அறிக்கைகள்தமிழகம்

மோடியின் பொய் மூட்டைகள்: தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மோடியின் பொய் மூட்டைகள்:
மொத்த வியாபாரம் தமிழ்நாட்டில் நடக்காது!

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து செல்வது வியப்பளிக்கிறது.

அரசு நிகழ்ச்சிக்காக வந்தாலும் பாஜகவின் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, மறந்தும் கூட உண்மை பேசக் கூடாது என்று உறுதி காட்டி வருவதை அவரது தேர்தல் பரப்புரை பேச்சுகள் வெளிப்படுத்தி வருகின்றன. நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அவரது பேச்சு பொய் முட்டைகள் மொத்த வியாபார விளம்பரமாக அமைந்துள்ளது.

கடந்த 2023 டிசம்பர் முதல் வாரத்திலும், மூன்றாவது வாரத்திலும்  தலைநகர் சென்னை உட்பட பத்து மாவட்டங்கள் கடுமையான இயற்கை பேரிடரை சந்தித்தது. இங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கும்  பெரும் சேதாரம் ஏற்பட்டது.

ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வான்வழி ஆய்வு செய்தார். நிவாரணப் பணிகள் நிறைவடையும் நேரத்தில் ஒன்றிய அரசின்  நிதியமைச்சர் தென் மாவட்டங்களில் கள நிலவரத்தை நேரில் கண்டறிந்தார்.
ஒன்றிய அரசின் உயர்மட்ட ஆய்வுக் குழுக்களும் பார்வையிட்டன. அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட ஆய்வுக் குழு மாநில அரசின் இயற்கை பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் பாராட்டி, உதவிக்கரம் தருவதாக உறுதி அளித்துச் சென்றன.

மாநில முதலமைச்சர், இயற்கை பேரிடர் பாதிப்புகளை விரிவாக சேகரித்து, அதன் விபரங்களை பட்டியலிட்டு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவித்து ரூ.37 ஆயிரத்து 917 கோடி நிவாவரண உதவி நிதி வழங்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். கடிதங்கள் எழுதி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால். ஒன்றிய அரசு வழக்கமாக வழங்கும்  பேரிடர் கால உதவி தவிர கூடுதலாக ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்டதை பிரதமர் மூடி மறைத்து, ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் பேரிடர் நிவாரணப் பணிகளை   போர்க்கால வேகத்துடன் மேற்கொண்டதுடன் மக்கள் மறுவாழ்வுக்கு ரொக்கப் பண உதவியும் செய்த தமிழ்நாடு அரசின் மீது பிரதம் மோடி  அபாண்டமாக பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் பாஜக அதிகாரத்தில் அமர்ந்தால், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, நாட்டின் குடிமக்களுக்கு வங்கியில் தலா ரூ. 15 லட்சம் வீதம்  வைப்பு நிதியாக செலுத்துவோம் என்று மேடைக்கு மேடை பாஜக தலைவர்கள்  முழங்கியதை மக்கள் மறந்து விடவில்லை. ஆட்சியில் அமர்ந்ததும் கள்ளப் பணத்தையும், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தையும் தடுக்க, புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000  பணத்தாள்கள் செல்வது என அறிவித்து, ரூ.2000 மதிப்பு பணத் தாளை அறிமுகப்படுத்தினர். இத்திட்டம் படுதோல்வி அடைந்ததை நாடறியும், பதுக்கல்காரர்கள் கை மேலோங்கியதால்  ரு.2000 மதிப்பு பணத்தாளும் கடந்த 2023 செப்டம்பர் 30 முதல் செல்லாக் காசு ஆகிவிட்டது.

விவசாயிகளை அழித்து விட்டு, விவசாய நிலங்களை, பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றித் தரும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் வணிக சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் ஓராண்டு காலம் நீடித்தது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க, சிதைக்க, சிதறடிக்க மோடி, யோகி, அரியானா அரசுகள் கூட்டுச் சதி செய்தன. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டன. ஆனாலும் விவசாயிகள் உறுதியுடன் போராடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தனர். போராடிய விவசாயிகளிடம் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் விவசாயிகள் போராட்டம் பேரெழுச்சியுடன் நடந்து வருகிறது.

இது பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி, இண்டியா கூட்டணியை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வலிமைப்படுத்தி வரும் திமுகழகத் தலைவர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் அவதூறு சேறுவாரி வீசியுள்ளார்.

பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button