உள்ளூர் செய்திகள்மாநில செயலாளர்

இதுதான் இலங்கை காட்டும் நல்லெண்ணமா?

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம் வருமாறு:

அலைகடல் மீது தொலையும் வாழ்க்கை -3

போர்க்குணமிக்க தோழர்களே!

நல்லெண்ண அடிப்படையில் நமது நாட்டுக்குச் சொந்தமான, தமிழ்நாடு மாநில எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவை மாநில அரசிடம் கூட கலந்து ஆலோசிக்காமல், கருத்து கேட்காமல், தமிழ்நாட்டு மீனவப் பெருமக்களின் கருத்தறியாமல், தன்னிச்சையாக ஒன்றிய அரசு இலங்கைக்கு தாரைவார்த்தது.

நமக்கு நல்லெண்ணம் இருக்கின்றது. நமது நேச நாடு என்று கூறி பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இலங்கை, நேசத்துடன் நடந்து கொண்டதா? இன்று நடந்து கொள்கிறதா?

சிங்கள அரசு, குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசாட்சியில் இருந்த போது, இலங்கையை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த தமிழ் மக்களை அழித்தொழித்தனர். இனப்படுகொலையை மேற்கொண்டனர்.

போர் நின்றுவிட்டது. எஞ்சிய தமிழர்களில் ஒரு பகுதியினர் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதி தமிழர்கள் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் அகதிகளாக அல்லல்பட்டு வருகின்றனர். தங்களின் தாய் நாட்டுக்குச் சென்று வாழ முடியாத அவலத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியுரிமை அற்றவர்களாக, அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டு மீனவர்களையும் அவர்களின் படகு மற்றும் தொழிலுக்குரிய வலைகளையும் பறிமுதல் செய்து பாழ்படுத்தி வந்த இலங்கை கடற்படை, இன்றும் தனது அட்டூழியத்தை, அராஜகத்தை மேற்கொள்வது ஏன்?

நல்லெண்ணம் என்பது நமக்கு மட்டும் தான் சொந்தமா?

இலங்கை நட்பு நாடு என்கிற காரணத்தால், அண்டை நாடு என்கிற காரணத்தால், அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டபோது, இந்தியா தனது ஆதரவுக் கரத்தை நீட்டியது.

இலங்கை மக்கள் இன பேதம் ஏதுமின்றி, ராஜபக்சே அரசுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போர் புரிந்ததைக் கண்டோம்.

வீதிகள் தோறும் போராட்டம் நடைபெற்றது. கட்டுக்கடங்கா போராட்டமாக வெடித்தது. கடல் சீற்றத்தையும் தாண்டி மக்கள் சீற்றம் அடைந்தனர். எரிமலையாய் கொதித்து எழுந்தனர். நாட்டின் எஜமானர்களாகத் திகழ்ந்த ராஜபக்சே சகோதரர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். அண்டை நாடுகளுக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர்.

துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டு, சீருடையுடன் மக்களை முறைத்துப் பார்த்தபடியே,  மிரட்டும் பார்வையுடன் வலம் வரும் ராணுவம் என்ன ஆனது?

இலங்கைத் தமிழ் மக்களை பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள் என்று கூட பார்க்காமல், இரக்கம் காட்டாமல், காக்கை குருவிகளை சுடுவது போன்று சுட்டுத் தள்ளிய சிங்கள ராணுவம் எங்கே போனது?

தடிகொண்டு தாக்கும், துப்பாக்கிகள் கொண்டு சுட்டுப் பொசுக்கும் இலங்கை காவல்துறை எங்கே போனது?

தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படைகளைக் கொண்டு தமிழ் மக்களின் ரத்தம் சுவைத்தவர்கள் எங்கே போனார்கள்?

மக்கள் கொதித்து எழுந்தால்,  எப்படையும் மக்களை வெல்ல முடியாது என்பதற்கு பல நாடுகளின் உதாரணங்கள் உண்டு.  அண்மையில் இலங்கை மக்களின் எழுச்சியையும் கண்டோம்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி அரிசி, பால்,  ரொட்டி என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து,  மக்களின் வாழ்க்கை நிலை கடைக்கோடிக்குச் சென்றது. இலங்கை அரசு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு உள்ளான போது, நமது இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியது. உணவுப் பொருட்கள் மருந்துகள் என பெருமளவிற்கு இலங்கைக்கு அனுப்பியது.

ஒன்றிய அரசு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது மாநிலத்தின் சார்பாக கப்பல் நிரம்ப அரிசி உட்பட உணவுப் பொருட்கள், மருந்துகளை நல்லெண்ண அடிப்படையில் அனுப்பி வைத்தார்.

இலங்கை மக்கள் மீது நமக்கு நிரம்ப நல்லெண்ணம் இருக்கின்றது. நமது அணுகுமுறை வெறுப்புணர்வுடன் இல்லை.

ஆனால், இது நமக்கு மட்டும் தானா? இலங்கை அரசுக்கு அத்தகைய நல்லெண்ணம் வேண்டாமா?  இலங்கை அரசுக்குத் தெரியாமல், இலங்கை அரசுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக இலங்கை கடற்படை செயல்பட்டு வருகின்றதா?

இன்றைக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். படகுகளை பறிமுதல் செய்கின்றனர். மீன் வலைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன ஏன்?

தங்களுடைய தொழில் மீன்பிடிப்பது, இத்தொழிலைத் தவிர்த்து வேறு தொழிலை கடலில் மீனவர்கள் செய்திட இயலுமா?

தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆழ்கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றார்கள்.

கடலில் வாழும் மீன்களில் இந்திய மீன், இலங்கை மீன், பாகிஸ்தான் மீன், சீனா மீன் என்று இல்லை.

கடலில் வாழும் மீன்களுக்கு எந்த நாடும் உணவு அளிக்கவில்லை. எந்த நாடும் தங்களுக்குரிய மீன்கள் என்று சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால், இலங்கை கடற்படை செய்து வருகின்ற அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவ பெருமக்களை சுட்டுத் தள்ளுவது, காயப்படுத்துவது,  இரும்புக் கம்பிகளால் அடிப்பது, தடி கொண்டு தாக்குவது, ‘இந்திய வேசி மகனே’ என எழுதக் கூசும் சொற்களில் கண்டபடி திட்டுவது,  படகில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடியை அவிழ்த்து குண்டியை துடைக்க சொல்லி துன்புறுத்துவது, திருக்கை மீனின் மல வாய்க்குள் புணர்வு கொள்ளச் சொல்லி மகிழ்வது, மீனை முள்ளோடு முழுதாய் வாய்க்குள்  அழுத்தி, ரணமாகி வழியும் ரத்தத்தைக் கண்டு மகிழ்வது, சக மீனவனோடு ஓரினச் சேர்க்கை செய்யச் சொல்லி துன்புறுத்துவது,  தந்தை மகனை தகாத செயல் செய்யச் சொல்லி துப்பாக்கி முனையில் துன்புறுத்துவது, குளிர் பதன பனிக்கட்டிகளில் ஆடையின்றி உருட்டி விடுவது,  கடலுக்குள் தூக்கிப்போட்டு விளையாடுவது, படுக்க வைத்து நெஞ்சில் ஏறி மிதிப்பது, முகத்தில் காரி உமிழ்வது, நமது மீனவர்கள் பிடித்த மீன்களை மட்டுமல்ல, அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், மோதிரங்கள், கைக்கடிகாரங்கள் என அனைத்து உடைமைகளையும் அபகரித்துக் கொள்வது, அவர்கள் இடுப்பில் அணிந்துள்ள அரைஞாண் கயிற்றை அறுத்தெறிவது, நடுக்கடலில் விமானத்திலிருந்து வெடிகுண்டுகளை வீசி படகுகளை உடைப்பது, படகுகளை பறித்துச் செல்வது போன்ற கொடூரங்களை இலங்கை கடற்படையினரும் விமானப் படையினரும் இரக்கமற்ற முறையில் செய்து வருகின்றனர்.  இவைதான் இலங்கை அரசு காட்டும் நல்லெண்ணமா?

ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியக் குடிமகனாக ஏற்க மறுக்கின்றதா? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய பிரஜைகள் இல்லையா?

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்தியக் குடிமகன் ஒருவர் பலியானால், ராணுவம் கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபடும் ஒன்றிய அரசு..

தேசத்தின் எல்லைகளில் ராணுவத்தை நிறுத்தி மக்களைப் பாதுகாக்கும் ஒன்றிய அரசு..

அண்டை நாடுகளில் ஊடுருவலுக்கு எதிராகப் போர் தொடுத்து, எதிரிப் படைகளை எதிர்கொள்வதோடு அகப்பட்டவர்களை சுட்டு வீழ்த்துவதுடன், நமது நாட்டு இராணுவ வீரர்களையும் பலி கொடுத்து, வீரமரணம் எய்திட்ட வீரர்களை அழகான பெட்டியில் வைத்து, விமானத்தில் சொந்த ஊருக்கு இராணுவ வீரர்களுடன் அனுப்பி வைத்து, இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யும் ஒன்றிய அரசு..

இலங்கை என்ற இன்னொரு நாடு, நமது நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?  (தொடரும்)

தோழமைமிக்க,

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

(ஜனசக்தி – 2023 டிசம்பர் 10-16 இதழில் வெளியானது)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button