூட்டத்திற்கு வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ‘ஆணை’யிட்டார்.

107 ஆவது பிரிவு என்பது தவறான அல்லது சட்ட விரோதமான செயலை செய்வது, அதற்கு ஊக்கமளிப்பது, அதற்குத் துணை நின்று ஆதரிப்பது ஆகிய குற்றங்களைத் தடுப்பது ஆகும்.

தொழிற்சங்க சட்டப்படி தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை பதிவு செய்து தந்த தொழிற்சங்கம், அது இயங்கும் தொழிற்சாலை முன்பு கூட்டம் நடத்துவது என்ன தவறான செயல் அல்லது சட்ட விரோத நடவடிக்கை என்று எதைக் கொண்டு அந்த வட்டாட்சியர் முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை.

அச்சுத்தல்களுக்கெல்லாம் அடிபணியாது, தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டனர். நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலை நிர்வாகம் பெரிய பெரிய இரும்பு கர்டர் தூண்களைக் கொண்டு வந்து போட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் தொழிற்சாலைக்கு வெளியே நெடுஞ்சாலையில் அவர்களே தடுப்பரண்கள் அமைத்திருந்தார்கள். ஓரமாய் கொடிமரம் ஊன்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி வேண்டும் என்று கொக்கரித்த ஹைவே பாட்ரோல் காவல்துறையினர் இந்த அநியாயத்தை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று போகும் என்று கருதும் நிலைக்கு அவ்வளவு பெரிய எம்ஆர்எப் நிர்வாகம் வந்தது தான் வேடிக்கை.

காவல்துறை புடை சூழ. வாயிற் கூட்டம் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஏ ஐ டி யு சி தேசிய குழு உறுப்பினர் நடராஜா, திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் கே சுரேஷ், அரியலூர் மாவட்ட பொதுச் செயலாளர் டி தண்டபாணி, பெரம்பலூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயராமன், போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுச் செயலாளர் கே சுப்பிரமணியன், பிஎச்இஎல் ஏஐடியுசி சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார்.

நிறைவாக எஐடியுசி தேசிய செயலாளர் டி எம் மூர்த்தி விளக்க உரையாற்றினார்.

“இவ்வளவு ஆள், அம்பு, சேனையோடு ஒரு சாதாரண வாயில் கூட்டத்தை தடுப்பதற்கு மாநில அரசின் நெடுஞ்சாலை, வருவாய், காவல்துறை அனைத்தும் சேர்ந்து இவ்வளவு முனைப்பு காட்டுவதன் அவசியம் என்ன?

நாங்குநேரியில் நன்றாக படித்தார் என்று ஆசிரியரிடம் பாராட்டு வாங்கிய ஒரே குற்றத்திற்காக, வீட்டுக்குள்ளே வைத்து வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட மாணவன் சின்னதுரையும் அவரது தங்கையும் காத்துக் கிடந்த போது, ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாகச் சென்ற காவல்துறை, எம்ஆர்எப் தொழிற்சாலை முன்பு கொடிமரம் நடுவதற்கு குழி தோண்டுவதற்கு முன்பே ஓடோடி வருவது ஏன்? நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது குஜராத்தில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.

இங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று சொல்கிறீர்களே? இங்கே நாங்கள் யாரை எதிர்த்து வசைபாடி, தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கிறோம். அல்லது எங்களை அடிக்க வேண்டும் என்று யாரும் இங்கே திரண்டு இருக்கிறார்களா?. நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் வட்டாட்சியர் என்ன அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது?

இங்கு என்ன சாதி, மத கலவரமா நடந்து கொண்டிருக்கிறது. இங்கிருக்கும் எங்களுக்கு ஒவ்வொருவரும் என்ன சாதி என்று தெரியாது. சங்கத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் இந்து, ஒருவர் இஸ்லாமியர், ஒருவர் கிறிஸ்தவர். யாரை அழைத்து எங்களுக்கு எதிராக அமர வைத்து அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த போகிறீர்கள்?

நூறாண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி தியாகிகளின் ரத்தத்தால் நனைந்த இந்தச் செங்கொடியை இன்றைக்கு ஏற்ற விடாமல் நீங்கள் தடுத்திருக்கலாம். ஆனால் அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி இங்கே திரண்டு இருக்கிற இந்த இளைஞர்களின் நெஞ்சில் ஏற்றப்பட்ட கொடியை காவல்துறை அல்ல, இந்திய இராணுவமே வந்தாலும் பறித்து எடுத்து விட முடியாது.

நிர்வாகத்திற்கு வேலை செய்ய நிறைய அலுவலர்கள், பாதுகாவலர்கள் எல்லாம் இருக்கும்போது, அரசு துறையில் இருப்பவரும் அந்த வேலையை ஏன் செய்ய வேண்டும்?

திராவிட மாடல் அரசு என்பது அனைவரும் சமநீதியை, சமூக நீதியை உறுதிப்படுத்துவது. பணம் கொழுத்தவன் பின்னால் நின்று வால் பிடிப்பது அல்ல. அரசின் கொள்கைகளுக்கு மாறாக அரசுத் துறைகளே நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது” என்று அவர் பேசினார்

அதன் பின்பு பெரம்பலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கூட்ட அரங்கில், தொழிற்சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட இயக்கங்களை தீர்மானித்தது.

எதிர்பார்த்ததை போலவே ஆலத்தூர் வட்டாட்சியரிடம் நண்பகல் தாண்டி, எத்தனை மணிக்கு அமைதி கூட்டத்திற்கு வர வேண்டும் என்று கேட்ட போது நிர்வாகம் வர மறுத்துவிட்டது என்று பதில் சொன்னார். படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோன்னு போவான் என்றான் பாரதி. படித்ததோடு அதிகாரத்திலும் இருக்கிற வட்டாட்சியரிடம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் அவர் ஊதியம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை மட்டும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button