இந்தியாகட்டுரைகள்

மிரட்டும் மின்கட்டணம் – மீண்டும் உயர்கிறதா?

ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தால் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதனால், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் வரமாக மின்சாரத்தை மாற்றி விடக் கூடாது.

மிரட்டும் மின்கட்டண உயர்வு – மீண்டும் உயர்கிறதா?

த.லெனின்

ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்ற பராசக்தி திரைப்படத்தின் வசனத்தைப் போல இனி “உஜ்வால் டிஸ்காம் அஸ்யூரன்ஸ் யோஜனா” என்ற உதய் மின்திட்டத்தால் ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வை கண்டு மக்கள் ஓட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து மீண்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் உதய் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.  தான் உயிரோடு இருக்கும் வரை உதய்  மின் திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அவரது ஆன்மாவின் ஆட்சி என்று கூறிக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில், அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சாஷ்டாங்கமாக ஒன்றிய அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்ததின் பலன் தான் இன்று ஒவ்வொரு ஆண்டும் நம்மை மிரட்டுகிற மின்கட்டண உயர்வு!

அப்போதைய மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உதய் மின் திட்டம் மக்களை ஏமாற்றும் திட்டம். இதனை மத்திய அரசு கொண்டு வர காரணம் அந்நிய நாட்டு நிதி நிறுவனங்கள் கொடுத்த நிர்ப்பந்தமே ஆகும் என்றார். ஆனால் பின்பு அதே அண்ணா திமுக ஆட்சி இதனை முழுமையாக ஏன் ஏற்றுக் கொண்டது என்பது அவர்களுக்கு வெளிச்சம்?

கரியமில வாயு வெளியேற்றத்தை தடுப்பதற்கு பல்வேறு முறைகளை கையாண்டு நிலக்கரிக்கு செஸ் வரி விதிக்கப்பட்டது. ஒரு டன் நிலக்கரி 51.50 ரூபாய் என்ற விலையில் இருந்த நிலையில், மோடியின் பாஜக ஆட்சி ரூபாய் 400 க்கு உயர்த்தியது பின்பு 500 ரூபாய்க்கு உயர்த்தியது. இந்த வழியில் பார்த்தால் ஒரு டன் நிலக்கரியில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான செலவு ஒரு யூனிட்டுக்கு 2.10 ரூபாயாக அதிகரித்தது. இதனால் கடந்த 2014 -15 ஆம் ஆண்டில் வல்லூர் தேசிய அனல் மின் கழகத்திற்கு ஆன செலவு ரூபாய் 2756 கோடி.  இந்த வகையில் நிலுவைச் செலவு ரூபாய் 1660 கோடி. இதர செலவு நட்டம் 274 கோடி ஆகும்.
மின்வாரிய சீர் திருத்தங்கள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுத்ததை தொடர்ந்து, ரூ. 4.3 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டது. இதற்காக கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நட்டத்தை சரிகட்ட ரூ. 2.3 லட்சம் கோடி மாநிலங்களுக்கு மீட்சி நிதி அளிக்கப்படும் என்றது. ஆனால் இப்போது அப்படி எதுவும் அளிக்கப்படாமல் மொத்த மின்வாரிய கடனில் 75% உதய் ஏற்றுக் கொள்ளும் என்றும், மீதி உள்ளவற்றை மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வாயால் வடை சுட்டது. இதனை காரணம் காட்டி தான் மக்களுக்கான மின் கட்டணம் உயராது என்று கூறி கடந்த அண்ணா திமுக அரசு இத்திட்டத்தில் இணைந்தது.

உதய் திட்டம் கொண்டுவர சொல்லப்பட்ட காரணங்கள் கணக்கில் அடங்கா. இது மின் பகிர்மானத்தை இந்திய அளவில் சமச்சீராக அளிக்க ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டம். இதன் மூலம் மின்னாக்க விலையை குறைக்கவும் முடியும். மின் வழங்கலில் ஏற்படும் சுமையை குறைக்கவும் பயன்படும். உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் வெறும் ஆசை வார்த்தைகளை அளித்தது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு நினைத்தால் கூட இனி மின் உற்பத்தியில் ஈடுபட இயலாது. தனியாரிடம் தான் மின்சாரம் கொள்முதல் செய்தாக வேண்டும் என்பதே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம்.

மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனைத்தையும் வாரி வழங்கும் இந்த முயற்சியில் முதலில் பலியானது ஒன்றிய அரசின் நேரடி ஆட்சி மாநிலங்களாகும். எனவேதான், புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரும் போராட்டங்களை அம்மாநில மின்சார ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து நடத்தினார்கள்.

திமுக அரசு பதவி ஏற்ற பிறகு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்ததாக மின்துறை அமைச்சர் தெரிவித்தார். அத்தோடு தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மானியத்தையும் இனி தர இயலாது என்று கைவிரித்து விட்டனர். இந்த காரணத்திற்காகத்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண உயர்வுகளை அறிவித்தது. அதன்படி 400 யூனிட் வரை 4.50 ரூபாய் என்றும், 401-500 வரை 6 ரூபாய், 501 -600 வரை 8ரூபாய் என்றும், 601 – 800 யூனிட் வரை 9ரூபாய் என்றும், 801 – 1000 வரை 10ரூபாய் என்றும், 1001க்கு மேல் ரூபாய் 11 என்றும்  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது மக்களுக்கு மேலும் ஒரு சுமை. எனவே இதனை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.

உதய் திட்டப் படி ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு அதாவது, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விலை குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு, அல்லது 6%  இவற்றில் எது குறைவோ அதன்படி மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜூலை 2023 மாதத்தை பொறுத்தவரை 2022 ஏப்ரல் 1 விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையில் கணக்கிட்டால் 4.7 சதம் கட்டண உயர்வு உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 2.52% வீட்டு இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதால், மீதி உள்ள 2.18% வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்கும் என்றும், அதனை மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது சிறப்பானதுதான். ஆனால், வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 13 பைசாவிலிருந்து 21 பைசா வரை உயர்த்தி இருப்பது  ஏற்க முடியாதது. தமிழ்நாட்டில் ஏராளமான ஜவுளி மறுசுழற்சி ஆலைகள் உள்ளன. ஒட்டுமொத்த நாட்டில் உள்ள இந்த வகை ஆலைகளில் 47% தமிழ்நாட்டில்தான் உள்ளது. இந்த மின்கட்டண உயர்வால் ஆலைகள் அனைத்தும் அழிந்து விடும் என்கிறார்கள்.

ஏற்கனவே பண வீக்கத்தால் பல்வேறு கட்டண உயர்வுகளை மக்கள் சந்தித்துவரும் நிலையில், இம்மின்கட்டண உயர்வும் மக்கள் தலையில் விழும். எனவே தமிழ்நாடு அரசு மக்களை அணிதிரட்டி ஒன்றிய அரசின் இந்த நிர்பந்தங்களுக்கும், மிரட்டல்களுக்கும் எதிராகப் போராடுவதுதான் ஒரே வழி என்பதை உணர வேண்டும். எப்படி நீட்டுக்கு எதிராக, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து தமிழக அரசு போராடி வருகிறதோ, அதே வழியில் இதனையும் மேற்கொண்டால்தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசின் உதய் நிறுவனம் நெரிசல் நேர கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை, இரவு ஆறு மணி முதல் 10:00 மணி வரை 10 லிருந்து 20% கட்டண உயர்வு இருக்கும் என்றும், மற்ற நேரங்களில் கட்டணம் குறைவாக இருக்கும் என்றும், மீண்டும் ஒரு சதிகார திட்டத்தை கொண்டு வருகிறது. இதனை தமிழக அரசு  எதிர்த்தாலும் உறுதியோடு இதை எதிர்ப்பதற்கும் அனைத்து மாநிலங்களையும் இதற்காக அணி திரட்டுவதற்காகவும், திமுகவும், அதன் தலைவரும் முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனுமார் வால் தொடர்ந்து நீண்டதைப் போல  கட்டண உயர்வும் தொடரும் அபாயம் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்த மக்களின் கட்டணச் சுமை அதிகரிக்கும், உற்பத்தி பாதிக்கும் தொழில்கள் முடங்கும், சிறு குறுந் தொழில்கள் மீண்டும் நசியும் நிலையே இதனால் உருவாகும். எனவே தமிழக மக்களை காப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மக்கள் நலன் சார்ந்து எடுத்திட வேண்டும். மின்சாரம் என்பது வளர்ச்சியோடு இணைந்த ஒன்று. 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும்தான். அதற்காக அதனை வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் வரமாக மாற்றி விட முடியாது. மின்சாரத்தை தொட்டால் தான் அதிர்ச்சி அளிக்கும். ஆனால் மின்சார கட்டணத்தை கேட்டாலே அதிர்ச்சி அளிக்கும் நிலைக்கு மக்கள் சென்று விட்டார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு இந்த உலகமய, தனியார்மய, தாராளமய சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல்,  மக்களின் இறையாண்மைக்கு உகந்த வகையில் செயல்பட வேண்டும். இதுவே மக்களின் ஒரே எதிர்பார்ப்பு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button